பெருவீரன் என்று ஏற்றுப்போற்றக்கூடிய பெருமைக்கு சொந்தக்காரன் என்று உச்சரிக்க கூடிய ஒரு மனிதன் தியாகதீபம் திலீபன் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு அங்கத்தினன் என்ற வகுதிக்குள் அவனை அடக்கமுடியாது. காரணம் ஈழத்தமிழ் மக்கள் எனப்படும் தன் சமூகத்துக்காக, அந்த மக்கள் இந்த மண்ணில் அமைதியாக, நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக உடலுருக்கி உயிர்கொடுத்த பெருந்தகை. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் வாழவேண்டும், தனக்கு சொத்தும் பெருமையும் சேர்க்க வேண்டும், தன் சந்ததிக்கு பணம் சேர்த்து வைக்கவேண்டும், என்று அலைந்து அதற்காகவே தங்கள் வாழ்நாளை செலவழித்து, எக்காரியங்களையும் தயங்காது புரிந்து, சாவினை கண்டு அஞ்சி, நடுங்கி, அடுத்தவர்க்கு முகத்துதி பாடி, சுயநலத்துடன் வாழும் நாட்களில், போராடும் வலு இருந்தும், பொறுமையாக அமைதி வழியில் அடுத்தவர் வாழ உருகிய மனிதர் தியாகதீபம் திலீபன். அதிலும் உணவை ஒறுத்து, உடலை வருத்தி, உண்ணா நோன்பு நோற்று, உயிர் கொடுத்தல் என்பது சாதாரணமானது அல்ல.
உணவின்றி இவ்வுடல் வாழாது. மனித உடலுக்கு எப்போதும் உணவு தேவை. எங்களுக்கு பசி தோன்றின் நாம் உடலுக்கு உணவளிப்போம். அந்த உணவு எங்கள் உடலினை பராமரிக்கும். தமிழில் “உடலினை உறுதி செய்” என்ற ஒர் வாக்கியம் நடைமுறையில் உண்டு. காரணம் உறுதியற்ற உடல் எதையும் சாதிக்காது. நாம் உடலுக்கு உணவளிக்கத் தவறின் எங்கள் உடலின் உள்ளுறுப்புகள் சக்திக்காக போராடும். அதற்கான சக்தி ஏற்கனவே உடலில் சேமித்து வைக்கப்பட்ட சக்திபொருட்களில் இருந்து பெறப்படும். அந்த நிலையும் போய்விட்டால் உடலின் உள்ளுறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கும். அதாவது இறக்க ஆரம்பிக்கும். இது சாதாரண நிலையில்லை. உணவின்றி வாடியபோது, திலீபனின் உடல்கூட தனது உள்ளுறுப்புகளை இயக்க வேண்டி அதற்கான சக்திக்காக அவனை உணவுண்ண சொல்லியிருக்கும்.
“மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்”
என்று பசியின் கொடுமை உணர்ந்த ஒவையார் கூறுகின்றார். உடலின் பசி அவனை உணவு கேட்டு கெஞ்சியிருக்கும். உள்ளுறுப்புகள் அவனிடம் சக்தி வேண்டி வருத்தியிருக்கும். காரணம் இந்த நிலை எல்லா மனிதர்க்குமே பொதுவானது. திலீபனும் சொல்கின்றான் “என்கண்கள் பார்வை இழந்து வருகின்றன, நான் சாவதற்கு கவலைகொள்ளவில்லை. என்மக்கள் விடுதலைபெற்று வாழ்வதை ஏற்கனவே வானத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்ற அறுநூற்றைம்பது போராளிகளுடன் இணைந்து பார்ப்பேன்” என்று. சாவடைவதை உறுதிப்படுத்தி போராட்டத்தில் குதித்தவன்.
