புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை போலிஸார் கைது செய்து விசாரணை செய்வது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளையும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியபோதே இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்திருந்தார். வடமாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலைமையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைதடியில் உள்ள வடமாகாண சபையின் செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பான இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். “ஆவா” குழுவின் செயற்பாடுகளை தன்னால் இரண்டு மாதங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்திருந்தமை தொடர்பாக குறிப்பிட்ட வடமாகாண முதலமைச்சர், அது சாத்தியமாகுமா போலிஸ் அதிகாரிகளுடன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போலிஸ் அதிகாரிகள் அவ்வாறு இல்லை என்றும் எப்படி என்றாலும் குழுவினரும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தாம்தான் முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார் கள்.
“ஆவா” குழுவினர் அதிகளவுக்குச் செயற்படும் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாத் தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள் கொக்குவில், மானிப்பாய் போன்ற பகுதிகளிலேயே இவர்களுடைய செயற்பாடுகள் அதிகளவுக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள். இதன் அடிப்படையில் அந்தப் பகுதிகளில் பொலிஸாரின் நடமாடும் கண்காணிப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், அது ஆவா குழுவினரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் பெருமளவுக்கு வெற்றியளித்திருப்பதால், அந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
தமிழ்ப் பொலிஸாரை அதிகளவுக்கு இணைத்துக்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகவும், இப்போது தமிழ் தெரிந்த பொலிஸாரை அதிகளவுக்குப் பயன்படுத்துவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிலித்தார்கள். மக்களுக்கும் தமக்கும் இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
புலிகள் என சிலரை அடையாளப்படுத்தி கைது செய்வது மற்றும் புனர்வாழ்வுக்குச் சென்று விடுதலையான முன்னாள் போராளிகளை கைது செய்வது போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் இங்கு தெரிவித்ததை பொலிஸ் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டார்கள்.