ஆப்பிரிக்காவை மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோவை, பார்வையற்ற இரண்டு இந்தியர்கள், ஒரு இஸ்ரேலியர் உட்பட 13 பேர் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
டான்ஸானியாவில் உள்ளது ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ. இதில் ஏற, பார்வையற்ற இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு இஸ்ரேலியர் உட்பட 13 பேர் திட்டமிட்டனர். ‘சம்மிட்டிங் ஃபார் ஹோப்’ என்ற அமைப்பு இந்த மலையேறும் முயற்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியர்கள், இப்படி மற்ற நாட்டவர்களுடன் கூட்டணி வைத்து மலையேறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
செப்டம்பர் 8ம் தேதி துவங்கி 14ம் தேதி மலை ஏறி முடித்தனர். இதுகுறித்து பேசிய ‘சம்மிட்டிங் ஃபார் ஹோப்’ அமைப்பின் தலைவர் அனுஷா சுப்பிரமணியம், “5885 மீட்டர் உயரம் கொண்ட கிளிமஞ்சாரோ மலையை ஏறியது, எங்கள் அமைப்புக்கு மிகவும் மகிழ்ச்சையளிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் மீது இருக்கும் பார்வையை இது மாற்றுவதாக அமைந்தது. பார்வையற்றவர்களால் இதை செய்ய முடியும், செய்ய முடியாது என சமூகம் நினைக்கிறது. ஆனால், மலை ஏறும்போது ஏற்படும் உடல்நலக்குறைவு, சோர்வு என பல தடைகளை கடந்து அனைத்து பார்வையற்றவர்களும் வெற்றிகரமாக மலை ஏறி சாதனை படைத்துள்ளனர்” என்றார்.