” பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்டு வர வேண்டும்”
மூதறிஞர் ,தமிழ் பண்டிதர்,கவிஞர் மாவிட்டபுரம் சச்சிதானந்தன் ஐயா
இயற்றிய கவிதையின் வரிகளில் ஒன்று.
பூநகரி பிரதேசத்தில் மிக அண்மையில் சென்ற போது இறந்தவர் ஒருவரின் சடலத்தை
பாடையில் வைத்து எடுத்துச் சென்றதை கண்டேன்.
அப்போது இந்தப் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.
மரண வீடுகள் எளிமை குடியிருக்கும் சடங்குகளாக இருந்த காலம் ஒன்று இருந்தது.
அவசர முகாமைத்துவத்திற்கு சிறப்பான ஒரு எடுத்துக் காட்டாக மரணச்
சடங்குகளைக் கூறலாம்.
ஆனால் இன்று மரண வீடு ஒன்று நடந்தால் ஊர்கூடி ஒற்றுமையாகச் செய்வதை
அரிதாகவே காண முடிகிறது.
ஒரு காலத்தில் புகழ்பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர்
எஸ்.ஏ.அசோகன்.அவரது குரலில் ஒலித்த அந்தக் காலத்து பிரபல பாடல்,
” இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க
மறந்திட்டான்.
பறந்து பறந்து பணம் தேடி பாவச் சுனையில் நீராடி அப்படி இறந்தவனைச்
சுமந்தவனும் இறந்திட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க
மறந்திட்டான்.”
அது போலத் தான் எமது நாட்டில் சில மரணவீடுகள் நடக்கின்றன.
பணப் பகட்டு காட்டுவதற்கு ஒரு காலத்தில் கோயில்களின் திருவிழாக்கள் இருந்தன.
வீடுகளைக் கட்டிப் பண விலாசம் காட்டினார்கள். பிற்காலத்தில் வீடுகளில்
மங்கல நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்தி வசதிகளின் வீக்கம் காட்டினார்கள்.
அதற்குப் பின் திருமண மண்டபங்களில் தடல்புடலாக மங்கல நிகழ்வுகளைக்
களியாட்டங்களாக நடத்தி வெளிநாட்டுப் பணப் பகட்டு காட்டினார்கள்.
இவை ஆடம்பரங்களாயினும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் பாருங்கள் இந்தச் செத்த வீடுகளை இப்படி நடத்திக் காட்டத்தான் வேண்டுமா ?
பத்திரிகைகளில் கால் பக்கம் முதல் அரைப்பக்கம் ஏன் முழுப்பக்கமென மரண
அறிவித்தல்கள் வரும்.
வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் உறவுகள் வரவேண்டுமாயின் 3 நாளுக்கு மரண
அறிவித்தல் தொடராக வரும்.
வீட்டிற்கு வருவோருக்கு வழங்கவென கேஸ் கேசாக சோடா எடுத்து வைக்க வேண்டும்.
வீட்டில் பான்ட் கோஸ்டியை வைத்து அதிர அதிர அடிக்க வேண்டும். பறைமேளம்
அடிப்பது தான் சரியான பண்பாடு என்பது கூட பலருக்கு மறந்து விட்டது.
அது மட்டுமல்ல வீதி வீதியாக கால் முதல் அரை மணி நேரம் வரை யாவரையும்
வழிமறித்து பான்ட் அடிக்க வேண்டும். அடுத்தவர் வயித்தெரிச்சலைப் பற்றி
நமக்கேன் கவலை.
இறுதிக் ஊர்வலம் செல்லும் பாதையை அதிர வைக்க பல்லாயிரம் ரூபாவிற்கு
பட்டாசு வாங்க வேண்டும். வீதியால் போகிறவனை அடப்பு வந்து
( காட் அற்ராக் ) மரணிக்கும் வரை அதிர வைக்க வேண்டும்.
கால் மணி நேரமாவது வீதியைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுப் பிரதேசமாக
வைத்திருக்க வேண்டும்.
நல்ல காரியங்களுக்குச் செல்பவரை விலகிச் செல்லுமாறு அடையாளம் காட்ட 500
மீற்றருக்கு முன்பாக பட்டாசு கொளுத்தும் மரபைப் பற்றி யாரும்
கவலைப்படமாட்டார்கள். அறிவதற்கு ஒரு சிலரைத் தவிர யாருக்கும் ஆர்வமில்லை.
இறுதிக் கிரியை நடக்கும் இந்து மயானத்திற்கு ஆள்கள் வருவது குறைவு என்று
கால் போத்தல் சாராயம் கொடுப்பது கூட ஆங்காங்கே பொறின் கறன்சியின்
(Foreign currency) பாசனாகி விட்டது.
