இனிதாக மலர்ந்திருக்கிறது
இளம் காலைப் பொழுது
பெருமூச்சும்
முணு முணுப்புமாய்
கடல் அலை போல்
கட்டுக்குள் அடங்காமல்
சிறிதாகவும் பெரிதாகவும்
தனியாகவும் கூட்டாகவும்
எதையெதையோ தேடும்
எண்ணிக்கையற்ற மனிதர்கள்
அழகான உடையில் பெண்கள்
அவசரமான நடையில் ஆண்கள்
கைகோர்த்து நடக்கும் காதலர்கள்
காலாற நடக்கும் பெரியவர்கள்
கறுப்பு இனம்
வெள்ளை இனம்
கலப்பில் வந்த கண்ட இனம்
எத்தனை விதமான மனிதர்கள்
இத்தனை மனிதரையும்
இயக்குவது என்ன?
பசி
தீராத பசி
பசியின் பிடியில் மனிதன்
உணவுப் பசி
உணர்வுப் பசி
அறிவுப் பசி
ஆன்மீகப் பசி
பயம் காட்டும் ஆயுதப் பசி
பதம் பார்க்கும் விலங்குப் பசி
அணி வகுக்கும் அந்தரங்கப் பசி
கொந்தளிப்பு, நடுக்கம்
பூரிப்பு மயக்கமென
சிதறிக் கிடக்கின்றன
மானிடப் பசிகள்
ஒவ்வொரு கணமும்
வெவ்வேறு பசி
ஒவ்வொரு பசிக்கும்
வெவ்வேறு யுத்தம்
மனிதப்பசிகள் அடங்குவதில்லை
தீனி இட்டால் தணிந்து கொள்ளும்
சில மணி நேரம் பணிந்து நிற்கும்
மீண்டும் மீண்டும் உள்ளம் துடிக்க
வெள்ளம் போலப் பாய்ந்து வரும்
கொஞ்சிக் குலாவிக் கும்மாளமிடும்
மந்திரப் பசியை மசிய வைப்பதும்
தந்திரமான தனித்துவக் கலையே
வெந்து தணியட்டும் மனிதப் பசிகள்
– சௌந்தரி