சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சபரிமலைகோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதற்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்கள், ஒரு சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்தாலும், கேரள மக்கள், ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. கேரளாவின் பண்டலத்தில் தொடங்கிய இந்த மாபெரும் போராட்டம் தற்போது மற்ற மாநிலங்களிலும் தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
கேரளாவின் தந்திரி குடும்பம், பண்டலம் ராஜ குடும்பம் ஆகிய போராட்டக்களத்தில் குதித்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து மக்கள் ஒன்று சேர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இன்று கேரளாவின் திருவனந்தபுரம், பம்பை, கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.