நடப்பு அரசியல் கூத்துகளை வைத்து ஸ்ஃபூப் படம் எடுக்கலாம். இல்லையென்றால் அரசியல் மர்மங்களை வைத்து த்ரில்லர் படம் எடுக்கலாம். ஆனந்த் ஷங்கரின் ‘நோட்டா’ இதில் இரண்டாவது வகை! விஜய் தேவரகொண்டாவின் அறிமுகப் படம், பரபரப்பான ட்ரெய்லர் என நல்ல ஓபனிங் இருந்தது படத்திற்கு… முடிவு எப்படி இருக்கிறது?
தமிழக முதல்வரான நாசர் மேல் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. தீர்ப்பு வரும்வரை முதல்வர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு! அதனால் பப், பார்ட்டி, பாரீன் என சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்வராக்குகிறார். அதுநாள் வரை அரசியல் வாடையே படாத விஜய்யின் உலகம் ஒரே நாளில் தலைகீழாக மாறிப்போகிறது. அவரின் அரசியல் அறியாமையை எதிர்க்கட்சி பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறது. இதற்கு நடுவே ஒரு கொலை முயற்சியும் நடக்கிறது. அது யாருடைய வேலை? முதல்வராக விஜய் தேவரகொண்டா ஸ்கோர் செய்கிறாரா இல்லையா என்பது மீதிக்கதை.
போதைக்கண்களோடு சுற்றித் திரியும் விடலைப் பையனாக விஜய் தேவரகொண்டா. இந்த கேரக்டர் டிஸ்க்ரிப்ஷனுக்கு அவரை விட்டால் தென்னிந்திய சினிமாவில் இப்போது யார் பொருந்துவார்கள்? சட்டென எல்லாம் மாறிப்போக, ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்துத் தட்டுத் தடுமாறி வித்தை கற்றுக்கொள்ளும் இரண்டாம் பாதி ரவுடி சி.எம் ரோலுக்கும் பக்கா பொருத்தம். முதல் படமே பொலிடிக்கல் த்ரில்லர். அதற்கு முடிந்தவரை நியாயம் செய்திருக்கிறார் விஜய்.
`கலங்க வைத்துவிட்டீர்கள்’ – மாரி செல்வராஜை நெகிழ்ந்து பாராட்டிய சிவகுமார்
“களத்துலதான் இருக்கேன் அண்ணே’’ – ஊழல் விவகாரத்தில் வேலுமணிக்கு ஆதாரத்தோடு பதிலளித்த உதயநிதி..!
கோவில்பட்டியில் சபரிமலை தேவசம் போர்டு, கேரள மாநில அரசைக் கண்டித்து நூதன போராட்டம்!
முதல் காட்சியில் பரபரப்பாக அறிமுகமாகிறார் மெஹ்ரீன் பிர்ஷாதா. சரி ஏதோ செய்யப்போகிறார் என எதிர்பார்த்தால் வழக்கமான ஹீரோயினாகி ஏமாற்றுகிறார். ஆறுதலளிப்பது எதிர்க்கட்சி தலைமையாக வரும் சஞ்சனாவின் கதாபாத்திரம்தான். துடிப்பான இளம் பேச்சாளராக கவனம் ஈர்க்கிறார். நாசர், சத்யராஜ், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களின் வேற லெவல் நடிப்பை கதை டிமாண்ட் செய்யாததால் அவர்களும் கொடுத்ததை செய்துவிட்டுப் போகிறார்கள்.
சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை ஒருசில இடங்களில் மட்டும் லைக் போட வைக்கிறது. பாடல்களுக்கு படத்தில் வேலையில்லை. ரவி கே.சந்திரனின் வாரிசு சந்தான கிருஷ்ணன் தான் ஒளிப்பதிவு. அப்பாவின் பெயரை காப்பாற்றி கரை சேர்த்துவிட்டார். இரண்டாம் பாதியில் எடிட்டர் ரேமண்டின் கத்திரி இன்னும் கொஞ்சம் விளையாடியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. படத்தின் முதுகெலும்பு மூர்த்தியின் கலை இயக்கம்! கவர்னர் பங்களா, தலைமைச் செயலகம், முதல்வர் வீடு என ஏகப்பட்ட இடங்களை தத்ரூபமாக கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்.
