தோழர் டேனிஷ் அவர்கள் B.C.A படித்த பட்டதாரி ஆவார். மாணவர் பருவத்தில் பல்வேறு மாணவர் நலன் சார்ந்த போராட்டங்களை முன்நின்று நடத்தியவர். இந்நிலையில் கடந்த 04.10.2018 தேதி சுமார் 04.30 மணிக்கு கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே தோழர் டேனிஷ் அவர்களை மாவோயிஸ்ட் என்று குற்றம்சாட்டி கேரளா காவல்துறை கைது செய்தது.
தோழர் டேனிஷ் அவர்களை கேரள, அகழி காவல்நிலையக் குற்ற எண்.75/2017 கைது செய்து 24 மணிநேரத்திற்கு மேல் சட்டவிரோத காவலில் வைத்துவிட்டு 05.10.2018 தேதி காலை 11.30 மணிக்கு பிறகே பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்திரவு ஏதுமில்லாமல் கைவிலங்குடன் ஆஜர்படுத்தப்பட்டார். தோழர் டேனிஷ் அவர்கள் மீதான குற்றச்சாட்டு யாதெனில் “தோழர் டேனிஷ் அவர்கள் ஆயுதங்களுடன் சென்று மக்களை மிரட்டி அரசுக்கு எதிராக போராடிய தூண்டியதாக” குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ்வழக்கில் அகழி காவல்துறையினர் பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் 10 நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். தோழர் டேனிஷ் தரப்பில் வழக்கறிஞர் யாஷர் அவர்கள் ஆஜராகி கடும் ஆட்சபேனை தெரிவித்தார். இறுதியில் 10 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கி நீதிமன்றம் உத்திரவிட்டது.
10 நாட்கள் போலீஸ் கஸ்டடி முடிந்து கடந்த 15.10.2018 தேதி தோழர் டேனிஷ் அவர்களை கைவிலங்குடன் நீதிமன்றத்திற்கு கூட்டிவந்தனர். அப்போது நீதிமன்றத்தில் பேசிய தோழர் டேனிஷ் அவர்கள் “தன்னை போலீஸ் கஸ்டடியில் சட்டவிரோதமாக IP, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள அனைத்து மாவட்ட உளவுப்பிரிவு காவலர்களும் சாப்பிடவிடாமலும், தூங்கவிடாமலும் விசாரித்ததாக கூறினார்.
அதன்பின்பு தோழர் டேனிஷ் அவர்களை அகழி காவல்நிலைய குற்ற எண்.640/2016-ல் ரிமாண்ட் செய்து 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டனர். தோழர் டேனிஷ் அவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆ.ராஜா, முருகேசன், பிரபாகர் மற்றும் ராஜா ஆகியோர் ஆஜராகினர். 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுப்பதற்கு தோழர் டேனிஷ் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாலக்காடு நீதிமன்றம் போலீஸ்ஸின் கோரிக்கையை முழுமையாக ஏற்று 5 நாட்களும் போலீஸ் கஸ்டடி வழங்கியது. பின்பு தோழர் டேனிஷ் தரப்பில் போலீஸ் கஸ்டடியில் வழக்கறிஞர் சந்திப்பிற்கு அனுமதி கோரியும், சட்டவிரோதமாக கைவிலங்கு மாட்டியதற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் கைவிலங்கு மாட்டுவதற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. மாண்புமிகு மேன்னைதங்கிய நீதிமன்றம் தோழர் டேனிஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கைவிலங்கிற்கு எதிரான மனு மற்றும் வழக்கறிஞர் நேர்காணலுக்கு அனுமதி கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த கைவிலங்கு மாட்ட அனுமதிகோரிய மனுவை அனுமதித்து தோழர் டேனிஷ் அவர்களுக்கு சட்டவிரோதமாக மாட்டப்பட்ட கைவிலங்கிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கினர்.
மேலும் பாலக்காடு நீதிமன்றம் தோழர் டேனிஷ் அவர்களிடம் நீதிமன்ற வளாகத்தில் முழக்கமிட்டால் ஒவ்வொருமுறை முழக்கமிடுவதற்கு தலா ஒரு வழக்கு பதியப்படும் எனக் கூறினர்.
தோழர் டேனிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம், அரசுதரப்பு வழக்கறிஞர், “நீங்கள் எதற்காக மதுரையிலிருந்துவந்து பாலக்காட்டில் ஆஜர் ஆகுறீர்கள்” என்று கேட்டார். நாம் எங்களை வழக்கறிஞராக நியமித்தால் எந்த மாநில நீதிமன்றத்தில் வேண்டுமானலும் ஆஜர் ஆவோம் என்றும் அது எங்கள் தொழில் கடமை என்றும் கூறினோம். மேலும் கேரள போலீசார் தோழர் டேனிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை இடைவிடாமல் நமது அனுமதி இன்றி புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தனர். மாவோயிஸ்ட் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கடைசியாக தோழர் டேனிஷ் அவர்கள் கைவிலங்குடன் போலீஸ் கஸ்டடிக்கு கூட்டி செல்லப்பட்டார்.
-குடியுரிமை பாதுகாப்பு நடுவம்-த.நா.
CPCL-TN.