நான்காம்கட்ட ஈழப்போரில் கடற்புலிகள் நிகழ்த்திய இரு முக்கியத் தாக்குதல்கள்..தமிழீழ விடுதலைப் புலிகளின தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் எண்ணத்தில் தோற்றம்பெற்ற விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் காலத்திற்குக் காலம் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பலவிதமான அர்ப்பணிப்புக்களை செய்திருந்தது. இத்தகைய அர்ப்பணிப்புக்களுக்கு ஊடாக காலத்திற்குக்காலம் கடற்புலிகள் பல புதிய பரிணாம வளர்ச்சிகளையும் அடைந்துள்ளனர். நான்காம் கட்ட ஈழபபோர்க்காலத்திலும் குறிப்பிடக்கூடிய வளர்ச்சிகளைக் கண்டிருந்தது. இதன் ஒரு கட்டமாகவே கடற்புலிகளின் சேரன் ஈரூடகத்தாக்குதலணியின் தோற்றமும் ஆகும்.
கடல்வழியாகச் சென்று தரையிறங்கி அரசபடையினரின்; மினிமுகாம்களை மின்னல் வேகத்தில் தாக்கியழித்துவிட்டு வந்தவேகத்திலேயே படகுகளிலேறி தளம் திரும்பிவிடவேண்டும். இத்தகைய வீரமும் விவேகமும் கொண்ட போராளிகளை உள்ளடக்கியதாக ஈரூடக (கடல்-தரை) தாக்குதலணி ஒன்றை தோற்றுவிக்கும் தனது எண்ணத்தை செயற்படுத்தும் பொறுப்பை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் ஒப்படைத்திருந்தார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
தலைவர் பிரபாகரனின் எண்ணத்திற்கேற்றவாறு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் கடற்புலிகளின் தாக்குதல் அணிகளிலிருந்தும் நிர்வாக அணிகளிலிருந்தும் கனரக ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் சண்டை அனுபவமுள்ள போராளிகளையும் (மகளிர்-மகனார்) ஒன்றுசேர்த்து விசேட கொமாண்டோஸ் அணியொன்றை உருவாக்கினார். முல்லைத்தீவு படைத்தள அழிப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்சிறுத்தை அணிப்பொறுப்பாளர் லெப் கேணல் சேரன் அவர்களின் பெயரைத் தாங்கிய லெப் கேணல் சேரன் ஈரூடகத்தாக்குதலணி தோற்றம் பெற்றது. இந்த ஈரூடகத்தாக்குதலணிக்கு லெப் கேணல் கதிர்வாணன் அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு தோற்றம்பெற்ற சேரன் ஈரூடகத்தாக்குதலணி முழங்காவில் பகுதியில் பிரத்தியேகமான இடத்தில் தளம் அமைத்து தனது தரைக்கொமாண்டோஸ் பயிற்சியைத் தொடங்கியிருந்தது. இதன்படி சுமார் இரண்டு மாதகாலமாக கடுமையான பயிற்சிகளால் தங்களைச் சிறந்த போர்வீரர்களாக புடம் போட்டுக்கொண்ட போராளிகள் தங்களுக்கான கடல்கொமாணடாஸ் பயிற்சியை பெற்றுக்கொள்வதற்காக தங்களது தளத்தை வடமாராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணிப்பகுதிக்கு மாற்றினார்கள். வேற்றிலைக்கேணிப்பகுதியில் தளமிட்டுக்கொண்ட போராளிகள் தமது கடல்கொமாண்டாஸ் பயிற்சியிலேயே அதிக நேரத்தை செலவழித்தார்கள். இவர்களுக்கான பயிற்சிகளை சிறப்புக்கொமாண்டோஸ் பயிற்சி ஆசிரியர்கள் வழங்கினார்கள். தரைக்கொமாண்டோஸ் பயிற்சியினை லெப் கேணல் உதயன் மற்றும் கடலவன் ஆகியோர் வழங்கினர். கடல்கொமாண்டோஸ் பயிற்சியினை லெப் கேணல் செங்கோ மற்றும் செண்பகச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் யாழ்-நெடுந்தீவுக்கு அண்டியதாக அமைந்திருந்த சிறுத்தீவு படை மினிமுகாமை தாக்கியழிக்கும் திட்டத்தை வரைந்தார். அவர் தனது திட்டத்தினபடி சிறுத்தீவு படைமினிமுகாம் தாக்குதலுக்கான வேவுத்தரவுகளை திரட்டும் பொறுப்பை கடற்புலிகளின் பூநகரி கடல்-தரை போர்முனைத்தளபதி லெப் கேணல் பகலவன் அவர்களிடம் ஒப்படைத்திருந்தார் சூசை. வேவு எடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பகலவனும் தனது அணியிலுள்ள ஆற்றல்மிக்க போராளிகள் சிலரைத் தேர்வுசெய்திருந்தார். அவர்களுள் மேஜர் இமயவன் அவர்கள்தான் தொடக்கத்தில் சிறுத்தீவு படைமுகாம் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இந்தச்சூழ்நிலையில் தான் விபத்தொன்றில் இமயவன் சாவைத் தழுவிக்கொண்டார். இந்தச்சம்பவத்தைத ;தொடர்ந்து மற்றைய போராளிகள் இமயவன் எடுத்த வேவுத்தரவுகளையும் கொண்டு வேவுநடவடிக்கையினை தொடர்ந்தனர்.
