வங்கக் கடலில் உருவாகி உள்ள லூபன் புயல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்போதைக்கு வடக்கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, “நேற்று அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மண்டலமாக மாறி உள்ளது. இது லூபன் புயலாக மாறும். இந்த புயல் அடுத்தடுத்து மேலும் வலுப்பெறும். பின்னர் ஓமன் கடல் பகுதியில் கரையைக் கடக்கும்.
இதேபோல வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. இந்தப் புயல்களால் அரபிக் கடல், தென்னிந்திய பகுதி, வங்கக்கடலில் காற்றின் போக்கு மற்றும் ஈரப்பதம் மாற்றமடையும். இதனால் வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பொழிந்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழியும். பின்னர் படிப்படியாக மழையின் அளவு குறையும்” என்று பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.