யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது.
இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று, வாங்கிய கஞ்சியின் சூடு ஆறு வதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக தன் கூடாரத்துக்கு திரும்பி வந்த தாயின் கையிலிருந்த கிண்ணம் தன் பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. அவளது மகன் அந்தச் சிறுஇடைவெளிக்குள் பல வந்தமாக ஆயுதப்போராட்டத்துக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்தான். தாய்மார் எல்லோருமே குண்டுகளிடமிருந்தும், பலவந்த ஆள்சேர்ப்பிலிருந்தும் தம் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக நிறையவே போராடவேண்டியிருந்தது.அதன் பிறகு அவளது நாள்கள் ஒவ்வொரு பயிற்சி முகாம்களுக்கும் முன்னால் நின்று கண்ணீரோடு மகனைத் தேடியலைவதாகவே கழிந்தது. இறுதியில் ஒருநாள் அவள் தன் மகனைக் காணநேர்ந்தது. அது கந்த கப்புகை அடங்கத்தொடங்கியிருந்த பொழுது. ஊழி முடிந்து போய்விட்டதாக அறிவிக்கப்பட்ட நாளில் அனல்கொட்டும் வெளியில் அமர்த்தப்பட்டிருந்தவர்களில் அவளது மகனும் ஒருவன். தூரத்தே நின்று தான் அவனைப்பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருக்க ஏக்கப்பார்வையோடு அவனும் தாயைப்பார்த்தபடியிருந்தான்.
எல்.ரீ.ரீ.யில் இருந்த ஆக்கள் இந்தப் பக்கம் வாங்க. ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு நீங்கள் உங்கட குடும்பத்தோட போகலாம். பலமுறை அறிவித்த பின்பு விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் ஏராளமானோர் படையினரிடம் சரணடைந்தனர். அந்தத்தா யின் பிள்ளையும் சரணடைந்தவர்களில் ஒருவன். அவனைப் படையினர் வாகனத்தில் ஏற்றும் சமயம் தாய் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினாள்.ஐயோ! என்ர ஒரேயொரு பிள்ளை! அவனுக்கு ஒண்டும் தெரியாதையா. அவங்கள்தான் வைபோஸா கொண்டு போனவங்கள். அவனை விட்டிடுங்கோ!
அந்தக்கதறல்கள் அவர்களின் மனதைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை.மீண்டும் அவளது தேடுகை வாழ்வு தொடர்ந்தது. எல்லாத் தடுப்பு முகாம்களுக்கும் அலைந்து கடைசியாக தன் மகனை அவள் கண்டுபிடித்தாள். ஆனாலும் எப்போதாவது தான் அவனைப் பார்க்கமுடியும்,. அதுவும் சில மணித்தியாலங்கள் மட்டுமே. இது போல இன்னும் பலர்ஆயிரக்கணக் கானோர் தம் உறவுகளைத் தடுப்பில் காண அலைந்து திரி கின்றனர்.
அதேவேளை தடுப்பில் இருப்பவர்களின் நிலையும் இன்னும் மோசமானது. அவர்களில் பெரும்பாலானோர் பல வந்தமாகவே ஆயுதப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். ஒருநாள் போராளியாக இருந்தவர்கள் கூட வருடக் கணக்கில் தடுப்பில் வாட வேண்டிய கட்டாயம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மாத்திரமல்லாது நலன்புரி நிலையங்களிலும் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் விசார ணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டனர். இன்னும் சிலர் சரணடைந்திருந்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலை. எஞ்சியோர் இப்படிப்பட்ட தடுப்பு முகாம் களில் அடைக்கப்பட்டனர். சென்ற வருட இறுதிக்குள் தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிடுவர் என்று அரசு கூறியபோதும் அது இதுவரை நிறைவேறவேயில்லை. கட்டம் கட்டமாக சிலர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் தடுப்பில் தான்.
