இன்றைய தமிழ்ச் சமூகத்தளத்தில் ‘பாலியல்’ என்பது ஒரு தீண்டத்தகாத சொல். அதனால்தான் சில முக்கியமான தமிழ் அகராதிகளில் கூட (அபிதான சிந்தாமணி, நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி) இச்சொல் காணப்பெறவில்லை. ஆனால், இச்சொல் ஒரு தெளிவான பொருளுடையது. இருப்பினும், இது தீண்டத்தகாத, கெட்ட வார்த்தையாக மாறியது எப்போது? என்ற வினா ஆய்ந்து சிந்தித்தற்குரியது.
பாலியல் = பால் + இயல். இச்சொல் ஒவ்வொரு பாலுக்குமான (ஆண்பால், பெண்பால்) இயல்பைக் குறிக்கக் கூடியது என்று இதற்குப் பொருள் குறிக்கலாம். உயிரினங்களின் இயல்புகள் குறித்து நோக்கினால், அவற்றின் முக்கிய இயல்பாகக் கருதப்பெறுவது இனப்பெருக்கமாகும். இந்த இனப்பெருகத்திற்குப் பாலியலறிவு கட்டாயம் தேவை. இந்த அளவிற்கு முக்கியமான சொல்லைத் தீண்டத்தகாத சொல்லாக மாற்றியது நம் அறியாமையன்றி வேறென்ன?
வேட்டைச் சமூகத்தில் பாலியல் பெண்ணை மையமிட்டதாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருந்திருக்கிறது. குறிஞ்சித்திணையில் இருக்கின்ற ‘புணர்தல்’ எனும் ஒழுக்க வரையறையும் குறிஞ்சித்திணைப் பாடல்களில் வருகின்ற ‘புணர்ச்சி’ தொடர்பான பதிவுகளும் இக்கருத்தை மெய்ப்பிக்க வல்லனவாகும். பகற்குறி, இரவுக்குறி எனும் எத்தகைய குறியிடமாக இருந்தாலும் தலைவனின் இடப்பெயர்ச்சி (தலைவியைத் தேடிச் செல்லுதல்) முதன்மையானதாக இருந்திருக்கிறது. தலைவி தலைவனைத் தேடிச் சென்றதான எத்தகைய பதிவையும் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் காணமுடியவில்லை. மேலும், புணர்தல், புணர்ச்சி தொடர்பான இடங்களில் தலைவி, தோழி ஆகியோர் கூற்று நிகழ்த்துவதும் தலைவன் அல்ல குறிப்பிடும்போது தம் நெஞ்சிற்குள்ளோ அல்லது பாங்கனிடமோ புலம்புவதும் பெண்ணை மையமிட்ட பாலியல் சார்ந்த வேட்டைச் சமுக எச்சங்களாகக் கருதத்தக்கன. இத்தன்மை குறிஞ்சி, நெய்தல் பாடல்களில் மட்டும் மிகுதியாகக் காணப்பெறுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும் (குறிஞ்சி – விலங்கு வேட்டை என்றால் நெய்தல் – மீன்வேட்டை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்). சங்கப் பனுவல்களின் இப்பதிவுகள், பாலியல் தொடக்கத்தில் பெண்ணை மையமிட்டதாக இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாக அமைவனவாகும்.
சொத்துடைமையும், அதனை மையப்படுத்திய ஆண் தலைமையும், மனித சமூகத்தில் ஏமாற்று வேலைகளும் உருவானதோ? அன்றுதான் பாலியல் ஒரு கட்டுக்குள் வந்திருக்க வேண்டும். அதாவது, ஆணை மையமிட்டதாக மாறியிருக்க வேண்டும்.
“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
(தொல்.பொருள்.கற்பு.இளம்.4)
என்ற தொல்காப்பிய நூற்பாவை இந்தத் தன்மையில்தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆண் தலைமை உருவாகிய சூழலில், கட்டற்ற பாலியலின் இறுதிக்கட்டத்தில் பெண்ணை உடல்சார்ந்து ஏமாற்றும் ஏமாற்று வேலைகளும் இருந்துள்ளன என்பதை இது உணர்த்துகிறது. மேலும்,
“யாரு மில்லை, தானே கள்வன்;
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ?
