கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் எவருக்கும் இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் இந்த தொன்று தொட்ட வழக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் பரபரப்புத் தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், ஆணும், பெண்ணும் சமம் என்றும் உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து கேரள மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக கேரளாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு ஹிந்து இயக்கங்கள் இணைந்து சபரிமலைத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
பேச்சுவார்த்தை தோல்வி
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள மக்கள் ஒருபுறம் இருக்க, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரள அரசு திட்டவட்டமாக அறிவித்தது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஐயப்பனின் சன்னிதானத்துக்குள் பெண்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு வழங்கிய ஆலோசனைகளின் பேரில் தேவசம் போர்டு ஏற்பாடு செய்தது. இந்நிலையில் போராட்டங்களை நடத்தி வரும் இயக்கங்களுடன் தேவசம் போர்டு பேச்சுவார்த்தை நடத்தியது. ஹிந்து அமைப்பினர், பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் தந்திரி குடும்பத்தினர் ஆகியோருடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.
பொதுமக்கள் முற்றுகை
சபரிமலை சன்னிதானத்துக்குள் வயது வித்தியாசமின்றி பெண்களைஅனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கேரளத்தில் மிக அதிக அளவிளான பெண்களும் கலந்து கொண்டு நடத்தி வரும் ஹிந்துக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த 29ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொன்மையான பந்தளம் நகரிலிருந்து ”சபரிமலை பாதுகாப்போம்” என்ற பேரணி தலைநகர் திருவனந்தபுரம் வரை நடைபெற்றது. கேரள மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை நோக்கி லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களையும் உள்ளடக்கிய பேரணியும் நடைபெற்றது. கேராளாவில் ஆங்காங்கோ இன்னுமும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்து அமைப்புகளுடன் சேர்ந்து வலது சாரி அமைப்புகள் இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றன.
கேரளாவில் போராட்டங்கள் அதிகரித்து வந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வசதிகள் செய்துத் தரப்படும் எனவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுவதில் அரசு உறுதியோடு உள்ளதாகவும், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் பரபரப்பான ஒரு சூழலில் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று கோவில் நடை திறப்பதையொட்டி, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை தடுக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் திட்டமிட்டனர். அதுபடியே இன்று நிலக்கல் பகுதியில் வரும் பெண்களை ஐயப்ப பெண் பக்தர்கள் நிறுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்து அமைப்பினர் சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து, பெண்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குபடி வற்புறுத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் நிலக்கல் பகுதியில், வாகனங்களை போராட்டக்காரர்கள் சோதனை செய்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் தடியடி செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து சபரிமலையில் 144 தடை உத்தரவு நாளைக் காலை முதல் வரும் 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை 5 மணிக்கு பகவான் ஐயப்பன் ஆலய நடை பக்தர்களின் வருகைக்காக திறக்கப்பட்டது.
இருப்பினும், கேரள மக்களின் தொடர் போராட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.