எல்லாச் சித்திரவதைகளையும் விட அதிகவலியை உண்டாக்கக்கூடியது விடுதலைக் கான நாள் எப்போதெனச் சொல்லாது சிறையிலேயே காத்திருக்கவைத்தல்தான். மனதளவில் ஏற்கனவே பெரும் காயங்களை சுமந்தவர்களாகச் சரணடைந்தவர்கள், எப்போது மீண்டும் தம் குடும்பத்துடன் இணைவது என்ற கனவுடன் தான் தடுப்பில் ஒவ்வொரு நாளையும் போக்காட்டுகின்றனர். எப்போதும் தம் வீடு, குடும்பம், பிள்ளைகள், மனைவி மற்றும் உறவுகள் பற்றிய சிந்தனைகளே அவர்களது எண்ணங்களை இடைவிடாது ஆக்கிரமித்து நிற்கின்றன.இதன் விளைவுகள் விஸ்வரூபம் எடுக்கும் போது அவை பயங்கரமானவையாக அமைந்து விடுகின்றன. அண்மையில்அடுத்தடுத்து இரு வேறு தடுப்பு முகாம்களில் நிகழ்ந்த முன்னாள் போராளிகள் இருவரின் மரணங்களும் இத்தகைய மன உளைச்சல் காரணமாகவே ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. வவுனியா தொழினுட்பக்கல்லூரியில் உள்ள தடுப்பு முகாமில் தற்கொலை செய்து கொண்ட ஆசிர்வாதம் நியூஸ்டன் தினமும் முகாம் பொறுப் பதிகாரியைச் சந்தித்து எப்ப என்னை வீட்டை விடு வீங்கள்? எனத் தவறாது கேட்டு வந்திருக்கிறார். விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டதே தவிர அவர் விடுதலையாவதற்கான அறிகுறிகளே இல்லை. இந்நிலையில்தான் அங்குள்ள கிணற்றில் வீழ்ந்து அவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தடுப்பில் இருந்து வெளியே வந்தாலும் எப்படி தம் வாழ்வைக் கொண்டு செல்வது என்ற கேள்வியும் இவர்களுக்கு இல்லாமலில்லை. புனர்வாழ்வு என்ற பெயரில் அவர்களுக்கு சில தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதாகவும் அரசு பீற்றிக்கொண்டாலும் அதுவும் உருப்படியாக நடக்கவில்லை. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட வர்களுக்கே இன்னமும் உரிய தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கமுடியாத நிலையில் இப்போதும் உள்ளே இருப் பவர்களுக்கு மட்டும் எப்படி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்ப முடியும்?
சரி, அரசை நம்பாது தமது சொந்தக்காலில் நிற்க முன்னாள் போராளிகள் நினைத் தாலும் கூட அவர்கள் மீதான சந்தேகப் பார்வையை சமூகம் அகற்றுவதாக இல்லை. முன்னாள் போராளிகள் என்ற காரணத்தைக்காட்டியே அவர்களுக்கான வேலைகளை வழங்கவோ கடன் கொடுக்கவோ பலரும் தயங்குவதாகவும் கூறப்படுகின்றது. ஏனெனில் அவர்களைத் தம் தொழில் ஸ்தாபனங்களில் வைத்திருப்பதன் மூலம் பின்னாள்களில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயம்தான் இதற்குக்காரணம்.
அதை விடத் தடுப்பில் இருந்து விடுவிக்கப்படுபவர்களில் அநேகர் சிலநாள்களின் பின் மீண்டும் கைதாவதும் தொடர்கதையான விடயம். அவ்வாறு கைது செய்யப்படு பவர்களின் கதி என்னவென்றும் தெரியவில்லை. எனவே தடுப்பில் இருப்பதும் இயலாத விடயம்; வெளியே சென்று வாழ்வதும் சவாலான சங்கதி. தடுப்பு முகாம் எண்ணெய்ச்சட்டி என்றால் வெளியே பற்றியெரியும் நெருப்பு. அங்கும் செல்ல முடியாமல் உள்ளேயும் இருக்கமுடியாத இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமை தடுப்புமுகாமில் இருப்பவர்களுக்கு . எனவேதான் இவை எல்லாவற்றையும் யோசித்து மன அழுத்தத்துக்கு உள்ளாகும் முன்னாள் போராளிகள் விரக்தியின் விளிம்பில் தற்கொலையே ஒரேயொரு தீர்வென தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள்.
