தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்தும் வேறு வழிகளிலும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கழித்துவிட்ட நிலையிலும் கடந்த பதினைந்து இருபது வருடங்களாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தடவைகள் உண்ணாவிரதம் மற்றும் பல போராட்டங்களை நடாத்தியிருந்தனர். இச் சந்தர்ப்பங்களின் போது இவர்களுக்கு பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக விஷேட நீதிமன்றங்கள் அமைப்பது என்றும், புனர்வாழ்வளித்து விடுதலை செய்வது என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த விடயங்கள் ஒரு முறையாக இது வரை நடாத்தப்படவில்லை. இதேநேரம் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் பொது மன்னிப்பளிப்பது என்ற விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த விடயம் எங்கு சென்று முடிவடையுமோ என்பது தெரியாது.
தற்போது ஜக்கிய நாடுகள் சபைக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்கே இராணுவத்தினரை காப்பாற்ற திட்டமொன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதுவே தமிழ் மக்கள் அனைவரினதும் கோரிக்கையாகும். அதே நேரம் ஜக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது, அரசியல் கைதிகள் விவகாரத்தையும் போர்குற்றமிழைத்த இராணுவத்தினரது விவகாரத்தையும் சம்ந்தப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளதக்கல்ல.
எனவே இவ் அரசியல் கைதிகள் விடயத்தில் உடனடியாக ஓர் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்ற அமர்வினை பகிஷ்கரித்தோ அல்லது வரவு செலவு திட்டம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக அழுத்தம் பிரயோகிக்கதக்க வகையில் செயற்பட்டு இப் பிரச்சனைக்கு தீர்வு காண முயல வேண்டும் என்றார்.