முதல் நாள் பார்ட்டி பாய், அடுத்த நாளே முதல்வர் – ஒன்லைன் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதெப்படிப்பா இப்படியெல்லாம் நடக்கும் என நமக்குத் தோன்றும் கேள்விகளுக்கும் விஜய் தேவரகொண்டா மூலமாகவே பதில் சொல்லியிருப்பது புத்திசாலித்தனம். முதல்பாதி முழுக்க பரபரப்பாக நகர்கிறது திரைக்கதை. ‘அடுத்தென்ன நடக்கும்?’ என சீட் நுனியிலேயே உட்காரவைத்திருக்கிறார்கள். போக, படம் முழுக்க ரிசார்ட் டீலீங், பனாமா கறுப்புப் பணம், தற்காலிக முதல்வர் கூத்துகள், ஆஸ்பத்திரி சி.சி.டி.வி என நடப்பு அரசியலை ஞாபகப்படுத்தும் காட்சியமைப்புகள். வாயைத் திறந்தாலே வழக்கு போடும் காலத்தில் இந்தத் தைரியத்திற்கு பாராட்டுகள்!
அரசியல் படங்களில் வசனங்கள் மிகவும் முக்கியம். இதிலும் போஸ்டர் கலாசாரம், நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகியவற்றை வசனங்களின் மூலம் போட்டுத்தாக்குகிறார்கள். ஒரு காட்சியில் வளைந்து ஒடுங்கி நிற்கும் கட்சிக்காரர்களைப் பார்த்து, ‘நிமிர்ந்து நில்லுங்கய்யா! என் முகத்தைப் பார்க்காம அப்புறம் சிலையை தப்பா பண்ணிடப்போறீங்க!’ என பகடி செய்கிறார் நாசர். இவையெல்லாம் படத்தில் ‘அட’ போட வைக்கின்றன.
முதல்பாதியில் ஏற்றிய அத்தனை பரபரப்பையும் தாங்க முடியாமல் திணறுகிறது இரண்டாம் பாதியின் திரைக்கதை. சென்னை வெள்ளம், எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்கப்படுதல், பலம் வாய்ந்த சாமியார் ஒருவர் அரசியல் போக்கை தீர்மானிப்பது என ஏகப்பட்ட நடப்பு விஷயங்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்திருப்பதால் படம் இலக்கின்றி எங்கெங்கோ பாய்கிறது. அந்தப் பாய்ச்சல் நம்மையும் டயர்டாக்குகிறது.
ஷான் கருப்புசாமியின் ‘வெட்டாட்டம்’ நாவல்தான் இந்த ‘நோட்டா’. கதையில் வந்த எல்லாமே திரையிலும் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் சினிமாவுக்கான காட்சியமைப்புகளாக இல்லாமல் கதையில் இருப்பது போல வசனங்களாகவே கடந்துபோவதால் மனதில் ஒட்டவில்லை. முதல் காட்சியில் சென்னை வெள்ளம் என பரபரப்பாகிறார்கள். அடுத்தக் காட்சியிலேயே ‘எல்லாரையும் சி.எம் காப்பாத்திட்டாரு’ என கைக்கூப்புகிறார்கள். இப்படியான திரைக்கதை மிகப்பெரிய மைனஸ்.
லாஜிக் மீறல்களும் எக்கச்சக்கம். எதிர்க்கட்சித் தலைமை எப்படி அவ்வளவு நல்லவர்களாக மாறுகிறார்கள்? அதெப்படி எல்லா அரசியல்வாதிகளின் கறுப்புப் பணமும் ஒரே இடத்தில் ஒரே பினாமி குழுவின் கீழ் இருக்கும்? ஆயிரம் சட்டதிட்டங்கள் போட்டும் மீட்க முடியாத கறுப்புப் பணத்தை ஒரே ஒருவர் சைக்கிளில் சுற்றி பார்சல் போட்டு அனுப்புவது எப்படி? அட அதெல்லாம் விடுங்க பாஸ், சி.சி.டி.வியில் எப்படி பாஸ் வாய்ஸ் எல்லாம் ரெக்கார்ட் ஆகும்? கேள்வி கேட்டால் இப்படி நூறு கேள்விகள் வரை கேட்கலாம். இப்படி கேட்க வைக்கும் அலட்சியமான இரண்டாம் பாதி திரைக்கதையை மெருகேற்றியிருக்கலாம்.
அரசியலில் நோட்டாவால் பெரிய நன்மைகள் நடக்காது என்பார்கள். சினிமாவில் இந்த நோட்டாவால் நடந்த மிகப்பெரிய நன்மை விஜய் தேவரகொண்டாவை தமிழுக்கு அழைத்து வந்திருப்பதுதான்.