சாமிமலை, ஸ்டொக்கம், மாக்கலை ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கபட வேண்டும் என கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சாமிமலை ஹட்டன் பிரதான வீதியை மறித்து ஸ்டொக்கம் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.
இதன்போது முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதானி ஒருவரின் உருவ பொம்மையை எரித்தும், சில தொழிலாளர்கள் ஸ்டொக்கம் தேயிலை தொழிற்சாலையின் கூரையின் மீது ஏறி தோட்ட தொழிலார்களுக்கு 1000 ரூபா வழங்கபட வேண்டும் என கோரியும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.
இதனால் ஹட்டன் ஒல்டன் பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டிருந்ததோடு இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தோட்ட தொழிலாளர்களாகிய நாங்கள் இன்று வறுமையின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்று பொருட்களின் விலை அதிகரித்து செல்லுகிறது. தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்கு கேட்டு வரும் மலையக அரசியல்வாதிகள் ஏன் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் மாத்திரம் ஏன் மௌனம் காக்கின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதேவேளை, தோட்ட தொழிலளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் கம்பனிகாரர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, தோட்ட தொழிலளர்களின் சம்பள விடயத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய கவனம் செலுத்தி எங்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.