யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம் பெற்ற நிகழ்வில், முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அங்கு கருத்து வெளியிட்டு பீல்ட் மார்ஸல்,
பிரபாகரனின் இரத்த உறவினர் தான் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை.
இருப்பினும், யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும்.
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று குறிப்பிட்ட அவர், சிவாஜிலிங்கம் பலமிக்க நபர் இல்லை. என்றும், அது பற்றி பேசுவது தேவையற்ற விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும் பங்கம் எனத் தெரிவித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றைப்பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.