தமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல. வெளி அசைவுகளால் வேகம் கொள்ளலும் அல்ல. அவதானம், நிதானம், நியாயமான மனிதனின் அங்கீகாரமே ஆகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தந்தை செல்வா சிலை திறப்பு நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு இனிய நாள். ஈழத் தமிழினத்தின் இணையற்ற தலைவர் தந்தை செல்வா அவர்களுக்கு மட்டக்களப்புத் தமிழகம் சிலை எடுத்துச் சிறந்திடும் பொன்நாள், வரலாற்று நன்நாள்.
தாமதம் தான். என்றாலும், அந்த வாய்ப்பு எமக்குக் கிட்டியதில் எமக்குப் பெரும் மகிழ்ச்சி. சிலை மலராய் மலர்ந்து நிற்கின்றார் செந்தமிழர் தந்தை. யார் இவர்? ஆம், இக்கால இளைஞன் கேட்கின்றான்.
ஈழத் தமிழரின் இருப்பை உறுதிப்படுத்தியவர். எமது வரலாற்று வாழ்விடத்தை, இருவிழியாம் பெருமொழியை, கலையை, கலாசாரத்தை, பண்பாட்டை, பாரம்பரிங்களை, அரச வாய்ப்புக்களில் எமக்கான பங்கினையெல்லாம் உரிமையோடு காத்திட, உயர்வாகப் பேணிட எம்மையெல்லாம் உணர்வோடு வளர்த்திட்ட உத்தமர் இவர்.
இலங்கை ஒரு தீவு. இது ஒரு நாடாய் இருக்கவில்லை. வடக்கு கிழக்கிலே ஒரு தமிழ் நாடு. தெற்கு, மேற்கிலே கண்டி, கோட்டை என இரண்டு அல்லது, இராசரட்டை – மலையரட்டை – உறுகுணைரட்டை என மூன்று சிங்கள நாடுகளை கொண்டிருந்த பூமி இது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்னும் அந்நிய ஐரோப்பியர்கள் அக்கால நவீன ஆயுதங்களுடன் வந்தார்கள். ஆக்கிரமிப்புச் செய்தார்கள். நாடுகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றினார்கள். இறுதியாக ஆட்சி செய்த பிரித்தானியர் காலத்தில் 1833இலே கோல்புறுக் அரசியல் சீர்திருத்தம் செயற்பாட்டுக்கு வந்தது. தீவு முழுமையும் ஒருமைப்படுத்தப்பட்ட நிருவாக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
சட்டவாக்கல் கழகம் உருவாக்கப்பட்டது. மக்களை பிரதிநிதித்துவப்படுத்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். சிறிதளவான பிரிதிநிதித்துவம் என்பதால் இன அடிப்படையில் ஓரளவு சமத்துவம் இருந்தது.
இடவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டவாக்கற் கழகத்திலே சிங்கள உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழ்த் தலைவர்கள் எச்சரிக்கையானார்கள். பெரும்பான்மையினர் ஒருமித்து நின்றால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார்கள்.
அன்றைய இலங்கையிலே கண்டியச் சிங்களவர், கரையோரச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், ஐரோப்பியர் என்ற இன அடையாளங்கள் இருந்தன. ஒரு நாடு என்ற அமைப்பில் கரையோரச் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என கண்டியச் சிங்களவர்கள் பயந்தார்கள்.
படித்த இலங்கையருக்கான வேட்பாளராக சேர்.பொன் இராமநாதன் அவர்களை நிறுத்தியதும் கரையோரச் சிங்களவர்கள் பால் கண்டியச் சிங்களவர்கள் கொண்டிருந்த எச்சரிக்கை தான். எனவேதான் அரசியல் சீர்திருத்தத்திலே கண்டியர் பிராந்திய சுயாட்சி நல்கக் கூடிய சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.
