வடமாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் காவற்துறைப் பாதுகாப்பு கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
ஏலவே வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர் எஸ் தவராசா ஆகியோரே காவற்துறைப் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காவற்துறை மா அதிபருக்கு இது தொடர்பான கடிதங்களை அனுப்பியிருந்தனர்.
ஆனால் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இவ்வாறு காவற்துறை பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு அதில் தோல்வி அடைந்த இவர் போனஸ் ஆசனத்தில் உறுப்பினராகி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஸ்மின், அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கிக்கு வைத்திருக்கிறார் என மாகாணசபைக்குள் கருத்து ஒன்றினை தெரிவித்ததுடன் அக்கைத்துப்பாக்கிக்கான ஆதாரத்தை குறித்த மாகாண சபை உறுப்பினரால் இறுதிவரை காண்பிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் வடமாகாணசபையின பதவிக்காலம் முடிந்ததன் பின்னரும் அய்யூப் அஸ்மீன் காவற்துறை பாதுகாப்பை கோரியமை தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும் மாகாண முன்னாள் முதல்வர்கள் காவற்துறைப் பாதுகாப்பிற்கு விண்ணப்பிப்பது சாதாரண நடைமுறைதான் ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் காவற்துறை பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.அதே போன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காவற்துறை பாதுகாப்பை பெற இடமுண்டு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் காவற்துறை பாதுகாப்பு வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கும் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது