அகதிகளை சிறைப்படுத்தும் கிறிஸ்துமஸ் தீவு முகாம் மூடல்
ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சிறைவைக்கும் முக்கிய தடுப்பு முகாம்களில் ஒன்றான கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய நிலப்பகுதியிலிருந்து சுமார் 1,500 கி.மீ. தொலைவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு, படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சிப்பவர்களின் இறுதி புகலிடமாக இருந்து வருகின்றது. இப்படி கிறிஸ்துமஸ் தீவுக்கு வந்தடைந்த ஆயிரக்கணக்கானோர் 2008-ல் திறக்கப்பட்ட இம்முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
மனித உரிமை மீறல்கள் மட்டுமின்றி, பல கலவரங்கள், மரணங்கள், பாலியல் வன்முறைகளும் இம்முகாமில் நடந்தேறியுள்ளன. 2009 முதல் 2013 வரை பல ஆயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள், ஆப்கான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அகதிகள் கிறிஸ்துமஸ் தீவை நோக்கி சென்றிருந்தனர். இதில் அதிகபட்சமாக கடந்த ஜூலை 2013ல் 2,000 குழந்தைகள் உள்பட 10,000 பேர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர், 2013 முதல் கடுமையான எல்லையோர கொள்கைகளை நடைமுறைப்படுத்திய ஆஸ்திரேலிய அரசு, தஞ்சம் கோரும் படகுகளை திருப்பி அனுப்பியது.
இந்த சூழலில், “இந்த தடுப்பு முகாம் மூடப்படுகின்றது. இதில் வைக்கப்பட்டிருந்த 30 பேரும் ஆஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்பில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என குடிவரவுத்துறை அமைச்சர் டேவில் கோல்மேனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அதே சமயம், கிறிஸ்துமஸ் தீவு முகாம் எப்போதும் திறப்பதற்கான தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தாய்லாந்து: சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கைது செய்ய தேடுதல் வேட்டை
விசா காலம் முடிந்து தங்கியுள்ள வெளிநாட்டினரையும, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரையும் கண்டறிவதற்கான தேடுதல் வேட்டையினை நடத்த குடிவரவுத்துறைக்கு தாய்லாந்து துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான பிரவித் வோங்சுவான் உத்தரவிட்டிருக்கிறார்.
காவல்துறை, ராணுவம், பாதுகாப்புத்துறையினருடனான சந்திப்பின் போது விடுக்கப்பட்ட இந்த உத்தரவில், ஒரு மாதத்துக்குள் இவ்வாறான வெளிநாட்டினரை கைது செய்து நாடுகடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றுலாவாசிகளை போல நுழைந்து சர்வதேச அளவிலான குற்றங்களை வெளிநாட்டினர் செய்வதாக வந்த புகார்களை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு குடிவரவுத்துறையின் சமீபத்திய கணக்குப்படி, தாய்லாந்தில் 16 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்.
மலேசியாவின் தவூ பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 43 பேர் ஆண்கள், 28 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகளாவர். இந்த 84 இந்தோனேசியர்களும் சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் பணியாற்ற வந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. கடந்த அக்டோபர் 5 அன்று நடத்தப்பட்ட இத்தேடுதல் வேட்டை மலேசியாவின் குடிவரவுத்துறை, கடலோர காவல்துறை, ஜெனரல் ஆப்ரேஷன்ஸ் படை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கையாக நடத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்தோ அனுமதி காலத்தை கடந்தோ வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என அடையாளப்படுத்துகின்றது மலேசிய அரசு. சமீப காலமாக, வெளிநாட்டினரை ஒழுங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கான பல்வேறு சோதனைகளை மலேசியா எங்கும் நடத்தி வருகின்றது.
இந்தியா: சட்டவிரோதமாக நுழைந்த 16 வங்கதேசிகள் கைது
உத்தரபிரதேசத்தின் மதுரா பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில், 16 வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அக்டோபர் 08 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 7 அலைபேசிகள், 8 ஆதார் அட்டைகள், ஒரு பேன் கார்ட், ஓட்டுநர் உரிமம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரா மாவட்டத்தின் கோசி நகரத்தில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் தங்கியிருந்த பொழுது இக்கைது நடைபெற்றுள்ளது. இவர்கள் இப்பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வங்கதேசத்திலிருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்காக ஒவ்வொரு குடியேறியும் 8 ஆயிரம் முதல் 10,000 ரூபாய் வரை செலுத்தியுள்ளனர்.
பப்பு நியூகினியா/ நவுருத்தீவு: தடுப்பு முகாமில் சிறைப்பட்டிருக்கும் அகதிகள், முகாமை மூட ஐ.நா. வலியுறுத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த 1400 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள்
நவுரு மற்றும் மனுஸ் தீவுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டு உள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உடல் ரீதியாகவும் மனநல பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகியவை ஆஸ்திரேலியா அருகே அமைந்துள்ள சுதந்திரமான தீவு நாடுகளாக இருப்பினும், இம்முகாம்கள் நடைமுறையில் ஆஸ்திரேலிய உதவியுடனேயே இயங்கி வருகின்றன. இந்த நிலையில், “ஏதேனும் துன்பகரமான நிகழ்வு நடப்பதற்கு முன் ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க வேண்டும்”, அதாவது அம்முகாம்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளரான கேத்ரின் ஸ்டூபர்பீல்ட் முன்வைத்துள்ளார்.
முன்னதாக, நவுருவில் அகதிகளிடையே பணியாற்றி வந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவர்களை கடந்த வாரம் அந்நாட்டு அரசு வெளியேற்றி இருந்தது. இதைத் தொடர்ந்து, அம்மருத்துவர்கள் நவுருத்தீவில் அகதிகள் கடுமையான மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாகவே ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களை மூடுவதற்கான கோரிக்கையை ஐ.நா.அகதிகள் ஆணையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகின் மற்ற நாடுகளை விட இங்குள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு சிறப்பான மருத்துவ வசதி கிடைப்பதாக கூறியுள்ள நவுரு அரசு, எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தன்னுடைய அரசியல் செயல்பாட்டை மருத்துவ உதவி என்ற போர்வையில் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது.