இலங்கை அகதி ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகம் – தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டியில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நபர் ஆத்தூர் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான நபர் கருத்து தெரிவிக்கையில்,
“நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில், எனது குடும்பத்தாருடன் கடந்த 2006ம் ஆண்டு முதல் தங்கியுள்ளேன். தற்போது சென்னையில் பெயிண்டராக பணியாற்றி வருகிறேன்.
எனது குழந்தைகளுக்கு பள்ளியில் சில சான்றுகள் தர வேண்டியிருந்ததால், சில நாட்களுக்கு முன் நாகியம்பட்டி வந்தேன். அப்போது உறவினர் இருவரை உடன் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தேன்.
நாகியம்பட்டி முகாமில் உள்ள சிமியோன் என்பவர், இவர்களை ஏன் அழைத்து வந்து உடன் தங்க வைத்துள்ளாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தம்மம்பட்டி போலீசில் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் முகாமிற்கு வந்த தம்மம்பட்டி பொலிஸார், என்னிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளாது காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதுடன், தம்மம்பட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தடுத்து வைத்தனர்.
பின்னர் இனி இதுபோல் நடக்க மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பொலிஸார் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறேன், எதற்காக என்னை பொலிஸார் தாக்கினார்கள் என தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்,
எவ்வாறாயினும், ‘நாகியம்பட்டி அகதிகள் முகாமில் சிமியோன் என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் பேரிலேயே ஜெரின்சுபாஸ்கரன் என்பவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தோம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.