நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி பகுதி யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா உள்ளார். அவர் தனது பொறுப்பில் இருந்து கடைசியாக அளிக்கும் முக்கிய தீர்ப்பு இதுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த 1994ல் அயோத்தி விவகாரம் குறித்து முக்கிய உத்தரவு வெளியானது. அதில் இஸ்லாமியர்கள் தொழுகையை எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதை குறிப்பிட்டு பாபர் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் உத்தரப்பிரதேச அரசு விரும்பினால் பாபர் மசூதி இடத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு நியாயமானது அல்ல என்று கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் அயோத்தி நிலத்தை 3 பிரிவுகளாக பிரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் மூலம் மறுஆய்வு செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.