இந்திய உளவு அமைப்பான ‘ரா’ அதிபர் மைத்திரிபால சிறிசேனாவைக் கொல்ல முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யும் திட்டம் தொடர்பான தொலைபேசி உரையாடல் கொண்ட ஒலிப்பதிவினை கண்டியில் செய்தியாளர் சந்திப்பில் ‘ஊழலுக்கு எதிரான படையணி’ என்ற அமைப்பின் தலைவர் நாமல் குமார என்பவர் சமீபத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஒலிப்பதிவில் இலங்கை காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைவர் நாலக டி சில்வாவிடம் தான் பேசியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
‘ரா’ மீது குற்றச்சாட்டு
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இலங்கையின் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, ”இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ எனக் கூறியதாக செவ்வாய்க்கிழமை இரவு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்பட்டது.
இலங்கை அரசு மறுப்பு
இந்நிலையில் கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன, “தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் உளவு அமைப்பான ரா உள்ளது என அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவும் மறுத்தார். சதித் திட்ட குற்றச்சாட்டுடன், ரா தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகத் தான், அதிபர் மைத்திரிபால சிறிசேனா சுட்டிக்காட்டினார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவைக் கொலை செய்வதற்கு ரா முயற்சி செய்கிறது என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆதாரமற்றவை பிழையானவை என தெரிவித்துள்ளது.