மலையகம் என்றவுடன் அனைவருக்கும் பச்சைப்பசேலெனக் காட்சி தரும் பிரதேசமும் தேயிலைச் செடிகளின் அழகுமே நினைவிற்கு வரும். அந்தப்பச்சை நிறத்துக்குள் எத்தனையாயிரம் தொழிலாளர்களின் இரத்தமும், வேர்வையும் பொதிந்துபோய்க் கிடக்கின்றன என்பதை எவரும் கவனத்தில்க் கொள்வதில்லை. எமது நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும், முதுகெலும்பாகவும் பார்க்கப்படும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகியும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதென்பது வெறும் கனவாகவே காணப்படுகிறது. அவ்வாறானதொரு துர்பாக்கிய நிலை இன்றுவரை தொடர்ந்துகொண்டுள்ளது. எனினும் கிடைக்கும் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக் கொழுந்து பறித்து நாட்டின் பொருளாதாரத்திற்காக அவர்கள் பாடுபடுகின்றனர்.
மலையக மக்களின் பிரச்சனைகளை உற்றுநோக்கினால் வீடு மற்றும் காணி உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சனைகளை அடுக்கடுக்காக கூறிக்கொண்டே போகமுடியும். இவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகக் காணப்படுகிறது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் கூட மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் கிடைப்பது வெறும் 730 ரூபாய் சம்பளம் மாத்திரமே.
இவ்வாறு தொடர்சியாக ஏமாற்றத்திற்குள்ளாகிவரும் தோட்டத் தொழிலாளர்கள் விலைவாசி உயர்வை சமாளிக்கமுடியாது மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்க புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2013 ஆம் ஆண்டில் 4 பேரைக்கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் தமது தேவைகளை பூர்த்தி செய்ய 47,600 ரூபாய் தேவையென குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நாளாந்த சம்பளமான 730 ரூபாய் என்பது அவர்களுக்கு எவ்வாறு போதுமானதாக அமையும் என்ற கேள்வியை எழுப்பிநிக்கிறது. தேயிலைக் கொழுந்து பறிக்கும்போது குளவிக்கொட்டுக்கும், அட்டைக்கடிக்கும் இலக்காகும் தொழிலாளர்கள் வைத்தியசாலை செல்ல வேண்டிய தேவைகள் அதிகம் காணப்படுகிறது. அவ்வாறு, செல்லும்போது சம்பள இழப்பேற்படுகிறது. இதேவேளை நடப்பாண்டின் விலைவாசி அதிகரிப்பின் காரணமாக குடும்பம் ஒன்றின் ஒருநேர உணவிற்கு மாத்திரம் குறைந்தது 400 ரூபாய் வரையில் செலவாகும் நிலையும் காணப்படுகிறது. எனவே இவற்றையெல்லாம் வைத்து ஆராயும்போது குறித்த 730 ரூபாயானது போதுமானதாக அமைந்துவிடாது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1998 ஆம் ஆண்டு தொடக்கம் கூட்டு ஒப்பந்த முறைமையே தீர்மானித்துவருகிறது. அதன்படி இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் மூன்று தொழிற்சங்கங்களும் இணைந்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது வழமை. அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்திருந்த காலப்பகுதியில் 1000 ரூபாய் சம்பளக் கோரிக்கை பலதரப்பினராலும் முன்வைக்கப்பட ஆரம்பித்திருந்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் தேவைக்காக தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட அந்த 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை ஏனைய கட்சிகளும், தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டமையினால் குறித்த கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் சார்பில் 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கைச்சாத்திடப்பட வேண்டிய புதிய கூட்டு ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டது. இந்நிலையில் 2016 செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக 23 நாட்கள் வரை முன்னெடுத்த போராட்டத்தின் அழுத்தத்தை தொடர்ந்து 2016 ஒக்டோபர் 18 ஆம் திகதி வெறும் 110 ரூபாய் அதிகரிப்புடன், 730 ரூபாய் நாள்ச் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ்நாட்டிலும் ஆதரவு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பளப் பிரச்சனையை கூட்டு ஒப்பந்த முறைக்கு முன் மற்றும் பின் என்று பிரித்து ஆழமாகப் பார்த்தால் கூட்டு ஒப்பந்த முறை உருவாக்கப்பட முன்னரும், கூட்டு ஒப்பந்த முறை உருவாக்கப்பட்ட பின்னரும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையில் சிறியளவிலான சம்பள அதிகரிப்பை கூட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தே பெற்றுக்கொண்டனர் என்பதை புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு போராடாது இருந்திருந்தால் தற்போது 730 ரூபாய் வரையில் சம்பளம் உயர்ந்திருக்குமா எனச் சந்தேகம் கொள்வது தவிர்க்கமுடியாததாகும். தற்போதைய மலையக அரசியலை உற்று நோக்கினால் அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பல தமிழர்கள் உள்ளனர் ஆனால் அவர்கள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் மட்டுமே அப்பதவிகளில் இருக்கின்றனரே தவிர இந்த சம்பள பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருபோது முழுமூச்சாக செயற்பட எத்தனித்திருக்கவில்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் சம்பளப் பிரச்சனையை வைத்து தமது சுயநல அரசியலை முன்னெடுக்க மாறிமாறி குற்றம்சாட்டுவதை மட்டுமே செய்கின்றனர். மக்களது பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தான்தோன்றித்தனமாக செயற்படும் காரணத்தினால் தான் இத்தனை காலமாக தொழிலார்கள் ஏமாற்றப்படுகின்றனர். அவ்வாறான அரசியல்வாதிகள் தோட்டத் தொழிலாளர்களை அடிமைப்படுத்தப்படும் நோக்கிலேயே செயற்படுகின்றனர். எனினும் தற்போது பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்கள் அவற்றில் இருந்து மெதுமெதுவாக விழித்து தமக்காக தாமே குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதற்கு சரியானதொரு உதாரணமாக கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம். எனினும் சம்பள பிரச்சனைகள் தீர்வதாக தெரியவில்லை.
