செய்தியாளர் ஒருவரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த கோபத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடக சந்திப்பை பாதியிலேயே கைவிட்டு எழுந்து சென்றார்.
நேற்று முன்தினம் விடுதலையான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னாண்டோ, தனக்கு எதிரான வழக்கு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதில் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டார்.
முன்னாள் இந்த ஊடகச்சந்திப்பு விஜேராமமாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளால் கோபமடைந்த மஹிந்த, சந்திப்பை முடித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கு மஹிந்த அளித்த பதில்களும்-
கேள்வி: உங்களுடைய ஆட்சிக்காலத்தல் பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்ணடாரநாயக்கவை பதவி நீக்கியது சட்டத்தின் பிரகாரமா?
மஹிந்த: ஆம் நாங்கள் அரசியலமைப்பிலுள்ள சட்டத்தின்படியே அவரை பதவி நீக்கினோம். அவரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட நீதியரசர்கள் குழு அமைக்கப்பட்ட சாட்சிகள் முன்வைக்கப்பட்டே அவரை பதவி நீக்கியிருந்தோம்.
கேள்வி: ஆனால் வெறுமனே மூன்று நாளில் இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டதே?
மஹிந்த: அப்படியில்லை. உங்களிற்கு கிடைத்த தகவல்கள் பிழையானவை.
கேள்வி: அப்படியானால், அவரது பதவிநீக்கம் சட்டத்தின்படியே நடந்ததென எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?
மஹிந்த: ஆம். அரசியலமைப்பின்படி பிரதம நீதியரசரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமாயின் சில சட்டமுறைகள் உள்ளன. அதன்படியே அவரை நீக்கியிருந்தோம். ஆகவே உங்களிற்கு கிடைத்த தகவல்கள் பிழையானவை. (கோபத்துடன் குறிப்பிட்ட ஊடகவியலாளரை நோக்கி) நீங்கள் எந்த ஊடகத்தில் பணியாற்றுகிறீர்கள்?
ஊடகவியலாளர்: நான் தேசிய தொலைக்காட்சி
மஹிந்த: ஆ…அதுதான் நீங்கள் இப்படியான கேள்விகளை கேட்கிறீர்கள்.
(செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்தது. இடையில் குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீண்டும் கேள்வியெழுப்பினார்)
கேள்வி: நான் தேசிய தொலைக்காட்சி என்ற காரணத்தினாலேயே எங்களை இந்த ஊடக சந்திப்பிற்கு அனுமதிக்கமாட்டோமென கூறினீர்களா?
மஹிந்த: அப்படியொன்றும் நடக்கவில்லையே
கேள்வி: இல்லை. நாங்கள் முதலில் உள்ளே வந்தபோது தடுத்து நிறுத்தினார்கள்.
மஹிந்த: அது தவறான புரிந்துணர்வினால் ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டு விட்டது.