பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அரசியற் கைதிகள் விடயத்தில் மெளனம் காத்து ஒதுங்கியிருந்த நிலையில் அவர்களும் அக்கறை கொள்ள வேண்டுமென்ற காரணத்தினால் அவர்களது நிலைப்பாடுகளை அவதானித்துச் சற்றுக் காலதாமதமாக அரசியற் கைதிகளுக்கு ஆதரவான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை (08) முற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக சமூகத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திப் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளோம்.
எமது போராட்ட அழுத்தங்கள் காரணமாக கடந்த வருடம் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றான நீதிமன்றம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கடந்த வருடம் நாம் அரசியற் கைதிகளுக்கு ஆதரவாக நடாத்திய போராட்டம் இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருந்தது என்றார்.
இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த வியாழக்கிழமை(03) பிற்பகல் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இதுவரை எங்களுடைய விடுதலை தொடர்பில் வாய்திறக்காமலிருப்பது எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக அரசியல் கைதிகள் கடும் ஆதங்கம் வெளியிட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-)