உடல் வருத்தம் மறந்து, மக்களின் தேவைக்கு முதன்மை கொடுத்து மற்றவை எல்லாம் விடுத்து இலக்கு மட்டும் நோக்காக எடுத்து நல்லூர் வீதியில் திலீபன் உட்கார்ந்திருந்தான். உணவை நிறுத்த, அவனின் உடலின் இருப்பு உணவு அவனுக்கு சக்தியை வழங்கியிருக்கும். அதுவும் முடிவடைய உடலுக்கு சக்தி எதுவும் கிடத்திருக்காத பட்சத்தில் உடல் பாகங்கள் செயலிழக்க ஆரம்பித்திருக்கும். உண்மையில் அப்படியான ஒரு நிலையில் உடல் தரும் வருத்தம் மிகவும் கடுமையானதாக இருக்கும். உடலின் ஒவ்வொரு அங்கமும் வெறுமனே தானாக செயலிழக்காது. அவை உடலை வருத்தி, இயன்றளவில் தங்களை பாதுகாக்க முயற்சித்து, முடியாநிலை வந்தபின்தான் செயலிழக்கும். இந்த வேதனை சாதாரணமானது அல்ல. இதனை அனுபவித்தும், தனது இலக்கு மாறாமல் உறுதியுடன் அமர்ந்திருந்து உயிர் கொடுத்தான் திலீபன். கவிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் திலீபனின் உண்ணாநோன்பில் பங்கேற்றது மட்டுமல்ல அங்கு நடந்தவைகளையும் எழுத்து மூலம் தனது புத்தகத்தில் தெளிவு படுத்தியிருப்பார். தன்னை விரும்பிய, தன்னை எதிர்த்த என்று வேறுபாடின்றி எல்லாமக்களுக்கும் நன்மை வேண்டி
ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினாயி ரத்தொருவர் – பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென்று.
என்கின்ற ஒவ்வையின் பாடலை உண்மையாக்கி கோடியில் ஒருவன் வள்ளல் என்று உயிர் கொடுத்த பெரியோன் தியாக தீபம் திலீபன்.
அமைதி வழிக்கே நாம் ஆதரவு. ஆயுதம் என்றால் முற்றான எதிர்ப்பு என்று உரக்க கூவும் மனிதர்களும் திலீபன் தொடர்பாக என்ன சொல்கின்றார்கள். உணவொறுப்பின் மூலம் உயிர்க்கொடை செய்தாலும் வீரத்தின் உச்சம் பெற்ற சுத்தமான வீரன் திலீபன். காரணம் அவன் இளமையில் நன்கு படிப்பவனாக இருந்திருக்கின்றான். விளையாட்டுகள் குறிப்பாக சதுரங்கவிளையாட்டில் திறமைகாட்டியுள்ளான். பயிற்சிபெற்ற, போராட்ட வலுமிக்க, சிறந்த போராளியாக விளங்கியுள்ளான். பெண்களை மதிக்கும் நல்ல ஆண்மகனாக இருந்துள்ளான். மக்களிடம் அன்புள்ளவனாக மக்களின் அன்பை பெற்றவனாக இருந்துள்ளான். நல்ல நிர்வாகியாக செயற்பட்டுள்ளான். இவ்வளவு திறமைகள், பண்புகள் கொண்ட ஒருவன் அமைதி வழியில் போராடியுள்ளான். எனவேதான் வீரத்தின் உச்சத்தில் இருப்பவன் அமைதியை வேண்டினால் அதுதான் உண்மையான அமைதிப்போராட்டம் அதுமட்டுமல்ல வீரத்தின் உச்சநிலையும் கூட. அந்தவகையில் பார்த்தால் திலீபனைபோல உண்மையான வீரமுள்ள அமைதிப்போராளியை காணமுடியாது.
ஒருமுறை சாவகச்சேரி மட்டுவில் என்ற இடத்திற்கு நான் சென்றிருந்தேன். காலம் எனக்கு சரியாக ஞாபகமில்லை. அது திலீபனின் நினைவுகாலம். அதனைகொண்டாட பல தடைகளும் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் என்னுடன் பேசினார். அவர் சொல்லிய செய்தி திலீபன் தியாகியாகிய பின் அவரின் நினைவுநாள் தொடர்பானது. என்னுடன் பேசியவர் எந்த இயக்கமும் சார்ந்தவர் அல்ல. நடுநிலையாளர் என்று தன்னை நினைப்பவர். ஆனாலும் திலீபன் மீது மட்டும் தனித்த பாசம் வைத்திருந்தார். காரணம் சொன்னார் நாம் ஒருவேளை அல்லது ஒருநாள் உணவு இல்லை எனில். கண்மங்கி, காதடைத்து, வலுக்குறைந்து, வயிறு நொந்து எவ்வளவு சிரமமடைகின்றோம். ஆனால் எதையும் சிந்திக்காமல் தமிழ் மக்களுக்காக உணவே உண்ணாமல் உயிர் கொடுத்தது அவர் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது.
இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலம். எனவே திலீபனின் நினைவு நாட்களை யாராலும் கொண்டாடமுடியவில்லை. என்ன செய்யலாம்?. எப்படி செய்யலாம்?. என்று யோசித்து இரவோடு இரவாக சென்று மட்டுவில் – நுணாவில் சந்தியில், வீதி ஓரமாக ஒரு கதிரையை வைத்து அதில் திலீபனின் படத்தையும் வைத்து மாலையும் போட்டுவிட்டு சென்றுவிட்டார். இராணுவம் காலையில் இக்காட்சியை கண்டுவிட்டார்கள். திலீபனின் படம் வைக்கப்பட்டிருக்கிறது. முகாம் பொறுப்பதிகாரி இச்செய்தியை அறிந்துவிட்டான். விசாரணையை ஆரம்பித்துவிட்டான். யார் இந்த படம் வைத்தது?. இவர் தனியே சென்று செய்தமையால் யாருக்கும் இது தெரியவில்லை. யார் வைத்தார்கள் என்பதை அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. கடைசியாக அவன் சொல்லிய செய்தி யார் படம் வைத்தார்கள் என்று கண்டுபிடிப்பதில்லை எனது நோக்கம். திலீபன் அமைதி வழியில் போராடிய ஒரு போராளி. இப்படி ஒரு கதிரையில் படம் வைத்திருப்பது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. எனவே அதனை சிறப்பாக அமைத்து வைக்கவேண்டும் அதற்காகத்தான் விசாரிக்கின்றேன் என்பதுதான். முதலில் நான் தனியாக வைத்து சென்றேன் பின்பு எல்லோரும் சேர்ந்து கொட்டகை அமைத்து படம் வைத்து சிறப்பாக வணக்கம் செய்தார்கள் என்று சொன்னார்.. இதை அவர் எனக்கு சொல்லியகாரணம் இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடிய திலீபனை இந்திய இராணுவமே மதித்தது ஆனால் பல தமிழர்களும் இலங்கை இராணுவமும் ஏன் வெறுக்கின்றது என்று தெரியவில்லை என்பதற்காகத்தான்.
விடுதலையை நேசித்த போராளிகள் மாவீரர் ஆகியபின் அவர்கள் ஒரு தனித்த இயக்கத்தின் சொந்தக்காரர்கள் அல்ல. அவர்கள் எந்த மக்களின் விடுதலைக்காக போராடினார்களோ அந்த மக்களின் சொத்து என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தையில் கொள்ளவேண்டும். அதிலும் போராட்ட தளத்திலிருந்து வெளியே வந்து அமைதி வழியில் மக்களின் முன்னே பகிரங்கமாக உணவொறுப்பில் ஈடுபட்ட போதே திலீபன் விடுதலைப்புலி என்ற கட்டுக்கு வெளியே வந்து தமிழ் மக்களின் சொத்து என்று ஆகிவிட்டான். எனவே தமிழர்கள் எல்லோரும் நினைக்க வேண்டிய ஒருவராகவும் எங்கள் சந்ததிக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒருவராகவும் திலீபன் இருக்கின்றார்.
தமிழில் ஓர் பழமொழி “ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பது. எனவே இந்த உலகினை பொறுத்தவரை வெற்றிகரமான நகர்விற்கு மக்கள் கூட்டம் பிரிந்து இருக்கவேண்டும். அது அரசியல் வியாபாரம் என்று எல்லாவற்றிற்கும் பொருந்தும். எனவே தியாகிகளின் நினைவுகளால் வருகின்ற நிகழ்வில் ஒரு கூடி இனி உயிர்களை தொலைக்காமல் ஒன்றுபட்டு விடுதலைக்கு உழைக்க மக்கள் முடிவெடுக்கவேண்டும். தியாகிகள் ஆசியுடன் விடுதலை பெறவேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.
– பரமபுத்திரன்.