சவுதியில் இயங்கி வரும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவிகள் பிரிவு தனியாகவும், மாணவர்கள் பிரிவு தனியாகவும் இரண்டு வளாகங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இந்திய மாணவ, மாணவிகள் படித்துவந்தனர். இதனால் சவுதி வாழ் இந்தியக் குழந்தைகளின் கல்விக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது ஆண் மாணவர்கள் பள்ளி இயங்கி வரும் கட்டடம் குறித்த விவகாரத்தில் சவுதி நீதிமன்றம் வரும் 9-ம் தேதிக்குள், அக்கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச பள்ளியை இடத்தைக் காலி செய்து தருமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 4, 200 மாணவர்களின் கல்வி பாதித்திடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர்களை தற்காலிகமாகமாவது, மாணவிகள் பயின்று வரும் வளாகத்துக்கும் மாற்ற இயலாத சூழல் நிலவி வருகிறது.அங்கு ஏற்கெனவே சுமார் 6000 மாணவிகள் பயின்று வருவதால், 4,200 மாணவர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் அங்கு இடமில்லாத சூழல் உள்ளது.
டிவிட்டரில் சுஷ்மாவிடம் கோரிக்கை
இதனையடுத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் 3,300 மாணவர்கள் தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள் என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். மேலும் 1,800க்கும் மேற்பட்டோர் சுஷ்மாவுக்கு ட்விட்டரில் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய பள்ளியின் மாணவர்கள் பிரிவு நிரந்தரமாக மூடப்படாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தற்காலிக மாற்று இடம் அளிக்க உதவ வேண்டும் என தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள சவுதி துணைத் தூதரகம் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வெளியுறவுத் துறையின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.