அமெரிக்காவில் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் 5 ஆண்டுகளாக உணர்வற்று நடக்க முடியாமல் இருந்த நபரின் உடலில் செயற்கைக் கருவி பொருத்தி நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு 29 வயதான ஜெர்டு சின்னாக் என்பவருக்கு பனிச்சறுக்கு விளையாட்டின்போது விபத்தி ஏற்பட்டது. இதில் அவரது முதுகுத் தண்டுவடம் கடுமையாக அடிபட்டு, மூளைக்குச் செல்லும் நரம்புகள் செயலிழந்தது. இதனால் இடுப்பிற்குக் கீழ் அவருக்குப் எதுவுமே உணர முடியவில்லை. இந்த விபத்திற்கு பிறகு நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையானார். அவருக்கு மின்னசோட்டா (Minnesota) மாகாணத்தில் உள்ள மேயோ மருத்துவமனையில் நரம்பியல் வல்லுநர்கள் சிகிச்சையளித்து வந்தனர். மின்னணு செயற்கை கருவி ஒன்றை பாதிக்கப்பட்ட தண்டு வடத்தில் பொருத்தி செயலிழந்த நரம்பை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த கருவி மின்சாரத்தால் இயங்கும் ஆற்றல் கொண்டது. இதையடுத்து முன்பக்கத்தில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாக்கரின் உதவியுடன் அந்த இளைஞர் தற்போது நடக்கிறார். முதுகுத் தண்டுக் காயத்தால் அவதியுறுவோருக்கு அந்தக் கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கருதப்படுகிறது.