தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதனின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாவீரர்கள் கணிசமானோர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட குடும்பங்கள் மிகச் சிறிய எண்ணிக்கையே.
இவர்களில் வடமராட்சி கிழக்கு, தாழையடி, ஆழியவளைச் சேர்ந்த லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தர்சன் மற்றும் கப்டன் வளவன் ஆகியோரின் குடும்பமும் அடங்கும். இவ் உடன்பிறப்புக்கள் மூவரும் ஓராண்டிற்குள்ளாகவே தாயக விடுதலைக்கான கடமையின்போது தம்மை ஆகுதியாக்கிக் கொண்டுள்ளனர்.
ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் வன்னி பெருநிலப்பரப்பை சிறிலங்கா படைகளில் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவேளை 19.10.1998 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில்,
லெப்டினன்ட் இன்பமுதன் (முத்துக்குமார் கலைஞானச்செல்வன்) தனது குடும்பத்தின் முதல் வித்தாக விழி மூடினார்.
இவர் வீரச்சாவைத் தழுவி ஏழு மாதங்களிற்குள் 01.05.1999 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற சமரின்போது,
லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்) (முத்துக்குமார் கலைஞானசேகர்) 10 கடற்புலிகளுடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரர்களின் உயிர்கொடையால் வழங்கற் படகுகள் பாதுகாப்பாக கரைசேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
லெப்.கேணல் தர்சன் வீரச்சாவைத் தழுவி நான்கரை மாதத்தில் 15.10.1999 அன்று அம்பகாமம் பகுதி நோக்கி முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரின்போது விழுப்புண்ணடைந்து மறுநாள் 16.10.1999 அன்று லெப்டினன்ட் இன்பமுதனின் முதலாம் ஆண்டு நினைவு நாளிற்கு மூன்று நாட்கள் முன்பாக,
கப்டன் வளவன் (முத்துக்குமார் குகதாஸ்) அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மூன்று உடப்பிறப்புக்களையும் லெப். இன்பமுதன் வீரச்சாவைத் தழுவிய இன்றைய நாளில் ஒருசேர நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.