தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களின் விடுவிப்புத் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா அரச தலைவரிடம் கூட்டமைப்பு கோரியிருந்த நிலையில், சந்திப்புக்கு நேரம் ஒதுக்காது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ்க்கு பயணமாகியுள்ளார்.
இலங்கைக்கும் சீசெல்ஸ்க்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சீசெல்ஸின் அரச தலைவர் டெனி போவின் அழைப்பையேற்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் அரசமுறை பயணமாக நேற்றுக் காலை புறப்பட்டார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்கள் தம்மைக் குறுகிய கால மறுவாழ்வில் விடுவிக்குமாறு கோரிப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அரச தலைவருடன் பேச்சு நடத்துவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கோரியிருந்தார். இதுவரை சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே அரச தலைவர் வெளிநாடு பயணமாகியுள்ளார்.