நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு கோரி, காவல்துறையினர் யாழ் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த விவகாரத்தின் பின்னணியில் சில அரசியல் நிகழ்ச்சி திட்டங்கள் இருக்கலாமென்ற வலுவான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. திலீபனின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையின் பொறுப்பின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடனேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாமென்ற வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த வழக்கை யாழ் காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கவில்லை. வடக்கில்- குறிப்பாக யாழில்- நடந்த ஏனைய நினைவேந்தல்களில் . கொழும்பிலிருந்து வந்த விசேட அறிவுறுத்தலின் பெயரிலேயே காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
மாநகரசபை ஆணையாளரை நீதிமன்றில் முற்படுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. மாநகரசபை சட்டத்தரணி ராஜரட்ணம், அவரது அழைப்பில் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஆஜராகிறார்கள். பொதுமகன் ஒருவர் சார்பில் மணிவண்ணனும் வழக்கில் முன்னிலையாவார் என தெரிகிறது.
ஏற்கனவே திலீபன் நினைவுத்தூபி புனரமைப்பு அரச நிதிகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் நடந்துள்ளது. சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில், பிரதமர் செயலகத்தின் அனுமதியுடன் நடந்த புனரமைப்பு ஆவணங்கள் இருக்கின்ற நிலையில், தூபியை அரசே புனரமைக்க அனுமதித்துள்ள நிலையில், நினைவேந்தலை எப்படி தடுக்க முடியும்.
எனினும், பொதுஅமைதியென்ற அஸ்திரத்தை காவல்துறையினரை எடுக்க வைத்து, அதற்கு குந்தகம் விளைவிக்காமல் நினைவேந்தலை நடத்தி முடிப்பது யாழ் மாநகரசபை ஆணையாளர், முதல்வரின் பொறுப்பு என மாநகரசபை தரப்பு உத்தரவாதமளித்து, நினைவேந்தலை பொறுப்பேற்பதென்ற திசையில் வழக்கு நகர்த்தப்பட்டு, மாநகரசபையின் பொறுப்பிலேயே நினைவேந்தல் நடத்தப்படலாமென வழக்குடன் தொடர்புடைய வேறு சட்டவட்டாரங்கள் தகவல்களை கசிய விட்டுள்ளன .