நீண்டகாலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் சட்டச்சிக்கல்கள், வழக்குகளில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்ற தாமதங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்ததாக, சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்க் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் தாமத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த விடயத்தில் கூடிய அவதானம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சட்டமா அதிபர் நாட்டிலில்லாத காரணத்தால், அவரது விளக்கத்தைப் பிரதமரால் பெறமுடியவில்லையென்றும், சட்டமா அதிபர் நாளை நாடு திரும்பியதும், அவரின் அதிபரின் விளக்கத்தைக் கோரி, தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பான இறுதித் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கவுள்ளாரெனவும், சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் திருகோணமலை பயணத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனால், தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மேலும் தெரிவித்தார்.