சிறுத்தீவு சிறிலங்காக் கடற்படைத்தளம் தாக்கியழிப்பு
தாக்குதலுக்குத் தேவையான வேவுத்தரவுகள் அனைத்தும் முழுமைபெற்றன. இந்த சிறுத்தீவு படைமுகாம் தாக்குதலை மேற்கொள்வதற்கு சேரன் ஈரூடகத்தாக்குதலணியை ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாக வெற்றிலைக்கேணிப்பகுதியில் நிலைகொண்டிருந்த சேரன் ஈரூடகத்தாக்குதலணி முல்லைத்தீவு-சாலைத்தளத்திற்கு நகர்த்தப்பட்டு அங்குதான் சிறுத்தீவு படைமுகாம் தாக்குதலுக்கான ஒத்திகைப்பயிற்சி (கடல்-தரைப்பயிற்சி) ஈரூடகத்தாக்குதலணிக்கு வழங்கப்பட்டது. தாக்குதலுக்கான ஒத்திகைப்பயிற்சியும் திருப்தியாக அமையவே தாக்குதலுக்கான நாளும் குறிக்கப்பட்டது.
சேரன் ஈரூடகத்தாக்குதலணி பூநகரியிலுள்ள கடற்புலிகளின் தளத்திற்கு நகர்த்தப்பட்டு அங்குதான் தாக்குதலுக்கான ஒழுங்கமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறுத்தீவு படைமுகாம் தாக்குதலுக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக பூநகரி கடல்-தரை போர்முனைத்தளபதி லெப் கேணல் பகலவன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.அணித்தலைவர்களாக லெப் கேணல் கதிர்வாணன் மேஜர் பார்த்தீபா மற்றும் செங்கோதயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
குறிக்கப்பட்ட நாளான 2008-ம் ஆண்டு வைகாசிமாதம் 27-ம் திகதியன்று காரிருள் வேளையில பூநகரி கடற்கரையில்; கடற்புலிகளின் முன்னணிப்படகோட்டிகள் புளுஸ்ரார் படகுகளில் தாக்குதலணிப் போராளிகளை ஏற்றினார்கள். போர்க்களவீரர்களை ஏற்றிய படகுகள் கடலின் வெண்ணுரைகளைக் கிழித்தபடி சிறுத்தீவை நோக்கி விரைந்தன. படகுகளின் இயந்திர ஒலிகள் படையினருக்கு கேட்டுவிடும் என்பதால் சிறுத்தீவை அண்மித்ததும் படகுகள் கரைதட்டாமல் கழுத்தளவு தண்ணீரில் போராளிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டார்கள். கனரகஆயுதங்கள் மற்றும் ஏ.கே வகை துப்பாக்கிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜி.பி.எஸ் கொம்பாஸ் ஆகியவை பொலித்தீன்பைகளால் பொதிசெய்யப்பட்டு தண்ணீர் உடபுகாதவாறு பாதுகாக்கப்பட்டிருந்தது. அவற்றையெல்லாம் தோள்களில் சுமந்தவாறு எந்தவிதமான சலனமுமின்றி கரையை நோக்கி நகர்ந்தார்கள் போராளிகள்.
கரையேறிய போராளிகள் படையினரின் மினிமுகாம்மீது மின்னல்வேகத்தில துணிகரத்தாக்குதலைத் தொடுத்தனர். தாக்குதல் தொடங்கி சிலநிமிடங்களிலேயே போராளிகளின் தாக்குதல்களில் மினிமுகாமில் நிலைகொண்டிருந்த பதின்மூன்று கடற்படையினர்களும் கொல்லப்பட்டனர். இந்த வெற்றித்தாக்குதலுக்கு வலுச்சேர்த்து போராளிகள் தரப்பில் மேஜர் போர்மறவன் தம்முயிரை தாயகவிடுதலைக்காக அர்ப்பணித்து மாவீரர்கள் வரிசையில் சேர்ந்துகொண்டான். குறுகியநேரம் படைமுகாமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போராளிகள் அங்கிருந்த படைக்கலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தினார்கள். படையினரின பதின்மூன்று சடலங்களில் மூன்று சடலங்களையும் மாத்திரம் படகில் ஏற்றிக்கொண்டு மேஜர் போர்மறவனின் வித்துடலோடு வெற்றிவாகையுடன் சேரன் ஈரூடகத்தாக்குதலணிப் போராளிகள் தளம் திரும்பினர். புடையினரின் சடலங்கள் மூன்றும் விடுதலைப்புலிகளால் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் ஊடாக இலங்கை அரசிடம் வழங்கப்பட்டது.
சேரன் ஈரூடகத்தாக்குதலணியின் அடுத்தகட்டத்தாக்குதல் இலக்காக மன்னார்-எருக்கலம்பிட்டி படைமுகாம் அமைந்திருந்தது. ஏற்கனவே இந்தப்படைமுகாம் தாக்குதலுக்கான வேவுநடவடிக்கைகளில் மேஜர் அனல்வேந்தன் மேஜர் தணிகைமணி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சிறுத்தீவு படைமுகாம் தாக்குதல் நிறைவடைந்த கையோடு எருக்கலம்பிட்டி படைமுகாம் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். அனல்வேந்தனும் தணிகைமணியும் எடுத்த வேவுத்தரவுகளையும்கொண்டு எருக்கலம்பிட்டி படைமுகாம் தாக்குதலுக்கான ஒத்திகைப் பயிற்சியும் தாக்குதலணிப் போராளிகளுக்கு வழங்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் திருப்தியாக அமையவே தாக்குதலுக்கான நாளும் குறிக்கப்பட்டது. எருக்கலம்பிட்டி படைமுகாம் தாக்குதலுக்கான ஒருங்கிணைப்புத்தளபதியாக லெப் கேணல் விடுதலை நியமிக்கப்பட்டார். அணித்தலைவர்களாக மேஜர் காளைமலையான் லெப் கேணல் கிளியரசன் லெப் கேணல் கதிர்வாணன் மற்றும் செங்கோதயன் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர்.
சேரன் கொமாண்டோ அணியினரால் மன்னார் கூட்டுப்படைத்தளம் தாக்கியழிப்பு
2008-ம் ஆண்டு ஆனிமாதம் 10-ம் திகதியன்று காரிருள்வேளையில் கடற்புலிகள்; மன்னார்-சுட்டபிட்டிக்கடற்கரையிலிருந்து புளுஸ்ரார் படகுகளில் தாக்குதலுக்கான படைக்கலங்கள் சகிதம் எருக்கலம்பிட்டி படைமுகாம் நோக்கி புறப்பட்டார்கள். நள்ளிரவையும் தாண்டியது. 11-06-2008 அன்று நேரம் இரவு 2.00மணி. எருக்கலம்பிட்டியில் தரையிறங்கிய போராளிகள் படையினரின் முகாம்மீது அதிரடித்தாக்குதலைத் தொடுத்தனர். இந்த தாக்குதல் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையிலேயே நடைபெற்றது. போராளிகளின் இந்த குறுகிய நேரத்தாக்குதலில் பத்து கடற்படையினர் கொல்லப்பட்டனர். மற்றய படையினர்கள் பிரதான முகாமிற்கு தப்பியோடிவிட்டனர். குறிப்பிட்ட நேரம் படைமுகாமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போராளிகள் அங்கிருந்த கனரக ஆயுதங்கள் நவீன கடற்கண்காணிப்புக்கருவிகள் (றாடர்கருவிகள்) மற்றும் தொலைத்தொடர்புசாதனங்கள் முதலான படைக்கலங்களையும் கையகப்படுத்தினர்.
இந்த அதிரடித்தாக்குதலில் போராளிகள் தரப்பில் வேவுவீரன் மேஜர் தணிகைமணி உட்பட மேஜர் சீர்மாறன் கப்டன் சுடர்க்குன்றன் லெப் செந்தமிழ்வீரன் 2-ம்லெப் தமிழ்நிலவன் ஆகியோர் தாயக விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து தாயகமண்ணை முத்தமிட்டார்கள்.
கையகப்படுத்தப்பட்ட படைக்கலங்களையும் இந்த வெற்றித்தாக்குதலுக்கு வலுச்சேர்த்த மாவீரர்களின் வித்துடல்களையும் வெற்றிவாகைசூடிய போராளிகளையும் சுமந்தபடி கடற்புலிகளின் படகுகள் தளம் திரும்பின. தொடர்ந்து வந்த நாட்களில் வன்னியின் போர்க்களம் உக்கிரமடைந்த நாட்களில் மல்லாவி நாச்சிக்குடா பூநகரி குஞ்சுப்பரந்தன் என விரிந்த சமர்க்களங்களில் சேரன் ஈரூடகத்தாக்குதலணியினர் அரசபடையினருக்கு பலசந்தர்ப்பங்களில் அதிர்ச்சித் தாக்குதலைத்தொடுத்து படைத்தரப்புக்கு பாரிய உயிரிழப்புக்களையும் படைக்கல இழப்புக்களையும் ஏற்படுத்தினர். வன்னியில் இறுதியுத்தத்தில் பங்கெடுத்த இந்த தாக்குதலணிப் போராளிகளில் கணிசமானோர் இறுதியுத்தத்தின்போது தமது உயிர்களை தாயகவிடுதலைக்காக ஆகுதியாக்கினார்கள். கடற்புலிகளின் வரலாற்றில் சேரன் ஈரூடகத்தாக்குதலணி தனியான அத்தியாயத்தை பதித்துள்ளது.
சிறுத்தீவுத் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்’
சிங்களத்தின் தலையில் பேரடி கொடுத்த புலிகளின் “சிறுத்தீவு” நடவடிக்கை
‘சிறுத்தீவில் ஓர் அதிரடி”