அப்போது ஐந்து மாகாணங்கள் இருந்தன. கண்டியர் இதனை மூன்று பிராந்தியங்களாகப் பிரிக்க வேண்டும் என்றார்கள். கண்டி வலயம், கரையோர வலையம், வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் வலயம் என்பவையே அவை. 1926ல் பண்டாரயநாக்கா சமஷ்டியை வலியுறுத்தி Sunday Morning Times பத்திரிகையில் ஆறு கட்டுரைகள் எழுதினார்.
அப்போது அவர் Progressive National Party யை அமைத்திருந்தார். ஒருவர் தவிர கட்சியின் எல்லா உறுப்பினர்களும் சமஷ்டியை ஏற்றார்கள். அதன் முக்கிய உறுப்பினராய் இருந்த தமிழரான ஜேம்ஸ் T.இரத்தினம் அவர்கள் மட்டும் சமஷ்டியை எதிர்த்தார்.
பண்டாரயநாயக்கா அவர்கள் யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தில் சமஷ்டி பற்றி உரையாற்றினார். சங்கத்தினர் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். இறுதியாக, நீங்கள் ஆயிரத்து ஒரு கேள்வி கேட்கலாம். ஆனால், இலங்கைக்கு ஏற்ற ஆட்சி முறை ஏதோவொரு விதத்திலானதான சமஷ்டி முறையே என்று முடித்தார்.
1927ல் டொனமூர் ஆணைக்குழு அரசியல் சீர்திருத்தம் பற்றிய கருத்துக்களைக் கேட்டறிந்தது. கண்டியர் சமஷ்டியை வலியுறுத்தினார்கள். கரையோரச் சிங்களவர்கள் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினார்கள். தமிழ்த் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தினார்கள். அத்தோடு சர்வஜன வாக்குரிமையையும் எதிர்த்தார்கள்.
ஆணைக்குழு, சமஷ்டி, இனவாரி என்பவற்றை நிராகரித்தது. பிரதேச வாரியை ஏற்றது. சர்வஜன வாக்குரிமையைப் பரிந்துரை செய்தது. கரையோரச் சிங்களவர்கள் தான் வென்றார்கள். டொனமூரின் பின்னரான 1931ம் ஆண்டு தேர்தலை யாழ்ப்பாணத் தமிழர்கள் புறக்கணித்தார்கள். பின்னர், 1934ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் பங்குபற்றி 04 ஆசனங்களைப் பெற்றார்கள்.
டொனமூர் அரசமைப்பால் தமிழர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டார்கள். இதற்கு முன்னரேயே இந்தப் பாதிப்பை தமிழ்த் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள. தமிழருக்கென்று தனியான அரசியற் தளத்தை படிப்படியாக உருவாக்கினார்கள். அதன் இறுதி வடிவம் தான் 1944ல் உருவாக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி.
இப்போது தான் தந்தை செவல்வா அரசியலுக்கு வந்தார். தமிழக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக G.G.பொன்னம்பலம் அவர்கள் விளங்கினார். E.M.B.நாகநாதன் அவர்கள் செயலாளர், தந்தை அவர்கள் அதன் துணைத் தலைவர். புதிய அரசியலமைப்பை உருவாக்க சோல்பரி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
பெரும்பான்மை ஆதிக்கத்தில் இருந்து சிறுபான்மையினரைப் பாதுகாக்க தமிழ்க் காங்கிரஸ் ஒரு வழிகண்டது. இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், முஸ்லிம்கள், மலாயர்கள், பறங்கியர், ஐரோப்பியர் ஆகிய ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் ஐம்பது வீத ஆசனங்களும் சிங்களவர்களுக்கு மற்றைய ஐம்பது வீத ஆசனங்களும் கிடைக்கும் வகையில் வலியுறுத்தியது காங்கிரஸ்.
இது சிறுபான்மையினரை செயற்கை முறையில் பெரும்பான்மையினராக்கும் உத்தி என சோல்பரி நிராகரித்தார். சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக சில வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆம், எந்தவொரு இன, மொழி, மதத்திற்கும் தனியான சலுகைகள் செய்யும் சட்டங்கள் வலிதற்றவை என 29ம் உறுப்புரை கூறிற்று. பல் உறுப்பினர் தொகுதி. பொதுச் சேவை ஆணைக்குழு என்பவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தென்பகுதியிலே சுதந்திர இயக்கங்களோடு சேர்ந்து பௌத்தமத மறுமலர்ச்சியும் எற்பட்டிருந்தது. அது ஒரு ஆதிக்க சக்தியாய் வளர்ந்தது. சிங்கள மக்கள் மத்தியிலே சிங்களப் பௌத்த வெறியை ஊட்டி வளர்த்தது. ஏற்கனவே மகாயான பௌத்தத்தை முறியடித்த எக்காளிப்போடு ஹீனயான பௌத்தம் மல்லுக்குக் கிளம்பியது.
சிங்கள மக்களை ஒன்றுபடுத்தல் என்பது தமிழர் எதிர்ப்பை வளர்ப்பதாய் அமைந்தது. விகாரைகள் தோறும் மகாவம்சப் புனைகதை ஓதப்பட்டது. துட்டகைமுனு வீரனாக்கப்பட்டான். தமிழர்கள் மும்முடிச் சோழ மண்டலத்தின் வாரிசுகள் என்றார்கள். இலங்கையின் ஆக்கிரமிப்பாளர்கள் என்று உண்மையல்லாதன உரைத்தார்கள். கண்டியர், கரையோரத்தார் வேறுபாடுகள் களைந்தார்கள். மதத்திற்கு எதிரானவர்களாக இடது சாரிகளைக் கண்டார்கள். அவர்களுக்கு ஆதரவாய் மலையகத் தமிழர்கள் இருப்பது இவர்களுக்குப் பொறுக்கவில்லை. தமிழர்களோடு சேர்த்து இடதுசாரிகளதும் பலத்தைக் குறைக்கத் திட்டமிட்டார்கள்.
சுதந்திர இலங்கையிலே சிங்கள பௌத்த ஆதிக்கம் வீச்சோடு எழுந்தது. அரசியலாளர்கள் அதற்கு ஆட்பட்டு நின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி அரசு 1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமைச் சட்டமூலத்தை ஓகஸ்ட் 20ல் முன்வைத்தது. தமிழ்க் காங்கிரஸ் அதனைக் கடுமையாக எதிர்த்தது. 15 நவம்பரிலே வாக்கெடுப்பு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி எதிராக வாக்களித்தது. 07 இலட்சம் மலையகத் தமிழர்கள் குடியுரிமையை இழந்தார்கள். 07 மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்லும் தகுதியை இழந்தார்கள். 15 தொகுதிகளிலே ஆதிக்கம் செலுத்தக் கூடிய இடதுசாரிகளும் பலமிழந்தார்கள். சோல்பரி அரசமைப்பின் 29ம் உறுப்புரை மேல் தொடர்ந்த வழக்குகள் தோல்வி கண்டன. உறுப்புரை 29 ஊனமாக்கப்பட்டது.
பிரதமர் DS.சேனநாயக்கா அவர்கள் G.G.பொன்னம்பலம் அவர்களை அணுகினhர். கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சை வழங்குவதாக ஆசைகாட்டினார். இன்னொரு பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கும் என்றார். G.G அவர்கள் மாயவலையிலே அகப்பட்டார். காங்கிரஸ் மத்திய குழு கூடியது. காரசாரமான விவாதம். G.G அபிவிருத்தி பற்றிப் பேசினார். தந்தை செல்வா, வன்னியசிங்கம், நாகநாதன் போன்றோர் மனித உரிமைகள் பற்றிப் பேசினார்கள்.
தமிழர் தம் அரசியல் பலமிழக்கும் என்றார்கள். சமபலம் கேட்ட நாம் இவ்வாறு செய்வதா? என கேள்வியெழுப்பினார்கள். G.G தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றார். அமைச்சர் பதவியை ஏற்றார். S.கனகரெத்தினம் அவர்களை அரை அமைச்சராக்கினார். (அவர் ஏமாற்றப்பட்டார் என்பதும், விடுதலை வேண்டும் இனத்துக்கு அபிவிருத்தி என்பது மாயை என்று உணர்ந்தார் என்பதும் பின்னைய வரலாறு)
தந்தையும், நண்பர்களும் தனியாக யோசித்தார்கள். இதற்கிடையில் அடுத்த பேரிடி மலையகத்தில் விழுந்தது. 1949ம் ஆண்டின் 03ம் இலக்க இந்திய – பாகிஸ்தானிய வதிவிடச் (குடியுரிமை) சட்டம் பாராளுமன்றில் விவாதத்திற்கு வந்தது. G.G, கனகரெத்தினம் போன்றோர் ஆதரித்தார்கள்.
முன்னைய குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இது நிவாரணம் என்றார் G.G. தந்தை இது முன்னைய சட்டத்தின் 02ம் பாகம் என்றார். சட்டமூலத்தை எதிர்த்து தந்தையும், அவரது நண்பர்களும் வாக்களித்தனர்.
இன்னுமோர் பேரிடி மலையக மக்களுக்கு. ஆம், 1949ம் ஆண்டின் 48ம் இலக்க இலங்கைப் பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டம் வந்தது. அதே வித ஆதரவும் எதிர்ப்பும். காங்கிரஸ் உடைந்தது. 1949 டிசம்பர் 18ல் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தோடு தன் தடத்தைப் பதித்தது.
ஆம், ஈழத் தமிழர் வரலாற்றில் மைல்கல்லாய் அமைந்த நிகழ்வு அது. அன்றுதான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியின் கொள்கையை விளக்கினார்.
நான் இதுவரை கூறிய வரலாற்றுத் தடங்களில் தந்தை செல்வா சென்று பார்த்தார். பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுவார்கள் என்று தீர்மானித்தார். சிறுபான்மை மக்களின் மொழி, வாழிடம், வேலைவாய்ப்பு என்னும் சகல உரிமைகளும் பறிக்கப்படும் என்று தீர்க்கதரிசனமாக யோசித்தார்.
கண்ணை மூடிக்கொண்டு அவர் சமஷ்டியை முன்வைக்கவில்லை அல்லது G.G அவர்களுக்கு எதிராகப் போர்தொடுக்கப் புறப்படவும் இல்லை. ஆழ்ந்து யோசித்தார். அதன் அடிப்படையிலே வழிசமைத்தார்.
இலங்கை பன்முகத் தன்மை கொண்ட நாடு. எனவே இங்குள்ள சமூகங்கள் தங்கள் தனித்துவத்தைக் காத்திட வேண்டும். சுயநிர்ணய உரிமை அவர்களுக்கு வேண்டும். இல்லையென்றால் பெரும்பான்மை பலத்தால் அவர்களின் சகல உரிமைகளும் கபளீகரம் செய்யப்படும். அதற்கான பாதுகாப்பே சமஷ்டி என வலியுறுத்தினார். அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் சமஷ்டிக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உண்மையான வாழ்வு பெறுகின்றன, ஒருங்கிணைந்து வாழ்கின்றன என்பதை வலியுறுத்தினார்.
இதனைப் பெறுவதற்கான வழி சாத்வீக வழியே என்றார். ‘அன்பர்களே, நாம் படைபலம் இல்லாதவர்கள்’ என்று அடிக்கடி உச்சரித்தார். சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு, கச்சேரி மறியல், ஸ்ரீ எதிர்ப்பு என்றெல்லாம் அறிவழியிலே மக்களை வழிநடத்தினார். அதனால் சிறைவாசமும் அனுபவித்தார்.
