வரும் அக்டோபர் 9-ம் தேதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கூகுள் பிக்ஸல் 3 மற்றும் கூகுள் பிக்ஸல் 3 XL ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது கூகுள். 2016-ல் தொடங்கப்பட்ட பிக்ஸல் போன்கள் ஆப்பிள் மற்றும் பிற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாகக் கூகுள் தொடங்கிய சீரிஸ்.
வெளியாகுவதற்குச் சில நாள்கள் இருந்தும் பல விஷயங்கள் ஏற்கெனவே லீக் ஆகிவிட்டன. சொல்லப்போனால் இருப்பதிலேயே அதிக லீக்ஸ் இந்தப் போனுக்குத்தான் நடந்திருக்கும். இவை அனைத்தையும் வைத்து இந்தப் பிக்ஸல் 3 மற்றும் 3 XL போன்களில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதைக் காண்போம்.
ஸ்கிரீன்
தற்போது டிரெண்டில் இருக்கும் நாட்ச் டிசைன் இந்தப் போன்களிலும் இருக்கும். மேலும், ஸ்கிரீன் அளவு பற்றிய தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும் பிக்ஸல் 3 XL, 6.7 இன்ச்சிலும் பிக்ஸல் 3, 5.5 இன்ச்சிலும் கிடைக்குமென எதிர்பார்க்கலாம். 6.7 மிகப் பெரிய சைஸ் போலத் தெரிந்தாலும், 18:9 மற்றும் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மூலம் இது எதிர்பார்க்கும் அளவுக்கு பெரிதாக இருக்காது.
டிசைன்
மொத்த டிசைனைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட சென்ற பிக்ஸல் போன்களைப் போலத்தான் இவையும் இருக்குமென எதிர்பார்க்கலாம். முன்பக்கம் மட்டும் நாட்ச் டிசைன் மற்றும் அதிக டிஸ்ப்ளே ஸ்பேஸ் காரணமாகப் பார்க்க சற்று வித்தியாசமாக இருக்குமாம். மேலும், எப்போதும் இல்லாத புதிய வண்ணங்களில் இந்தப் போன்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘Pink Sand’ என்ற புதிய நிறத்திலும் வரலாம்.
Image: AndroidHeadlines
சார்ஜிங்
இந்தப் பிக்ஸல் 3 தான் இந்த வரிசையின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட போனாக இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் கடந்த வருடம் தங்கள் போன்களுக்கு அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு, இந்தப் பிரீமியம் போன்களில் இது ஒரு கட்டாய வசதி ஆகிவிட்டது.
Image: rozetked
கேமரா
எப்போதும் பிக்ஸல் போன்களின் சிறப்பாகப் பார்க்கப்படுவது அவர்களின் கேமராதான். இந்தப் பிக்ஸல் 3-ன் கேமராக்கள் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லையென்ற போதிலும் கேமராவின் பின் இருக்கும் மென்பொருள்கள் மேம்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே கூகுள் லென்ஸ் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதன்மூலம் கேமரா ஆனில் இருக்கும்போது ஏதாவது தேவையான தகவல்கள் இருக்கிறதா என்று ஸ்கேன் செய்துகொண்டே இருக்கும் இது. ஏதாவது தெரியவந்தால் அதைப் பற்றிய தகவல்களை நமக்கு அளிக்கும். இதுபோல இன்னும் பல விஷயங்களைச் சேர்த்து கேமராவை இன்னும் ஸ்மார்ட்டாகக் கூகுள் மாற்றியிருக்கும் என்று நம்பலாம்.
மேலும் செல்ஃபி கேமராக்களைப் பொறுத்தவரை இரண்டாவதாக ஒரு கேமரா சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. இதன்மூலம் வைடான செல்ஃபிக்களை எடுக்க முடியும். இது தேவையான ஒன்றுதானா என்பது வரும்போதுதான் தெரியும். ஏனென்றால் இதை ஃபேஸ் லாக்கின் போன்றவற்றுக்கும் கூகுள் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு.
புராசஸர்களைப் பொறுத்தவரை Snapdragon 845 இதில் இருக்கும். குவால்காம் நிறுவனத்தின் தற்போது இருக்கும் சிறந்த முன்னணி புராசஸர் இது என்பது குறிப்பிடத்தக்கது. RAM அதே 4 GB தான் இருக்குமெனத் தெரிகிறது. லைவ் வால்பேப்பர்களும் பலவகைகளில் இதில் இருக்குமாம்.
முன்பே ஹெட்போன் ஜாக்குளை நீக்கி USB-C யிலிருந்து 3.5 mm ஜாக் அடாப்டரை உடன் தந்தது கூகுள். இப்போது போன்களுடன் ஒரு USB-C ஹெட்போன்களும் வருமாம். நல்ல USB-C ஹெட்போன்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் இது வரவேற்புக்குரிய விஷயமாக இருக்கும். ஆப்பிள்போல் வயர்லெஸ்ஸை கூகுள் திணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி என்னதான் கணிப்புகள், லீக்குகள் என்றிருந்தாலும் உண்மையில் என்னென்னவெல்லாம் பிக்ஸல் 3 மற்றும் 3 XLலில் இருக்கும், மக்களால் இது எப்படி வரவேற்கப்படும் என்பது அடுத்தவாரம் தெரிந்துவிடும்.