வளரி… இந்தப் பெயர், தமிழ்ச் சமூகத்தின் ஞாபகத்தில் இருந்தே மறைந்துவிட்டது. பொருளும் அழிந்து, பெயரும் அழிந்த ஒரு சோகச் சொல் இது. ஆனால், ஒரு காலத்தில் இது வீரத்தின் குறியீடு; விசையின் குறியீடு; பரங்கியர் படையை நடுங்கச்செய்த தென்தமிழகத்துப் போர்முறையின் குறியீடு.
‘வளரி’ ஓர் எறியாயுதம். கரையில் இருந்து எறிந்தால், தண்ணீரின் மீது சீவிச் செல்லும் சித்துக்கல்போல, காற்றின் மீது சீவிச் சென்று இலக்கைத் தாக்கும். நின்ற இடத்தில் இருந்து எதிரியைத் தாக்கப் பயன்பட்ட வேல்கம்பு, அதுவே தூரத்தில் சென்று தாக்கவேண்டிய தேவை வந்தபோது, பாய்ந்து செல்லும் குத்தீட்டியாகப் பரிணமித்தது. கைவீச்சு வரை போரிட முடிந்த ஆயுதம், இப்போது கையெறியும் தூரம் வரைப் போய்த் தாக்கும் பலமான ஆயுதமாக மாறியது. நவீன காலத்தில் துப்பாக்கி, ஏவுகணை ஆனதைப்போல.
வாள், வளரியானதும் அப்படித்தான். நின்ற இடத்தில் இருந்து எதிரியை வீழ்த்தப் பயன்பட்ட வாள், தூரத்தில் இருக்கும் எதிரியைத் தாக்கவேண்டிய தேவை வந்தது. காற்றில் சுழன்று பறக்கும் வடிவத்துக்கு மாறியது. நீண்ட வாள், பிறை நிலவாக வளைந்தது. தன்னை தாங்கிப் பிடிக்கும் கைப்பிடியை, வாளின் நுனி வளைந்து வந்து பார்த்தபோது, வளரி ஆனது.
வளரி வீசப்படும்போது விசை குறையக் கூடாது; ஆயுதத்தின் எடை கூடினால், நீண்ட தூரம் வீச முடியாது. குறைந்தால், தாக்கும் திறன் குறையும். அதைவிட முக்கியம், ஓர் இரும்புத்துண்டு காற்றில் சுழன்றபடி இலக்கு நோக்கிச் செல்வதற்கு, அடிப்படையான எடைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ஆயுதத்தின் மையத்தில் நிலைகொண்டுள்ள எடை, அதன் சமநிலையைக் குவித்து, விசையின் பாதையில் துல்லியமாகப் பயணிக்க உதவுகிறது. வளரியில் துலங்கும் தொழில் நுட்பம், இம்மண்ணுக்குரிய தனித்த சாதனைகளில் ஒன்று.
இந்த ஆயுதத்தைப் பற்றி 17, 18-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற குறிப்புகள் பிரிட்டிஷ் ஆவணங்களில் எழுதப்பட்டன. வேறெங்கும் இல்லாத ஓர் ஆயுதத்தைப் பற்றிய ஆச்சர்யமும் கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தை வெட்டிச்செல்லும் அதிர்ச்சியும் கலந்த பதிவுகளாக அவ்வெழுத்துக்கள் இருக்கின்றன.
‘இந்த ஆயுதம் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்கள் பயன்படுத்தும் பூமராங் போன்றது. உலகில் இவ்விரு மக்கள்தான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்துகின்றனர்’ என்று முதலில் கருதிய ஐரோப்பியர்கள், பின்னர் இக்கருத்தை மாற்றிக் கொண்டனர். 18-ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைப் பற்றி ஆய்வுசெய்த சவைல்ட் கென்ட் தனது நூலில், ‘இந்தக் கருவி ஆசியப் பகுதியில் இருந்து முதன்முதலாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தங்கியவர் களால் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்கிறார்.
கிழக்கிந்திய கம்பெனிப் படையில், பல முக்கியப் பொறுப்புகளை வகித்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ், தனது ராணுவ நினைவுகளில் வளரியைப் பற்றி எழுதுகிறார். கும்பெனிக்கு சிவகங்கைச் சீமையோடு நல்லுறவு இருந்த காலத்தில், சின்ன மருதுவிடம் தான் வளரி வீசக் கற்றுக்கொண்டதையும், உலகில் வேறு எங்கும் இல்லாத இந்தக் கருவி, திறமையுடைய வர்கள் வீசினால், நூறு கஜ தூரத்துக்குச் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் என்று பதிவு செய்கிறார்.