தினைத்தா ளன்ன சிறுபசுங் காஅல
ஒழுகுநீ ராரல் பார்க்குங்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே” (குறுந்.25)
என்ற குறுந்தொகைப் பாடலும் இதைத்தான் வலியுறுத்துகிறது என்று குறிப்பிடத் தோன்றுகிறது. இப்பாடல் பாலியல் சார்ந்து ஏமாற்றப்பெற்ற ஒரு பெண்ணின் அழுகுரலாகவே தெரிகிறது.
முல்லைத்திணைப் பாடல்கள் இதற்கு நேர்மாறனவையாக அமைகின்றன. பொருள் காரணமாகப் பிரியும் தலைவன் வரும்வரைத் தலைவி ஆற்றியிருக்க வேண்டிய நிலையினதாகக் காணப்பெறுகின்றன. ‘அல்குல் அவ்வரி வாடத்’ தலைவி காத்திருக்கின்ற தன்மையைப் பழந்தமிழ்ப் பனுவல்கள் காட்டுகின்றன. “பெண் தன்னுடைய பாலியல் விருப்பத்தை அடக்கிக்கொண்டு, கணவனின் நலத்தைப் பேணி மென்மையான பண்புகளுடன் வாழ்வது கற்புடைய மகளிரின் இலக்கணமாகப் போதிக்கப்பட்டது” (2011:பக்.18,19). அதுதான் கற்புநிலை என்பதும் வற்புறுத்தப்பெற்றுள்ளது. குடும்பம் எனும் அமைப்பிற்கு ஆண் தலைமையும் சொத்துக்கள் ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய தன்மையும் உருப்பெற்ற பின்னர் இந்நிலை உருவாகியிருக்கின்றது.
இத்தகைய கற்புநிலை வளர்ச்சிக்கு மத்தியில்தான் பரத்தைமையும் உருவாகியுள்ளது. இங்குப் பெண்ணின் பாலியல் வரையறுக்கப்பெற்று ஆண்பாலியல் கட்டற்றதாக மாற்றப்பெற்றிருக்கிறது. இங்கும் பாலியல் ஆணை மையமிட்டதாகத்தான் திகழ்ந்திருக்கிறது. மனைவி, காமக்கிழத்தி, இற்பரத்தை, காதற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பல்வேறு பாலியல்சார் உறவுகள் ஆணைச் சுற்றி இருந்திருக்கின்றனவே அன்றிப் பெண்ணைச் சுற்றி இத்தகைய ஆண் உறவுகள் இருந்தமைக்கான பதிவுகள் ஏதும் காணப்பெறவில்லை. ஆணை இடித்துரைப்பதான பரத்தன் எனும் சொல்கூடச் சங்கப் பனுவல்களில் மிக அரிதாகவே [மாயப்பரத்தன் (அகம்.146), பரத்த (கலி.75)] காணப்பெறுகிறது.
ஆநிரைச் சமூக எச்சமாகக் கருதப்பெறுகின்ற முல்லைத்திணைப் பாடல்கள் பெண்ணுக்கான பாலியலைக் கட்டுப்படுத்த வேளாண்மைச் சமூக எச்சமான மருதநிலச் சமூகம் ஆணுக்கான பாலியலைக் கட்டற்றதாக ஆக்கியிருக்கின்றது என்பதனை மேற்கண்ட விளக்கங்கள் வழி அறியமுடிகின்றன. அதாவது, ‘பாலியில் => பெண்கட்டற்ற நிலை + பெண் மையம் => ஆண் தலைமை + பெண் கற்புநிலை => ஆண் கட்டற்றநிலை + ஆண் தலைமை’ என்று மாறியிருக்கிறது.