தடுப்பில் உள்ளவர்களை அவர்களது உறவுகள் சென்று பார்வையிடுவதும் அடிக்கடி நடைபெறக்கூடிய ஒன்றல்ல. பெரும் பணச்செலவு, நேரச் செலவு, பாதுகாப்புக் கெடுபிடி கள் என்பவற்றைக் கடந்தே அவர்கள் தம் உறவுகளைச் சந்திக்கவேண்டியுள்ளது. (தடுப் பில் உள்ளவர்களைச் சந்திக்கவெனச் செல்பவர்களுக்கு குறிப்பிட்ட சிறு தொகையை வழங்கி வந்த சர்வதேசச் செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகங்களும் மூடு விழாக் கண்டுவருகின்றன.)
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அண்மையில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போது,ஏராளமானோரின் சாட்சியங்கள் கண்ணீராலேயே பதிவு செய்யப்பட்டன. அவர்களின் உறவுகள் காணாமல்போன தாகக் கருதப்படுபவர்கள்; அல்லது கைதானவர்கள்; அல்லது இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள். தமது உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் அல்லும் பகலும் அவர்களைத் தேடி அலைதலையே தம் வாழ்வியலாகக் கொண்டிருப்பவர்கள். காணாமல் போன வர்கள் எங்கிருக்கிருக்கிறார்கள் எனக் கண்டு பிடித்துத் தரும்படியும், தடுப்பு முகாம்களில் இருப்பவர்களை மீட்டுத்தரும்படியும், விழிநீரால் இவர்கள் பதிவு செய்த சாட்சியங்கள் போர் நிகழ்ந்து முடிந்த பின்னரும் நீள் கின்ற அவலத்தைச் சொல்லி நின்றன. இது தொடர்பில் எவ் விதத் தட்டிக்கழிப்புகளும் சொல்லமுடியாததால், தடுப்பு முகாம்களுக்கும், கைதானவர் கள் தடுத்து வைக்கப்பட்டிருக் கும் ஏனைய இடங்களுக்கும் நேரடியாகச்சென்று காணாமல் போனோர் பற்றிய தகவல்களை அறிந்து சொல்வதாகவும், தடுப் பில் உள்ளவர்களை விரைவில் விடுவிக்கவோ அல்லது அவர்கள் மீதான சட்டநடவடிக் கைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் விடுதலையை விரைவாக்குவதாகவும் தேர்தல்கால அரசியல்வாதிகளைப் போல நல்லிணக்க ஆணைக்குழுவினர் வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர். இப்போது ஆணைக்குழுவின் ஆயுள் இன்னும் ஒருவருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் காணாமல்போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் நிலை மையில் எவ்விதமுன்னேற்றமும் ஏற்படவேயில்லை.
இனியாவது தடுப்பு முகாம் களில் உள்ளவர்களின் விடுதலையை அரசு துரிதப்படுத்துவ துடன், அவர்களுக்கான வாழ் வாதாரத்தொழில் வாய்ப்புகளை யும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் சமூகத்தவர்களும் முன்னாள் போராளிகளின் சமூக ஒன்றிணைதலை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தவிர்க்க வேண் டும். ஏனெனில் தடுப்பில் உள் ளவர்கள் எல்லோரும் விடிந்த தும் கேட்கின்ற கேள்வி எங்களுக்கு எப்ப விடுதலை? என்பதுதான். அவர்களது வாழ்வும் நாளும் வீணடிக்கப்படுமானால் ஏற்கனவே நிகழ்ந்தது போன்ற தடுப்புமுகாம் தற்கொலைகள் அதிகரிக்கவே செய்யும். வெளியே வரத்துடிக்கின்ற முன்னாள் போராளிகளின் வாழ்வு மீதான நம்பிக்கையைக்காக்கவேண்டியது அரசினதும் , நம்மவர்களினதும் கடமை.