பின்னர், வரலாற்றின் திசை மாறியது, கும்பெனி படை போர்க்களத்தில் சிவகங்கைப் படையையும், இதர பாளையத்தின் படை களையும் எதிர்கொண்டது. அரண்மனை வளாகத்தில் சொல்லிக் கொடுக்கும்போது பார்த்த அதே வளரியை, வெல்ஸ் போர்க் களத்தில் எதிரியின் ஆயுதமாக எதிர்கொள்ள நேர்ந்தது. கண்களால் பார்க்க முடிந்த ஒரு கருவி, ஓசையால் மட்டுமே உணர முடிகிற கருவியாக மாறிய விந்தையை அவரால் நம்ப முடியவில்லை.
காற்றைக் கிழிக்கும் வளரியின் ஓசை தென்தமிழகம் முழுவதும் மேலெழும்பியது. வைகையின் நாணல்களுக்கு இடையே சீறிவரும் வளரிகள், கும்பெனி படையை நிலைகுலையச் செய்தன. கும்பெனியின் தளபதிகள் அதிகம் பயந்த ஆயுதமாக வளரி மாறியது. பாளையக்காரர்களின் யுத்தத்தில், குறிப்பாக கெரில்லா முறையிலான மறைந்து இருந்து தாக்கும் போர்முறைக்கு ஏற்ற ஆயுதமாக வளரியே இருந்தது. நிலமெங்கும் தலைகளை அறுத்துக்கொண்டே வளரிகள் கீழிறங்கின.
பாளையக்காரர்களின் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன், கும்பெனி நிர்வாகம் 1801-ம் ஆண்டு ஆயுதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, `மக்கள் யாராவது போராயுதங்களை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், பொதுவெளியில் தூக்கிலிடப்படுவார்கள்’ என்று அறிவிக்கப் பட்டது. எல்லா வகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பாளையக்காரர்கள், போர் வீரர்கள், குடிமக்கள் எல்லோரும் ஆயுதங்கள் நீக்கப்பட்ட மனிதர்கள் ஆக்கப் பட்டார்கள். அப்பொழுது கும்பெனியால் கைப்பற்றப்பட்டவை, 22 ஆயிரம் வளரிகள்.
தென்தமிழகம் முழுவதும் இருந்த வளரிகளை மொத்தமாகக் கைப்பற்றி அழித்தொழித்தனர். வளரி என்ற ஆயுதத்தின் நினைவுகள்கூட இம்மண்ணில் மிஞ்சக் கூடாது என்பதில் ஆக்கிரமிப்பாளர்கள் உறுதியுடன் இருந்தனர். வளரி வீசிய கைகள் வெறும் கைகள் ஆக்கப்பட்டன. கரங்களில் இருந்து நீங்கிய ஆயுதம், நாளடைவில் மக்களின் நினைவுகளில் இருந்தும் நீங்கத் தொடங்கியது.
100 ஆண்டுகள் உருண்டோடின. முன்பு எங்கும் இருந்த வளரியை ராணுவத்தினர் வியப்போடு பார்த்ததைப்போல, இப்போது எங்கோ இருக்கும் வளரியை மானுடவிய லாளர்கள் தேடிப் பிடித்து ஆய்வுசெய்தனர். மதுரை மாவட்டத்தில் 1883-ம் ஆண்டு வளரி பயன்படுத்துவதை, தான் நேரில் பார்த்ததாக ஆர்.ப்ரூஸ்பூட் என்ற ஆங்கிலேயர் பதிவுசெய்துள்ளார். வளரி பயன்படுத்தப் பட்டதைப் பற்றிய ஆங்கிலேயரின் கடைசிப் பதிவு இதுவாகத்தான் இருக்கக்கூடும்.
ஆயுதத் தடைச் சட்டம் கொண்டு வந்த 200-வது ஆண்டு, அதாவது, 2001-ம் ஆண்டு நான் ‘காவல் கோட்டம்’ எழுதிக்கொண்டிருக்கும் போது, நாவலின் தேவைக்காக வளரியைத் தேடி பயணத்தைத் தொடங்கினேன். இம்மண்ணில் வெகுமக்கள் பயன்படுத்திய, சிறப்புமிக்க ஒரு போர் ஆயுதத்தைப் பற்றிய தடயங்களையும் விவரங்களையும் கதைகளையும் தேடிய புறப்பாடு அது.
அரசு அருங்காட்சியகத்தில் கண்ணாடி அடைப்புக்குள் இருக்கும் வளரிகளை, பல ஊர்களில் போய்ப் பார்த்தேன். இன்று தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் எஞ்சியிருப்பது 20-க்கும் குறைவான வளரிகள் மட்டுமே என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் மரம் மற்றும் தந்தத்தாலான வளரிகளே கணிசமானவை. அதாவது, அரண்மனைகளில் அலங்காரப் பொருளாகப் பயன்பட்ட வளரிகளே எஞ்சியுள்ளன.
