என்னுள்ளே நீயிருக்க
இனியேதுகுறை எனக்கிறைவா
என் நாவில் குடியிருக்கும்
என் தாயே சரஸ்வதி யே
அனுதினமும் உனை நினைத்து
அருகம்புல் மாலை கோர்த்து
மஞ்சளதில் பிடித்தெடுத்து
மனசுக்குள் உன்னையெண்ணி
தோத்திரங்கள் பாடிக் கொண்டு
துதிக்கின்றேன் கணபதியே
சங்கடங்கள் போக்கிடவே
சங்கரனே வந்திடுவாய்
எக்கணமும் என் மனதில்
ஏணியாக இருந்திடுவாய்
இக்கணமும் எனக்குள்ளே
நீதானே இருக்கின்றாய்
இரு கரங்கள் கூப்பிடவே
இறைவா நீ அருள்கின்றாய்
கதி கலங்கி நிற்கின்றேன்
கவி பாடும் குயிலாக
எனையணைத்து உரமேற்றி
இறையவனே வழி காட்டு
உனை நினைத்து
உறுதி கொண்டேன்
உதயத்தை தருவாயா
என் இதயத்தை ஒளியாக்கி
இவ்வுலகத்தை ஒளியேற்ற.!
தெ.ரசிக்குமார்