ஈழ அகதிகள் நலனுக்காக 1990ம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வரும் பேராசிரியர் குழந்தை, கால் நூற்றாண்டைக் கடந்தும் அகதிகள், முகாம்கள் என்ற சிறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஒரு மேலோங்கிய அடக்குமுறையாகவே எண்ணத்தோன்றுகிறது என்கிறார்.
முகாம்களில் வறுமையில் உள்ள விதவைப்பெண்களை புலனாய்வாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதாகத் தெரிவிக்கும் குழந்தை, “அவர்களின் நிலையைப்பயன்படுத்தி முகாமுக்கு அருகில் உள்ள கிராமத்தினர் சிலரும் இந்தப் பெண்களை தமது பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குக்கின்றனர். இளைஞர்கள் மோசமான குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதே போல் நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் விவகாரத்தில் தமிழ் நாட்டைச்சேர்ந்த இளைஞர்களால் பொறியியல் மாணவி ஒருவர் கூட்டு பாலியல்வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் சிதிக்கப்பட்டு மிகக்கொடூரமாக கொலைசெய்யப்பட்டார் என்றும் வருந்துகிறார். ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாம்கள் மற்றும் ஆஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள ஈழ அகதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம்.
தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் நாடு திரும்புவதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பேராசிரியர் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு,“ ஈழ அகதிகள் மீண்டும் தமது நாட்டுக்கப் போக விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு சென்று தங்களால் வாழ முடியுமா என்றும் அச்சப்படுகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பை பெறுவதில் பெரும் சிக்கல்கள் இருக்கு. இவற்றோடு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான வீடுகள், நிலங்களும் இல்லை. எனவே வாழ்வதற்கான சகல வசதிகளையும் அரசு ஏற்படுத்தி கொடுக்குமானால் தாம் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் பிரச்னையில்லை என அகதிகள் கூறுகின்றனர். தினம் ஒரு சில குடும்பங்கள் போய்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு பெரிய எண்ணிக்கையில் அவர்கள் விருப்பத்துடன் இன்னும் நாடு திரும்பவில்லை. இரு நாடுகளுக்குமிடையே கப்பல் போக்கு வரத்து அமைந்தால் தாம் நாடு திரும்புவதில் சிக்கல் இல்லை என்பதும் பெரும்பாலானவர்களின் கோரிக்கை. தற்காலிக குடியுரிமை கொடுத்து, அவர்கள் நாட்டிற்கு திரும்பிச்செல்லும் தற்காலிக குடியுரிமை மீண்டும் இந்திய அரசு பெற்றுக்கொள்ளலாம். வடக்கு கிழக்கில் குறைந்துள்ள தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்த இங்கு அகதிகளாக உள்ளவர்கள் நாடு திரும்பவேண்டும். அதுவே ஆக்கிரமிப்பில் உள்ள அவர்களின் நிலங்களைப் பெறுவதற்கான வழியாகவும் அமையும் எனக் குறிப்பிடுகிறார்.
முகாம்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் போதும் முகாமுக்குள் வரும் போதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவர்களின் எண்ணிக்கையும் இருவாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒரு முறை பதிவும் செய்யப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஈழ அகதிகள் முகாம்களும் புலனாய்வாளர்களின் முழு கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இருக்குகின்றது. இவ்வாறன ஒரு சூழலில் 12 வயது சிறுவன் ஒரு முகாம் வாசலில் போதைப்பொருளான கஞ்சாவை வைத்து விற்றதாக கூறுகிறார், பேராசிரியர் குழந்தை .
இலங்கையில் அமைதி பூத்து விட்டது என நாடு திரும்பிய அகதிகள், இன்றும் தமது உறவினர்களின் வீடுகளில் ஒட்டி வாழும் துயரமே தொடர்கின்றது. “சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் வாருங்கள்” என அழைத்த இலங்கை அரசு, குடும்ப விபரங்களை மட்டும் திரட்டிவிட்டு அமைதியாக இருக்கின்றது. அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்களும் நிச்சயமற்று போயுள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் அம்மக்களை மையம் கொள்ளக்கூடிய ராணுவ புலனாய்வாளர்களின் விசாரணைகள் அவர்களை மீளா அச்சத்திற்குள்ளே வைத்துள்ளது.
இவ்வாறு வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்று பட்டு செயற்படுவதன் மூலம் சில பிரச்சனைகளுக்கு முடிவு கட்டலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்கள் ஓர் அணியில் ஒன்று பட்டு மக்கள் பலத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அழிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, விடுதலைக்கான தீர்வை நோக்கி நகர்வது ஆரோக்கியமானது.