குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம். தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள்:
நீண்ட பெரும் வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த நாட்களும், எம் வரலாற்றின் அவலங்களும் மரணங்களும் என் கண்ணால் கண்ட காட்சிகளையும் என் மனதில் ஏற்பட்ட உணர்வுளையும் இங்கே கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்து முள்ளிக்குளம் தொடக்கம் 2009 இல் முள்ளிவாய்க்கால் வரை படுகொலைகளுடன், ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என யாரும் நினைக்கவில்லை,
”தமிழீழம்” என்கின்ற தணியாத இலட்சியத்திற்காக எத்தனை கொடிய மனித குலமே அருவருக்கத்தக்க வலிகளை சுமந்து, இறுதி மூச்சுவரை கொண்ட கொள்கைக்காக போராளிகள் செய்த அளப்பரிய தியாகங்களை வார்த்தையால் சொல்லிட முடியாது.
வன்னி பெரும் நிலப்பரப்பினை நோக்கி நாலாபுறமும் இராணுவத்தின் முன்னகர்வு நடவடிக்கைகள் களமுனையில் எதிரிப்படையோடு மூர்க்கமாய் முறியடிப்புத் தாக்குதல்கள் என ”புலிகளின் குரல்” வானொலியில் அறிவிப்புக்களைகேட்டுக்கொண்டிரு
களமுனைகளில் போராளிகளின் வீரச்சாவுகள் கல்லறை வரிசைகள் வேகமாக நிறையத் தொடங்கிட யார் வீட்டிற்கு யார் சென்று செய்தி செல்வது என தெரியாத நாட்கள்… எமது தாய் நிலம் சோக இசையில் மூழ்கிப்போனது.
படையினர் குண்டுகளையும் எறிகணைகளையும் மக்கள் குடியிருப்புக்கள் மேல் மழைபோல பொழிந்திட . களச்சாவுகளைவிட மக்கள் மீது ஒரு மணித்தியாலத்திற்கு, ஆயிரம் இரண்டாயிரம் என்று ஊர் மனைகளுக்குள் விழுந்த எறிகணைகளில் உடல்கள் கீறிக் கிழித்து ஏற்படுத்திய அவலச் சாவுகள் நூறை தாண்டத் தொடங்கியது.
தழிழீழ நிலப்பரப்பு துண்டாடப்பட்ட குறுகிய நிலங்களில திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைந்திட ஸ்ரீலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களுக்கு மக்களை தந்திரமாக அழைத்த சிங்கள இராணுவம் அங்கு வந்த மக்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்தார்கள்.
.
சிங்கள அரசினால் நேருக்கு நேர் சண்டையிட முடியவில்லை. ஏனெனில் எதிரியுடன் கூட்டாகிய சர்வதேச சமூகமும் அதன் ஆயுதங்களே சண்டையிட்டன. கண்மூடித்தனமான தாக்குதலை பல்வேறு முனைகளிலும் இருந்தும் சர்வதேச நாடும் இலங்கை அரசும் நிகழ்த்தியது.
சர்வதேசத்தின் நவீன தொழில் நுட்பம் நிறைந்த ஆயுதங்கள் எம்மவர்கள் இரத்தம் குடித்திட்ட அகோரக் காட்சிகள் தொடர, மக்கள் நிரந்தர தற்காலிக இடங்களில் இருந்து இடம்பெயரும் நிலை தோன்றியது. இதனால் இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரித்துவிட எஞ்சிய கிராமங்களும் நிரம்பி வழியத் தொடங்கியது..
போர்க்களத்தையும் மீறிவந்து சிறிலங்கா வான்படையின் போர்விமானங்கள், மக்கள் செறிவாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக இருந்த இடங்களை இலக்குவைத்து கண்மூடித்தனமான முறையில் தாக்குதல்களை நடத்திட மரணம் மலிந்த பூமியாக ஆலயங்கள் பாடசாலைகள் குடியிருப்புகள் வைத்தியசாலைகள் என எல்லா இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் எம் வாழ் நாளிலும் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
இன்று எம்மில் சில மேதாதிகளும் அரசியல் தலைமைகளும் போதிக்கின்றார்கள்.. மறப்போம் மன்னிப்போம்.. என்று…
எதை மறப்பது.? எதை மன்னிப்பது..?