ஆண் தலைமையும் சொத்துடைமையும் பாலியலைப் பெண் மையத்திலிருந்து ஆண் மையத்திற்கு மாற்றியிருக்கிறதேயன்றிப் பாலியலைத் தவறானதாகவோ, முகம் சுளிக்கக் கூடியதாகவோ கருதவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. பாலியல் உறுப்புகளையும் அவை சார்ந்த சொல்லாடல்களையும் கூடத் தவறென்று கருதவில்லை. பெண்ணுக்கான கட்டுப்பாடுகளுடன் பாலியல், அதற்குரிய அறிவுத் தெளிவுடன் வழக்கில் இருந்திருக்கின்றது. ஆனால், தற்போது பாலியல் உறுப்புகளின் சொல்லாடல் கூடத் தவறென்று கருதும் நிலை உருவாகியிருக்கின்றது. பல்கலைக்கழக, கல்லூரிப் பாடத்திட்டங்களில் கலிங்கத்துப்பரணி – கடைத்திறப்பு நீங்கலாக, திருக்குறள் – காமத்துப்பால் நீங்கலாக (காமத்துப்பால் என்று கூடக் குறிப்பது இல்லை; இன்பத்துப்பால் என்றே குறிக்கின்றனர்) என்றெல்லாம் அமைக்கப்பெறுவதும் பாலியல் குறித்த புரிதல் தீண்டத்தகாததாகியதன் பின்விளைவே என்றுதான் கூறத் தோன்றுகிறது. இந்நிலையில் இச்சொல், இச்சொல்லுடன் சேர்ந்த பிற சொற்கள், அவற்றின் புரிதல், பண்டைத் தமிழர் வாழ்க்கையில் அவை இடம்பெற்றிருந்த திறம் ஆகியன கவனத்தில் கொள்ளத்தக்கனவாகவும் ஆய்வுப்பரப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருண்மையாகவும் உள்ளன என்பது இங்குக் குறிக்கத்தக்கதாகும். அந்தவகையில், இந்நூலை ஒரு முன்னோடி நூலாகப் பாராட்டி வரவேற்க வேண்டியது நம் கடமையாகும்.
சங்க இலக்கியத்தில் சமூக மாற்றங்களுக்கு மத்தியில் தவறாகக் கருதப்பெறாத பாலியல் பிற்காலத்தில் தவறாக, நினைக்கத்தகாததாக மாற்றம் பெற்றதன் காரணம் குறித்து ஆராயவேண்டிய தேவை உள்ளது. சங்க இலக்கியத்தில் காணப்பெறும் பாலியல் சார்ந்த சொல்லாடல்களையும் அதற்கடுத்த காலக்கட்டமான சங்கம் மருவியகால இலக்கியங்களில் காணப்பெறும் பாலியல் சார்ந்த சொல்லாடல்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன்வழி இதற்கான காரணத்தைக் கண்டறியலாம் என்று கூறத் தோன்றுகிறது.
சங்க இலக்கியத்தில் புணர்ச்சி, புணர்ச்சியுடன் தொடர்புடைய சொற்கள் 226 இடங்களில் காணப்பெறச் சங்கம் மருவிய கால இலக்கியங்களில் 41 இடங்களில் காணப்பெறுகின்றன. இது விழுக்காட்டு அளவில் 18.14% பயன்பாடு ஆகும். மேலும் அல்குல், அல்குலுடன் தொடர்புடைய சொற்கள் சங்க இலக்கியத்தில் 102 இடங்களிலும் முலை, முலையுடன் தொடர்புடைய சொற்கள் 181 இடங்களிலும் காணப்பெறுகின்றன. இதே சொற்களுக்கான பதிவுகள் சங்கம் மருவியகால இலக்கியங்களில் முறையே 12, 51 என்ற எண்ணிக்கையில் காணப்பெறுகின்றன. சங்க இலக்கியத்தோடு ஒப்பிடும் நிலையில் அல்குல், அல்குலுடன் தொடர்புடைய சங்கம் மருவியகால இலக்கியப் பயன்பாட்டு விழுக்காடு 11.76% ஆகவும் முலை, முலையுடன் தொடர்புடைய சொற்பயன்பாட்டு விழுக்காடு 28.17% ஆகவும் அமைகின்றன.
விழுக்காட்டு அளவில் தொடர்ந்து இரண்டு காலக் கட்டங்களின் பாலியல் குறித்த சொற்பயன்பாடுகள் மிகப்பெரிய அளவிற்கு வேறுபட்டிருக்கின்றன என்பதை அறியமுடிகிறது. மேற்கண்ட பதிவுகள்வழி மேலும் சொற்பயன்பாடுகள் மட்டுமின்றிப் பொருட்புரிதலிலும் மாறுபாடுகள் காணப்பெறுகின்றன.
“கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
எனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே” (குறுந்.27)
“முட்டு வேன்கொல், தாக்குவேன்கொல்;
ஓரேன் யானும்; ஓர்பெற்றி மேலிட்
டாஅ பொல்லெனக் கூவு வேன்கொல்;
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே” (குறுந்.28)
என்றெல்லாம் சிறப்பாகப் பாடப்பெற்ற பாலியல், புணர்ச்சி, பாலியலோடு தொடர்புடைய உறுப்புகளின் பெயர்கள் சங்கம் மருவிய காலத்தில் அவற்றின் சிறப்பை இழந்திருக்கின்றன.
“செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்துஅகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும் – இம்மூவர்
கைத்துஉண்ணார் கற்றறிந் தார்” (திரி.25)
“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று” (குறள்.402)
“ஏமாந்த போழ்தின் இனியார்போன்று, இன்னாராய்த்
தாம்ஆர்ந்த போதே தகர்க்கோடாம்; – மான்நோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரை
செம்நெறிச் சேர்தும்என் பார்” (நாலடி.378)
என்பன அதற்கான சில சான்றுகளாகும். மேலும், சங்கப் பனுவல்களில் காணப்பெறும் ‘புணர்ச்சி’ எனும் சொல்லும் பொருள் உணர்த்தலில் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுகின்றது.
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்” (குறள்.785)
“உணர உணரும் உணர்வுஉடை யாரைப்
புணரப் புணருமாம் இன்பம்; – புணரின்
தெரியத் தெரியும் தெரிவுஇலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்” (நாலடி.247)
என்னும் சான்றுகள் இதை உணர்த்தவல்லன. இதற்கான காரணத்தை ஆராய்ந்து நோக்கும்போது ‘மதங்களின் வளர்ச்சியே இம்மாற்றத்திற்கான காரணம்’ என்று குறிப்பிடத் தோன்றுகிறது.
நிறுவனமயப்பட்ட மதங்களின் எவ்வித ஊடாட்டங்களும் இல்லாத சங்க காலத்தில் இருந்த பாலியல் புரிதல் சங்கம் மருவிய காலத்தில் தேய்ந்துள்ளது. சங்கம் மருவிய காலத்தில் சமணம் செல்வாக்குடன் விளங்கியது. சமணர்தம் கொள்கைகளை,
“கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை
ஒல்லாமை, ஒண்பொருளை வரைதலோ டிவைபிறவும்
பொல்லாத புலைசுதேன்கள் இருளுண்ணா நிலைமையொடு
நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்”
(மேற்கோள் 2003:68)
என்ற திருக்கலம்பகப் பாடல் வெளிப்படுத்தும். இத்தகு கொள்கைகளில் திளைத்த சமணம் துறவை வலியுறுத்திப் ‘பெண் என்பவள் பேய், பெண்ணாசை பெருந்தவறு, தவத்திற்குக்கூடத் தகுதியற்றவள் பெண்’ என்பன போன்ற கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கியதால் பாலியல் தீண்டத்தகாததாக ஏன்? நினைக்கவும் தகாததாக மாறியிருக்கிறது என்று குறிப்பிடத் தோன்றுகிறது.
இதனால்தான், சமணத்தின் செல்வாக்கு மிகுதியாக இருந்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் காணலாகும். புணர்ச்சி, அல்குல், முலை போன்ற சொற்களும் பதிவுகளும் அவற்றின் இயல்பை மறுத்துக் கேவலப்படுத்தப்படுவதாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளன.
இவ்வாறாகத் துறவை வலியுறுத்தி வந்த சமணம்தான் தமிழரின் பாலியல் சொற்களையும் பாலியல் புரிதலையும் தீண்டத்தகாதவையாக ஆக்கியிருக் கின்றது. பின்னர் வளர்ந்த வைதீக சமயங்களும் தம்முடைய புனிதத்துவத்திற்கு மெருகேற்றச் சமணத்திலிருந்து இத்தன்மையைக் கடன்வாங்கிக் கையாண்டிருக்கின்றன. இந்தச் சூழல்தான் பாலியலும் பாலியல்சார் சொற்களும் சங்க காலத்தில் மேன்மையாகப் பதிவு செய்யப்பெற்றதற்கும் சங்கம் மருவிய காலம் தொடங்கி இதுவரை தவறாகப் புரிந்துகொள்ளப் பெறுவதற்கும் காரணங்களாகியிருக்கின்றன.