ஆனால் இன்றும் ஒரு சில இடங்களில் தமிழ் மரபு காத்து மரண வீடுகள் மரண
யாத்திரைகள் நிகழ்கின்றன.
பூநகரிப் பிரதேச மக்களை இந்த விடயத்தில் முன்னுதாரணமாகக் கூறலாம்.
அவர்கள் பூவரசம் கட்டை தறித்து அதில் பாடை கட்டி இறந்தவரின் உடலை வைத்து
மனிதர்கள் தூக்கி வருவார்கள்.
எளிமையாகவும் தமிழ் பண்பாடாகவும் இருக்கிறது.
வாழ்க்கைச் செலவு எகிறிப் பாய்கிறது. வாழ்வதற்கு என்ன செய்வது என ஒரு
கூட்டம் ஏக்கம் கொள்கிறது.
யோசித்து யோசித்து மூளையை விட்டு உடலையும் உளத்தையும் கெடுக்கிறது.
அதே நேரம் இன்னுமொரு கூட்டம் இருக்கின்ற பணத்தை வைத்து எப்படி பகட்டுக்
காட்டலாமென நாளுக்கு நாள் மண்டையைப் போட்டுக் கசக்குகிறது.
1970 களின் இறுதியில் உனக்காக நான் எனும் ஓர் தமிழ் சினிமாப்படம் வந்தது.
அதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
அதில் ஓர் பாடல் .
ஏழ்மையின் உச்சத்தில் பட்டினி கிடந்து ஒருவன் நோயினால் இறக்கும் தருணப் பாடல் அது.
” இறைவன் உலகத்தைப் படைத்தானா ஏழ்மையை அவன் தான் படைத்தானா.
ஏழ்மையைப் படைத்தது அவன் என்றால் இறைவன் என்பவன் எதற்காக…..
பொன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை மறந்த மண் குடிசை
பசிவர அங்கே மாத்தரைகள் பட்டினியால் இங்கே யாத்திரைகள்……..
என அந்தப் பாடல் தொடர்கிறது.
வறுமையின் உச்சங்களைக் காணும் போது முந்திய தலைமுறையினருக்கு இப் பாடல்
ஞாபகத்திற்கு வரும்.
”கஞ்சிக்கு உப்பில்லையென ஒரு கூட்டம் அலைகிறது.
பாயாசத்திற்கு சீனி காணாது என இன்னுமொரு கூட்டம் கவலை கொள்கிறது”
மால்தூஸ் என்றொரு அறிஞர் சொன்னார் ” தற்போதைய சனத்தொகையைப் போல பலமடங்கு
சனத்தொகைக்கு உணவு கொடுக்கக் கூடிய அளவிற்கு உலகில் உணவு வளங்கள்
இருக்கிறது.
ஆனால் உணவுப் பங்கீடு சமமாக இல்லை.
வீண் விரயங்களும் உணவு உற்பத்தியைச் செய்யாமலிருக்க மானியம் வழங்கும்
அரசாங்கங்களும் இருப்பது தான் பிரதான பிரச்சினை என்றார்.
எம்மவருக்கு வரும் வெளிநாட்டுக் காசு எப்படி வருகிறது. குளிர் குத்தக்
குத்த விறைச்சு விறைச்சு எப்படி உழைத்து அனுப்புகின்றார்கள் என்ற
உண்மையைப் பலரும் உணர்வதில்லை.
தமது வசதிக்காக உணர மறுக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வருவது பொறின் கறன்சி அல்ல பிளட் கறன்சி (Foreign
currency, blood currency) என்பதை நிறையப் பேர் உணர மறுப்பது தான் எமது
மண்ணின் பொருளாதார வள விரயங்களுக்கெல்லாம் மூலகாரணம்.
இன்னுமொரு 20 , 30 வருடங்களில் இந்த நிதி வருகை நின்று போகப் போகிறது.
முதலாம் தலைமுறையின் ஆயுள் காலங்கள் முடிய பணவருகையும் நின்று விடும்.
அங்கு பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை கேஎவ்சி, மக்டொனால்ட்ஸ்,
கிங்ஸ்பேகர்களுடனும், ரெஸ்ரோறன்றுகளுடனும் தமது வாழ்வைப் பிணைத்து
இருக்கும்.
உழைப்புக்கும்,சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் பேர் போன எமது மண்ணில்
ஆடம்பர நுகர்வுக் கலாச்சாரங்கள் அதல பாதாளத்தில் கொண்டு போய் விடும்
காலத்தைத் தவிர்க்க மாற்றுச் சிந்தனைகள் வளர வேண்டும்.
வேதநாயகம் தபேந்திரன்
நன்றி- எதிரொலி 17.10.2018 புதன்கிழமை