இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது, சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருப்பதாக யூகங்கள் எழுதிருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சே இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, இந்திய அரசு இதில் தலையிட்டு ராஜபக்சேவின் சட்டவிரோத நியமனத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இலங்கை அதிபர் செய்துள்ள இந்த அதிரடி மாற்றம் இந்துமாக்கடலில் மேலாதிக்கம் செய்ய முற்பட்டுள்ள சீனாவின் தூண்டுதலில் தான் நடந்திருக்கிறது என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இலங்கை அதிபரின் நடவடிக்கையை இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.