இதேநேரம், அனேகமான தோட்டப் பகுதிகளில் தற்போதைய 730 ரூபாய் சம்பளமானது அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் அடிப்படைச் சம்பளமான 500 ரூபாயும் அதற்கு மேலதிகமான கொடுப்பனவும் மாத்திரமே தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது என்பது நிதர்சனம். அதேபோல், நாள் ஒன்றிற்கு 18 கிலோ தேயிலைக் கொழுந்து பறித்தால் மாத்திரமே முழுமையான சம்பளம் வழங்கப்படும் என்று கூறி அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதைப்போல் தொழிலாளர்களின் உழைப்பு தோட்டக் கம்பனிகளினால் உறிஞ்சப்படுகிறது. 18 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கப்படாத சந்தர்ப்பத்தில் மேலதிக கொடுப்பனவான 140 ரூபாய் தரப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றையெல்லாம் எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டும் அவை தீர்த்துவைக்கப்படவில்லை.
அத்துடன், 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளம் இதுவரை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டவில்லை. அது தோட்டக் கம்பனிகளுக்கு கொள்ளை இலாபமாகவே அமைந்திருந்தது. இப்படி பல்வேறு அநியாயங்கள் மேற்றுகொள்ளப்படும் நிலையில் முதலாளிமார் சம்மேளனம் தமது தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஒரு விம்பத்தை காட்டிக்கொண்டு அதிகமாக இலாபமீட்டியும் தொழிலாளர்கள் கேட்கும் சம்பளத்தை வழங்கமறுத்து அசட்டைசெய்து வருகின்றது. இந்நிலையிலேயே எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருக்கிறது.
இதேவேளை, சம்பள உயர்வு வழங்கக்கோரி கடந்த 23 ஆம் திகதி தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்தொகை மக்கள் கலந்துகொண்டு சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு பாரியதொரு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். இந்தப் பேரணியில் அரசியல்வாதிகள் வழமைபோன்று தமக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்திருந்தாலும் குறித்த பேரணி முழுமையாக ஒரு கட்சி சார்ந்ததாக அல்லாமல் மக்களின் சக்தியை காட்டும் வகையில் அமைந்திருந்தமை வரவேற்கத்தக்கது. ஏனெனில், 2016 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு தனியார்துறை ஒதுக்கீட்டில் மாதாந்தம் 2500 ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கோரி கொழும்பு – கோட்டையில் இதே தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட சத்தியாகிரக போராட்டமானது “செல்பி” போராட்டமாக மாறியிருந்த நிலையில் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
இவற்றைத் தாண்டி இம்முறையாவது 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மீண்டும் மலையக மக்களை ஆட்கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வாறான சாதகநிலை ஏற்படுமா என்பது சந்தேகம் மிகுந்ததாகவே காணப்படுகிறது. எனவே இம்முறையேனும் உழைப்பிற்கேற்ற சம்பளத்தைக் கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்க அரசியல் தலைமைகளும் அவர்களின் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் ஏனெனில் இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய சம்பள உயர்வு தொடர்பிலான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை ஆகவே அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் தொழில் அமைச்சின் ஊடாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுக்களை முனனெடுத்து சம்பள அதிகரிப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும்.
அப்படியில்லாமல் இம்முறையும் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவார்களாயின் கூட்டு ஒப்பந்த முறைமையை ஒழித்து 1998 ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது போன்று அல்லது சாதாரணமாக அரசாங்கத்தால் சம்பள நிர்ணய சபை அல்லது பெருந்தோட்ட மற்றும் தொழில் அமைச்சினால் சம்பளம் வழங்கக்கூடிய முறைமையை கொண்டுவருவதற்காக மலையக அரசியல்வாதிகள் காத்திரமான முறையில் செயற்பட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அது நடந்தால் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றிவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கான நிரந்த தீர்வு ஒன்றை வழங்குவதற்கான சாத்தியம் ஏற்படலாம் எனினும் அதனை அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது ஐயமே.
#பிரகாஸ்
21/10/2018
- மூலம் – தினக்குரல்