வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை பெரும்பான்மையின மக்கள் முன்னெடுக்கின்றனர். சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிவனொளிபாத மலை என்ற பெயரை புத்த பாதம் என மாற்றப்பட்டுள்ளது. அதைப்போலவே திருகோணமலை கன்னியா வெந்நீருற்றிலும் பெயர் பலகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் வரலாற்றுப் புத்தங்களில் ‘ன்’ விகுதி எழுத்துக்கள் எல்லாம் நீக்கப்பட்டு அனைத்தும் சிங்களப் பெயர்கள் ஆக்கப்பட்டுள்ளதாக சில சக பள்ளி ஆசிரியர்கள் கூறினார்கள். சில காலங்களுக்கு முன்னர் இருந்த பண்டார வன்னியன் உள்ளிட்ட தமிழ் மன்னா்களின் வரலாறுகளும் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இலங்கையை நாற்பதாண்டு காலம் ஆட்சி செய்த எல்லாள மன்னனின் முடிவில் உள்ள ‘ன்’ விகுதியும் நீக்கப்பட்டுள்ளதுடன் அம் மன்னனின் நாற்பது ஆண்டு ஆட்சிகூட மிகவும் சுருக்கமாகவே தரப்படுகிறது. எவ்வாறு நிலத்தில் இருந்து அழிக்கப்படுகிறோமோ அவ்வாறே வரலாற்றில் இருந்தும் ஈழத் தமிழர்கள் துடைக்கப்படுகிறார்கள்.
அதைப்போலவே மகாவலி என்ற அபிவிருத்தி திட்டத்தின் பெயராலும் பல ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் தமிழர்களின் நிலத்தில் குடியேற்றப்பட்டனர். கிராமம் கிராமமாக தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டு பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தமிழ் மக்களின் தொன்மங்கள் அழிக்கப்பட்டு சிங்கள பவுத்த தொன்மங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அபிவிருத்தியின்பெயரால் தமிழர்களின் நிலங்களை அபகரித்து, அங்குள்ள அடையாளங்களை மாற்றி, அந்த நிலத்தின் வரலாற்றே மாற்றப்பட்டுள்ளது. இதுவே ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையின மக்களால் காலம் காலமாக அனுபவிக்கும் ஒடுக்குமுறையும் அவர்களின் ஆக்கிரமிப்பும்.
எங்கள் முகங்களின் முகவரிகள் மாற்றப்படுவதே எல்லாவற்றினதும் ஒரே றோக்கமாக இருக்கிறது. அரசு, இராணுவம், பெரும்பான்மையின புத்திஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள் என அனைத்து மட்டங்களிலும் இந்த பாரபட்ச அணுகுமுறை மிக வேகமாகவும் திட்டமிட்டும் முன்னெடுக்கப்படுகின்றது. தென்னிலங்கையில் உள்ள பேரினவாதிகள்தான் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் அவர்களை ஒடுக்கும் மனோபாவத்தில் இருக்கிறார்கள் என கருதுகிறோம். அவர்களுக்கும் அப்பால் நுட்பமாக அழித்தொழிக்க முற்போக்கு வேடம் இடுபவர்கள், நல்லாட்சி வேடமிடுபவர்கள், அறிவுஜீவிகள் வேடமிடுபவர்கள் எனபல் பலர் உண்டு. அவர்களும் பேரினவாதிகளே.