மேற்சொன்னவற்றில் எதனை மறக்க சொல்கின்றீர்கள்? நான் உங்களிடம் ஒரு விடயத்தினை கேட்க விரும்புகின்றேன் உங்கள் குடும்ப உறவுகள் துடிக்க கதறி கதறியே இறந்த காட்சிகளை பாத்திருக்கின்றீர்களா…? இன்றும் எம் விழிகளை மூட விடாமல் கண்ணுக்குள்ளேயே கண்ணீர் இறைத்தபடி காட்சிகளாக நிறைந்திருக்கிறது அவர்களின் முகங்கள் …
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது
இராணுவத்தினர் கிபிர், மிக்போர்விமானங்கள், எம்.ஐ.24 உலங்குவானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள், கடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட்படையினரின் நீண்டதூர வீச்சுக் கொண்ட துப்பாக்கிகள்,கொத்துக்குண்டு
பெற்றேரை இழந்த குழந்தைகள் , குழந்தைகளை இழந்த பெற்றேர்கள் கணவனை இழந்த மனைவி , மனைவியை இழந்த கணவன் அக்கா சிதையுண்டு போக, அண்ணா காணமல் போக , தம்பி, தங்கை, அவையங்களை இழந்திட கொத்து கொத்தாக பலி கொடுத்து பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்து நடை பிணமாக வாழ்ந்திடும் உறவுகளின் கண்ணீர் கதைகள் தான் ஆயிரமாயிரம்.
2009ம் ஆண்டு பாதுகாப்பு வலயங்களில் மக்களை மனிதக் கேடயங்களாக்கி சிங்களப் படையினர் முன்னேறி தாக்குதல் நிகழ்த்தியதுடன் தமது இந்த மனிதக் கேடய முயற்சிக்கு ஒத்துழைக்காத மக்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தினார்கள்.
சிங்களப் படையினர் ஏவிய ஒருவகையான புகைக்குண்டுகளால் ஏராளமான தமிழர்கள் மூச்சுத் திணறி இறந்ததாகவும், ஒரு வகையான குண்டுகள், வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி கொல்லப்பட்டதும் மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகிய இறுதிக்கணங்கள் இன்னும் உயிர்ப்புடன் நிற்கின்றது
பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பழிகளுக்குள்ளும் ; குண்டுகள் வீழ்ந்து வெடித்தது. பெருமளவிலான மக்கள்;. உடலங்கள் சிதறிக் கொல்லப்பட்டார்கள்.
இறுதிக்கணங்களில் முள்ளிவாய்க்கால்; மண்ணில் மூச்சடங்கியவர்கள் போக எஞ்சியவர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டார்கள். அவ்வாறு தரம்பிரிக்கப்பட்டவர்களில் சிலர் புனர்வாழ்விற்கும் சிறைக்கும் செல்ல, பலர் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களில் ஒரு தொகுதியினரின் படுகொலை நிழல்படக் காட்சிகளை இன்றும் இணையங்களில் காண முடிகிறது.
விடுதலை புலிகள் சிங்கள இராணுவத்துடன் மட்டும் சண்டை பிடிக்கவிலை சர்வதேச வல்லரசுகளுடன் ஈழமண்ணில் இன விடுதலைக்காக போராடினார்கள் என்று மக்கள் அனைவரும் அறிந்து இருந்தாலும் போரின் எதிர்பாராத மௌனமானது மக்களின் மனநிலையை மாற்றி போரையும் விடுதலை போராட்டத்தையும் விமர்சிக்கும் நிலைக்கு மாற்றம் பெற்றதாக்கியது.
2009இல் இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஈழத்திலும் புலம்பெயர் சமூகங்களும், மனித உரிமை அமைப்புக்களும், மாணவர்களும்,ஐ நா சபைக்கு அழுத்தம் கொடுத்து இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தக் கோரியும், தண்டனை வழங்குமாறும் பல அகிம்சை வழியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தாயகத்தில் எம் உறவுகள் இன்றும் நில ஆக்கிரமிப்புக்கெதிராகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டிடவும் பல போராட்டங்களையும் கவனயீர்ப்பு,அடையாள போராட்டங்களையும் பல நாட்களாக நடத்தி வருகின்றார்கள்.
அவர்களின் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தமிழ் மக்கள், ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தின் ஊடாக அனைத்துலக சமூகங்களுக்கு; பாரிய அழுத்தினை கொடுக்க வேண்டும். 8 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் உலகம் சொல்லா மறுக்கும் உண்மையின் சாட்சிகளாய் நாம்.
வலிசுமந்த மண்ணில் நடந்த இனப்படுகொலைக்கு கண்ணீர் சிந்தும் நினைவு நாளான இன்று தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக ஒன்றிணைத்து எனக்கான விடுதலையை வென்றெடுக்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம். எம்மில் இருக்கும் வேற்றுமைகளை களையும் பட்ஷத்திலேயே எதிரியானவன் எமது பலமறிந்து எமக்கு எதிரான நகர்வுகளை நடத்த தயங்குவான்.ஆகவே மதிப்பான தமிழ் மக்களே ”ஒற்றுமையே பலம்” என்ற வார்த்தையை மனதில் நிறுத்தி எதிர்வரும் காலத்தில் சாதிமத பேதமின்றி தமிழர்களாக இணைவோம்.
எமது உரிமையை வென்று எடுப்போம்.