செவ்வியலின் இத்தகைய மேன்மைத் தன்மையைக் கொண்டு உருவாக்கப்பெற்றிருக்கும் இந்நூல் 7 எழுத்துரைகளைக் கொண்டு திகழ்கிறது. இவ் வெழுத்துரைகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் உணர்த்துகின்ற தொல்தமிழ்ச் சமூகப் பின்புலங்களோடு மேல்நாட்டுக் கருத்தியல், உரையாக்க காலச் செயல்பாட்டில், பிறமொழி இலக்கிய ஒப்பீட்டுக் கருத்தியல் எனும் நிலைகளில் விளங்குகின்றன. தமிழில் இத்தகையதொரு முயற்சி ஏற்படுவதென்பது இதுவே முதல்முறை என்பது இங்குக் குறிக்கத்தக்கது. அவ்வகையில் இது பாராட்டத்தக்க முயற்சியே ஆகும்.
துணைநின்றவை
* அறவேந்தன் இரா. (ஆய், பதி.), 2016, குறுந்தொகை, என்.சி.பி.எச்., சென்னை.
* கோபாலையர் தி.வே., அரணமுறுவல் ந. (பதி.), 2003, தொல்காப்பியம் – பொருளதிகாரம் – இளம்பூரணம் -1, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
* கெளமாரீஸ்வரி எஸ். (பதி.), 2009 (ஆ.ப), ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதானசிந்தாமணி, சிதைபதிப்பகம், சென்னை.
*… (பதி.), 2009 (4ஆம். பதி), நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை.
* சகதேவ முதலியார் சேவை, கண்ணுசாமிப் பிள்ளை காழி.சிவ. (பதி.), 2003 (ஒ.ப), கழகத் தமிழ்க்கையகராதி, கழக வெளியீடு, சென்னை.
* சிதம்பரனார் சாமி. (உரை), 2006, நாலடியார் மூலமும் உரையும், மல்லிகா, ஆலந்தூர், சென்னை.
* சுப்பிரமணியன் ச.வே. (பதி.), 2007, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
* தாமோதரம்பிள்ளை சி.வை. (பதி.), 1887, நல்லந்துவனார் கலித்தொகை, THE SCOTTISH PRESS, MADRAS.
* பசுபதி ம.வே. (பதி.), 2010, செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
* மாதையன் பெ. (பதி.), 2007, சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
* முருகன் ப. (உரை.), 2001 (எ.அ), திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை), என்.சி.பி.எச், சென்னை.
* முருகேசபாண்டியன் ந., 2011, மறுவாசிப்பில் மரபிலக்கியம் – சங்க இலக்கியம் முதல்பாரதிதாசன் வரை, நற்றிணை பதிப்பகம், சென்னை.
* முனீஸ்மூர்த்தி மு., 2015, உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, இராசகுணா பதிப்பகம், புழுதிவாக்கம், சென்னை.
* வேங்கடசாமி மயிலை சீனி., 2003, சமணமும் தமிழும், வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை.
* ஜெயதேவன் வ. (பதி.), 2010, பதினெண் கீழ்க்கணக்குச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
முனைவர் மா.பரமசிவன்
தமிழ் உதவிப்பேராசிரியர்
ஸ்ரீகிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லூரி
மேட்டமலை, சாத்தூர்.
9585641647
*******
இது காவ்யா பதிப்பக வெளியீட்டின் வழி 2017ஆம் ஆண்டு வெளிவந்த “தமிழ்ச் செவ்விலக்கிய மேன்மை (மகளிர் உடலியல் – பாலியல்சார் பதிவுகளை முன்வைத்து)” எனும் நூல் மதிப்பீட்டுரையின் வடிவம் ஆகும்.