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ நினைவுத் தூபிகள் அகற்றப்படாது என்று இலங்கை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவாண் விஜயவர்த்தன கூறுகிறார். தமிழ் மக்களுக்கு எதிரான போரில் அவர்களை வெற்றி கொண்டதற்காக அமைத்த வெற்றி நினைவுத் தூபிகளை அமைப்பதன் மூலம் எதனை நீங்கள் சொல்ல வருகிறீர்கள்? தமிழ் மக்களுக்கு போரை மீள மீள நினைவுபடுத்தும் அந்த தூபிகளை அமைத்துக் கொண்டு எப்படி நல்லிணக்கம் பேச இயலும்? அவை தமிழ் மக்களை இன அழிப்புப் போரை நினைவுபடுத்தும், அவர்களை அச்சுறுத்தும் கருவிகளாக அல்லவா உள்ளன. தமிழர்களின் மனங்களின் போர் முள்ளாய் குத்தும் ஊசிகள் அவை.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கு கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியபோது அங்கிருந்த அனைத்து தொன்மங்களையும் அடையாளங்களையும் அழித்தது. பாடசாலைகள், நூலகங்கள், ஆலயங்கள், வீடுகளும், தொன்மப் பொருட்கள், பொது இடங்கள், நினைவிடங்கள், சாலைகள், வணிக நிலையங்கள், நகரங்கள் யாவும் மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டது. அந்த அடையாளங்களை அழிப்பதன் மூலம் தமிழர் பூர்வீகத்தை அழிக்கவேண்டும் என்பதில் ராஜபக்ச அரசு தெளிவாக இருந்தது. இன அழிப்புப் போரில் லட்சம் உயிர்களுடன் தமிழர்கள் ஏராளமான நினைவுச் சின்னங்களையும் தொன்மங்களையும் இழந்தார்கள்.
அவ்வாறு எம் மண்ணை அழித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், தென்னிலங்கையில் இருந்து வரும் மக்களுக்கு, தமிழர்களை தோற்கடித்த, பேர் வெறியையும் பேரினவாதத்தையும் ஊட்டும் நோக்கில் அமையக்கப்பட்டவையே இந்த போர் வெறிச் சின்னங்கள். முல்லைத்தீவு நகரம், கொக்காவில் எனப் பலடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி டிப்போ சந்தியில் தமிழர்களை தோற்கடித்தமையை காட்டும் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதுமாத்தளன் மற்றும் ஆனையிறவிலும் இத்தகைய தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போர் குணத்தில் இன்றைய அரசு ராஜபக்ச அரசினைப் பின்பற்றுகிறதா?
போரை மறக்க வேண்டுமெனில், அந்த நினைவுத் தூாபிகள் அகற்றப்படவேண்டும். அவை தமிழர்களின் பிரதேசங்களுடன் எந்த விதத்திலும் தொடர்பற்றவை. ஒரு தமிழரும் ஒருநாள்கூட அந்த தூபிகளுக்குள் நுழைந்ததில்லை. அவற்றை காணும்போதெல்லாம் குண்டுகளும் இராணுவத்தின் துப்பாக்கிகளும் எறிகணைகளும் குருதியும் பிணங்களும்தான் நினைவுக்கு வரும். அதற்காகத்தான் அவை அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நின்று சிங்கள மக்கள் புதினம் பார்க்கும்போது, சினமும் எரிச்சலுமே ஏற்படும். இவைதான் போர் வெறிச் சிலைகள் ஏற்படுத்தும் நல்லிணக்கமா? இவைகள் ஆக்கிரமிப்பின் இன அழிப்பின் எச்சிரிக்கை அடையாளங்களே.
விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக கூறுகிறது அரசு. அவ்வாறெனில் அந்த சின்னங்கள் எதற்காக? யாருக்காா? அவை தமிழ் மக்களை வரலாறு முழுவதும் அச்சுறுத்துவதற்காகவா? இவற்றை அகற்றினால் புலிகள் மீள உருவாகுவார்கள் என்ற தொனியில் ருவான் விஜயவர்த்தன கூறுவது மிக முட்டாள் தனமானது. ஒன்றை மாத்திரம் உறுதியாக சொல்ல முடியும். ஈழத் தமிழ் மக்களை இலங்கை அரசும் அதன் படைகளும் எப்படி இன அழிப்பு செய்தவை என்பதை இந்த நினைவுத் தூபிகளும் எதிர்கால ஈழத் தலைமுறைகளுக்கு எடுத்துரைக்கும். இவற்றை அகற்றுவதன் மூலம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள். இவைகளை அகற்றாது விடுவதன் மூலம் இவைகளே நாளை தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டக் கூடும். அதற்கே இலங்கை அரசுகள் தூபமிடுகின்றன.
-குளோபல் தமிழ் செய்திகள்