ராணுவ வீரர்களை கல்வீசித் தாக்குபவர்களையும் தீவிரவாதி களாகவே நினைப்போம் என்று ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று 72-வது ஆண்டு காலாட்படை தின விழா நடைபெற்றது. விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஜம்மு-காஷ்மீரின் அனந்த் நாக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ராஜேந்திர சிங் மீது சிலர் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில் அந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
கல்வீசித் தாக்குபவர்களையும் நாங்கள் தீவிரவாதிகளாகவே நினைப்போம். கல்வீசித் தாக்கு தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை ராணுவம் எடுக் கும். ராணுவ வீரர்கள் மீது கல்வீசித் தாக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான நிதியுதவியை பாகிஸ்தான் செய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பதற்றத்தை நீடிக்கச் செய்யத் தேவையான அனைத்தையும் பாகிஸ்தான் செய்து வருகிறது.
இந்தப் பகுதியில் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று பாகிஸ் தானுக்கு நன்றாகத் தெரியும். இருந்தபோதும் தீவிரவாதத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் தூண்டி வருகிறது. தீவிரவாதிகள் ஊடுரு வல் போன்ற பல செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீரின் வளர்ச்சியைத் தடுக்க பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் எதையும் சமாளிக்கும் திறமையை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெற்றுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியின்போது போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி நினை விடத்தில் ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தெற்கு காஷ்மீரிலுள்ள அனந்த் நாக் அருகே தேசிய நெடுஞ்சாலை-44-ல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகளின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ராஜேந்திர சிங் மீது கடந்த 25-ம் தேதி சிலர் கல்வீசித் தாக்கினர். இதில் காயமடைந்த ராஜேந்திர சிங் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு இறந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.