இலங்கையில் உள்ள தமிழர் பிரதேசங்களில் வன்முறை சம்பவங்கள், ராணுவ குவிப்பு நீடித்து வருவதாக தமிழர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழலில், அங்கு போர் பதற்றம் முடிவுற்றது என தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் நாடு திரும்ப ஊக்குவிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த செயற்பாடு எந்தளவிற்கு பொருத்தப்பாடான ஒரு செயற்பாடாக அமையும்? போர் முடிந்த பிறகும் அங்கு தமக்கு உயிராபத்து இருப்பதாக கூறி இன்று வரையிலும் கடல் வழியாகவோ, சட்டப்படியான விமான போக்குவரத்தினுடாகவோ தமிழகத்திற்குள் நுழையும் ஈழத்தமிழர்கள் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டுதான் உள்ளனர்.
இவ்வாறு போர் காலங்களிலோ அல்லது போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் அங்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களினாலோ தமிழகத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழ தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கூறுகையில்,”உயிருக்கு தஞ்சம் தேடி நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அந்நாட்டில் நிலவும் பாதுகாப்பின்மையின் மறுக்க முடியாத சாட்சியாக இருக்கிறார்கள். எனவே, அவர்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைப்பதன் மூலம் சர்வதேச அரங்கில் தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்துக் கொள்ள முடியும் என இலங்கை அரசு கருதுகின்றனர். இதற்கு மிக அண்மைய எடுத்துக்காட்டு, நவம்பர் 23 அன்று ரோஹிங்கியா ஏதிலிகளை மீளப் பெறுவதற்காக மியான்மர் – வங்கதேசம் இடையே ஏற்பட்ட உடன்பாடாகும். கடந்த ஆகஸ்ட்டில் இருந்து சுமார் 5 இலட்சம் ரோஹிங்கியா மக்கள் மியான்மரில் உள்ள ராக்கைன் மாகாணத்தில் இருந்து வெளியேறி பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர். அடுத்த இரண்டு மாதத்தில் அவர்களை மீண்டும் மியான்மருக்கே அனுப்பும் நோக்கில் ஏற்பட்ட உடன்பாடு இது. ராக்கைன் மாகாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட பெளத்தப் பேரினவாத சக்திகள் மீது எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன? ரோஹிங்கியா மக்களுக்கு குடியுரிமை வழங்குமா மியான்மர்? இப்படி வருபவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறதா மியான்மர்? ஆகிய கேள்விகளை பலரும் எழுப்பிக் கொண்டுள்ளனர். இன்னொருபுறம் 2012 இல் இருந்து மியான்மரி அரசு சுமார் 1,40,000 ரோஹிங்கியா மக்களை உள்நாட்டு அகதி முகாம்களில் தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சொந்த இடத்தில் குடியமர்த்தும் வேலையைச் செய்யாமல் இன்று வரை முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனி திரும்பி வருபவர்களுக்கு அத்தகைய முகாம்களை உருவாக்கப் போகிறது மியான்மர் அரசு என இப்போது மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் அமைதி திரும்பியது என்றும் ’நல்லாட்சி’ அரசாங்கம் என்றெல்லாம் சொல்லி தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் ஏதிலிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதை மேற்படி மியான்மர்- வங்கதேசம் எடுத்துக் காட்டில் இருந்து புரிந்து கொள்ளலாம். தமிழீழப் பகுதியில் இன்றளவும் ராணுவம் குடி கொண்டிருக்கிறது. ராணுவச் சிறைக்குள் தான் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களை திரும்பிப் போகச் சொல்லுதல் இலங்கயில் நல்லாட்சி நிலவுகிறது என்றும் அமைதி நிலவுகின்றது என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். அரசு செய்துள்ள இனக் கொலைக் குற்றங்கள் மீதான விசாரனையை மேலும் சில காலத்திற்கு தள்ளிப் போடுவதை இலக்காகக் கொண்டே இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை அரசோ அதன் இராணுவமோ தங்கத் தட்டில் வைத்து தமிழர்களுடைய காணிகளைத் திருப்பிப் தருவதற்கு தயாராய் இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் நாடு திரும்புவதில் பொருளுண்டு” என்கிறார்.
ஆனால் ஈழகதிகள் தமிழகத்திலேயே தங்கி விடுவதால் அவர்களுடைய சொந்த நிலங்கள் அங்கு அரசுடமையாக்கப்பட்டு அதில் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்படுவர் என பல அரசியல் ஆய்வாளர்களினால் எச்சரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. 100க்கும் மேற்றபட்ட ஈழ அகதிகள் முகாம்களில், ஈழத்தைப் போன்றே போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் வல்லுறவு ,கொலைகள் என சமூகவிரோத குற்றங்களில் நீள்கின்றது அவர்களின் துயரங்கள்.
-தொடரும்-