யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக முன்றலிலுள்ள நினைவிடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
‘மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது தமிழ் இன அழிப்பு நாள் மே 18’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக அண்மையில் புதிதாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தெரிவாகிய பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வை அவர் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார். புதிய துணைவேந்தரின் இத்தகைய அணுகுமுறையைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட போது தமிழீழ எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளதுடன், விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட சிவப்பு, மஞ்சள் வர்ணக் கொடிகள் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடத்தைச் சுற்றிலும் பறக்க விடப்பட்டிருந்தன.
இதேவேளை முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தின் இரு வாயில்களின் முன்பாகவும், பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறிடங்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்ததுடன், பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.