ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடும் வல்லமை கொண்டவர்கள் என்று தென்னித்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இயக்குர் பாரதிராஜா இன்று (திங்கட்கிழமை) மாலை யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார்.
இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஈழத்து சினிமாவை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈழத்தில் உள்ள தமிழர்களும், இந்திய தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒரே உணர்வை, ஒரே திறமைகளை, ஒரே கலைப்படைப்பை கொண்டவர்கள். இருவர்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை.
ஆனால் தென்னிந்திய சினிமா கண்ட வளர்ச்சியினை ஈழத்து சினிமா காணவில்லை. இதற்கு ஈழத்தில் இருந்த பிரச்சினைகளே காரணமாகும். அந்த பிரச்சினைகளால் ஈழத்திற்கு வளங்கள் கிடைக்கவில்லை.
இதனாலேயே போதிய வளர்ச்சியினை ஈழத்து சினிமா எட்டவில்லை. உலகெங்கும் வியாபித்துள்ள ஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்