நல்லாட்சி என கூறப்பட்டு வரும் மைத்திரி, ரணிலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியிலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஊடகவியலாளர்களை அடக்கும், அச்சுறுத்தும் பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் முகமாக இன்றும் ஒரு சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.,
IBC தமிழ் ஊடக வலையமைப்பின் ஒரு அங்கமான ஐபிசி தமிழ் தொலைக்காட்ச்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும், குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பேராதரவைப் பெற்ற “வணக்கம் தாய்நாடு” எனும் நிகழ்ச்சியின் குழுவினர் முல்லைத்தீவு தண்ணீர் முறிப்பு பகுதியில் படப்பிடிப்பிற்காக இன்று காலை சென்றுள்ளனர்.
அப்போது தண்ணீர் முறிப்பு பிரதேசத்தில் உள்ள குளக்கட்டு பகுதியில் குறித்த குழுவினரை இடைமறித்த ஸ்ரீலங்கா அரசபடையினர் வாகன இலக்கம் மற்றும் பயணிப்போர் விபரங்களையும் பதிந்து அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து குளக்கட்டின் கீழ் உள்ள புராதன செங்கல்லாலான விநாயகர் ஆலயத்தினை படம்பிடிக்கையில் அப்பகுதியிலிருந்த ஸ்ரீலங்கா அரச படையினர் இங்கு எதுவும் செய்ய முடியாதென கூறி தடுத்துள்ளனர். அப்போது ஊடகம் சார் நிகழ்ச்சி என அக்குழுவினர் விளக்கி கூறி, பின்னர் அடையாள அட்டைகளை காண்பித்த போது அச்சுறுத்தியதோடு இது தம் தேசம் எனவும் முரண்பட்டுக் கொண்டனர்.
அப்போது சிவில் உடையிலும் அப்பகுதியில் இருந்த சில ஸ்ரீலங்கா அரசபடையினரும் வந்தனர், அப்போது குறித்த நிகழ்ச்சியின் குழுவினர் சிவில் உடையில் நிற்பவர்களுக்கு அடையாள அட்டையை காண்பிக்க முடியாதென்ற போது, காவலரணில் இருந்த மேலதிக சிவில் உடையிலிருந்தவர்கள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
இருப்பினும் தடைகளை தாண்டி வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அப்பகுதியில் நடந்ததாக குறித்த நிகழ்ச்சியின் குழுவினர் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களின் ஆட்ச்சியில் ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களுகான சுதந்திரம் முழுமையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மார்தட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.