யாழ்ப்பாண பல்கலைக்ககழத்தின் வவுனியா வளாகத்தில் பௌத்த மாணவர்கள் வழிபடுவதற்கு தனியான இடம் வழங்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் பொது இடத்தில் புத்தர் சிலையை நிறுவ பலவந்தமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் அமைச்சரவை அறிவித்தல் ஒன்றை விடுத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை அமைப்பதற்கு இடமளிக்கப்படவில்லை என சிங்கள ஊடகம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டிருந்தாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில. விளக்கமளித்துள்ள அமைச்சர், வவுனியா வளாகத்தில் நான்கு மதங்களை பின்பற்றும் மாணவர்களுக்காக நான்கு வழிபாட்டு இடங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பௌத்த மாணவர்களுக்கு தனியாக வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு இடத்திற்கு புறம்பாக, பல்கலைக்கழக வளாகத்தின் பொது இடத்தில் புத்தர் சிலை ஒன்றை பலவந்தமாக நிறுவ சில பௌத்த மாணவர்கள், பீடாதிபதிக்கு அறிவிக்காமல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தடுத்தி நிறுத்த முற்பட்டபோதே பிரச்சினை ஏற்பட்டதாகவும், குறித்த மாணவர்களுக்கு வகுப்புதடை விதிக்க நேரிட்டதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், வவுனியா வளாகமோ அல்லது யாழ்ப்பாண தமிழ் மக்களோ, பௌத்தர்களுக்கு பௌத்த மதத்தை வழிபடுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட தடை இதுவல்ல என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இதேநேரம், வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தாம் தனிப்பட்ட முறையில் விஜயம் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் சில இடங்களில் புத்தர் சிலைமீது தார் பூசப்பட்டிருந்ததுடன், சில இடங்களில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, குறித்த புத்தர் சிலைகள் இராணுவத்தினருக்கு தற்காலிகமாக அடைப்பதற்கு அனுமதிக்கப்பட்டபோதும், அவை நிலையானதாக அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன், இராணுவ முகாம் அகற்றப்பட்டபோது, குறித்த சிலைகள் அகற்றப்படால் அங்கேயே நிலையானதான வைக்கப்பட்டுவிட்டு வந்தமையும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த புத்தர் சிலைகள் மீது எவறாவது தாரை பூசியிருக்கலாம் அல்லது தெற்கிலிருந்து செல்பவர்கள் புத்தர் சிலை மீது தாரை பூசியிருக்கலாம்.
பின்னர் அதனைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வடக்கில் புத்தர் சிலை வைப்பதற்குக்கூட இடமளிக்கின்றார்கள் இல்லை என்று தெற்கிற்கு காண்பிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ கூறியுள்ளார்.