தென்னகம் முழுவதும், தனித்ததோர் ஆயுதத்தை மொத்தச் சமூகமும் முழுமுற்றாகக் கைவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. கும்பெனி படையின் வலிமை இங்கிருந்த பலவீனத்தின் மீது கட்டப்பட்டது. அதற்கு சமூகத்தின் அடியாழம் வரை போய் அழித்தொழிக்கும் முழுமுற்றான வல்லமை இருந்திருக்க முடியாது. தேவை சார்ந்து தொடங்கும் தேடல், ஒரு கட்டத்தில் வரலாற்று நியாயங் களால் உந்தித் தள்ளப்படும். அப்படி நான் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தபோது, எங்கு போனாலும் வளரியைப் பற்றிப் பேசுவது ஓர் இயல்பாகவே மாறியது. ஓர் அரங்கக் கூட்டத்தில் பேசி முடித்து வெளியேறியபோது, கூட்டம் கேட்க வந்த தோழர்கள் தங்கராஜுவும் மகாராஜனும் ‘‘எத்தனை வருஷமா இதைத் தேடிக்கிட்டு இருக்கே? நாளைக்கு வா… உன்னைய ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறோம்” என்று சொல்லிச் சென்றனர்.
மறுநாள், மதுரை மாவட்டத்தில் கோவிலாங்குளம் என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஒற்றை அறை மட்டும் தனித்து இருக்கும் ஓர் இடம் நோக்கி என்னை அழைத்துக்கொண்டு போய், “இது பட்டசாமி கோயில்’’ என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தார்கள். அப்பொழுது பார்த்த காட்சி எனக்குள் ஏற்படுத்திய திகைப்பு இன்று வரை மறையவில்லை. என் கண்களுக்கு முன்பு சுமார் 200 வளரிகள். “இந்த பட்டசாமிக்கு வளரியைத்தான் படையலிட வேண்டும். எனவே, ஒவ்வோர் ஆண்டும் வளரியைப் படையலிடுகிறோம்” என்று சொன்னார்கள்.
மரம் உயிரற்றுப்போனால், ‘பட்டமரம்’ என்று சொல்வதைப்போல… மனிதன் இறந்துபோனால், பட்டுப்போனவன் ஆகிறான். அவனே ஊருக்கும் சக மனிதனுக்கும் நல்லது செய்தவனாக வாழ்ந்திருந்தால், பட்டசாமியாக நினைக்கப்பட்டு வழிபடப்படுகிறான். இந்த பட்டசாமி பெரும் போர் வீரனாக, வளரியைப் பயன்படுத்துவதில் மகா திறமைசாலியாக இருந்திருக்க வேண்டும். எனவே, அவன் நினைவாக, அவன் மிகவும் நேசித்த அல்லது அவனது அடையாளமான வளரியைப் படையலிட்டு அவனை மக்கள் வழிபடுகின்றனர்.
கிழக்கிந்தியப் படையின் ராணுவக் குறிப்புகளும், மானுடவியலாளர்களின் ஆய்வுத் தொகுப்புகளும் சொல்ல மறந்த ஓராயிரம் கதைகளை, அந்தச் சிறிய பீடத்தைச் சுற்றிக் குவிந்துகிடக்கும் வளரிகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அங்கு கிடப்பவை காற்றை அல்ல… காலத்தைக் கிழித்து வந்துகிடக்கும் வளரிகள். அவை ஆங்கிலேயனின் ஆயுதத் தடைச் சட்டத்தின் தலையைச் சீவிய அடையாளங்களைச் சுமந்துகிடக்கின்றன. எவ்வளவு அடக்குமுறை களானாலும் மக்கள் தங்களின் வரலாற்று நினைவுகளை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். எந்தச் சூழலிலும் அழிந்து விடாமல், தங்களது வாழ்வுக்குள் வைத்து கடத்தும் வல்லமை மக்களுக்கு உண்டு. ஏனென்றால், எல்லா காலங்களிலும் வரலாற்றின் நாயகர்கள் தமிழர்களே
காவல் கோட்டம் என்ற அறிய வரலாற்று நூலை எழுதியவர் தான் இந்த சு. வெங்கடேசன் .
2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட நூல். மிக நெடிய ஆழமான தமிழரின் வரலாற்று புத்தகம். அதனை முழுமையாக படிக்க இயலாத அளவிற்கு ஆழமான வரலாற்று ஏடுகள்
தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புத்தகத்தின் சில ஏடுகளை கதையாகக் கொண்டது.
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:
“ நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்.
வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம் !
பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன மருதுவிடமிருந்து தான் வளரி(BOOMERANG) வீச கற்றுக்
கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற
நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் “வெல்ஷ்”.
1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக
தமிழர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.
அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள்
வளரியையே பயன்படுத்தினர், பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர்.
வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம்
என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த
ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது,
இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில்
வளரி தாங்கியிருப்பார்
தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூசைக்குரிய ஆயுதமாக இருக்கிறது.
சு.வெங்கடேசன்
விகடனில் வந்த கட்டுரை
நன்றி விகடன்