வாய்ப்பு வருகின்ற போதிலெல்லாம் மக்களுக்காக ஒப்பந்தம் செய்தார். 01ம் குடியரசு அரசியலமைப்பை எதிர்த்துப் பதவி துறந்தார். தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த காங்கேசன்துறை இடைத்தேர்தலிலே போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும், பேரினவாதம் அசைந்து கொடுக்கவில்லை.
எனவே தனிநாடு ஒன்றுதான் வழி என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். ‘தமிழீழம் பெறுவதென்பது வில்லங்கமான காரியம் தான். ஆனால், தமிழினம் தப்பிப் பிழைக்க வேண்டும் என்றால் அதைவிட வேறு வழியில்லை’ என்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மக்களிடம் விநியோகித்ததற்காகத் தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
Trial at Bar என்னும் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள். தந்தை 66 சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலைப்பட்டார். எதிர்த்து வாதிட்டார். வேறுவழியின்றி அரசு வழக்கைத் திரும்பப் பெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது. அறிவழியிலே தமிழீழம் பெறுவதற்கான வழிவகைகளை சிந்தித்துக் கொண்டிருந்தார் தந்தை அவர்கள்.
ஆனால், காலம் அவருக்கு இருக்கவில்லை காலன் கைப்பட்டார். ஈழத் தமிழினம் சோகத்தில் வீழ்ந்தது. தந்தையின் அறவழிக்கு மாற்றுவழி கண்டோம். மறவழியைத் தேர்ந்தோம். 30 ஆண்டுகள் நெருப்பாறு நீந்தினோம். உலகநாடுகள் ஒருசேர நின்று நம்மை அழித்தார்கள்.
என்றாலும், எழுந்திருக்கின்றோம். தந்தையின் வழியே தகுந்த வழி எனக் கண்டுள்ளோம். காலம் விட்டு வைத்த தந்தையின் வாரிசுகள் நம்மோடு இருக்கின்றார்கள். அவர்களில் மூத்த தலைவரை முன்நிறுத்தி நகர்வோம்.
இவ்வேளையில் தான் தந்தைக்கு இங்கே சிலை நிறுவி சிறப்புப் பெறுகின்றோம். தந்தை வழியில் தான் தமிழருக்கு விடிவு. அப்படியென்றால் அவரது சிந்தையைத் தெரிந்திட வேண்டும். அரவணைத்தல், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுத்தல், அடுத்தவரை மதித்தல், அவர்களுக்குள்ள நெருக்குவாரங்களை அங்கீகரித்தல், அவற்றை சமாளித்துக் கொண்டு அவர்களை வெளியே வரச் சந்தர்ப்பம் அளித்தல், வெளிப்படையாகச் செயற்படுதல் என்ற இன்னோரன்ன விடயங்கள் அவரது வரலாறு நமக்குக் காட்டும் பாடங்கள். அவரை ஊன்றிப் படிக்க வேண்டும். அவர் இருந்தால் எப்படிச் செயற்படுவார் என்பதைக் கண்டு கொள்ள அதுதான் மார்க்கம்.
தமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல. வெளி அசைவுகளால் வேகம் கொள்ளல் அல்ல. அவதானம், நிதானம், நியாயமான மனிதனின் அங்கீகாரம் இவற்றின் வழிகாட்டியாய் எமது பெருந்தலைவர் அவர்கள் எம்மோடு இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள் வீணை சிறப்பானது, வித்துவானும் கெட்டிக்காரர், அதன் தந்திகளும் ஒத்துழைத்தால் தான் நாதம் சிறக்கும் என்று. இவ்வரிகளை மனங்கொள்வோம். அதன் ஆழத்தைப் புரிந்து கொள்வோம் என்று தெரிவித்தார்.