திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச குடியேறிகள் அக்டோபர் 09 அன்று கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலி ஆதார் அட்டைகள் தயாரித்து கொடுத்த பீஹார் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரவிசங்கர் சிங் என்ற அந்நபர் வெளிமாநிலங்களில் பணியாற்றி வந்துள்ளார். இவ்விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ராம்சிவ் வர்மா மற்றும் சவுரிமுத்து கொடுத்த தகவலின் அடிப்படையில், இவரை திருப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வங்கதேச குடியேறிகள் 3 முதல் 13 ஆண்டுகள் வரை திருப்பூரில் வசித்து வந்ததாகவும் ஒருவருக்கு 10,000 ரூபாய் என ஆதார் அட்டைக்கு கொடுத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பின் தகவல் தெரிவிக்கின்றது.
இதே போல், பெங்களூருவிலிருந்து சட்டவிரோதமான முறையில் வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேச குடியேறிகள் அக்டோபர் 15 அன்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு விரைவு ரயில் மூலம் கவுகாத்தி சென்ற இந்த வங்கதேசிகள், திரிபுரா வழியாக மீண்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடிவெடுத்திருக்கின்றனர். இந்த திட்டத்தில் அகர்தலா(திரிபுரா) செல்ல கஞ்சென்ஜங்கா விரைவு ரயிலுக்கு காத்திருந்த போது இவர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தில் நிலவும் வறுமை நிலையினால் இந்தியாவுக்குள் வந்த இவர்கள், தொழில்நுட்ப நகராக அறியப்படும் பெங்களூருவில் கூலிகளாகவும் கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்திய மாநிலங்களான அசாம் , மேற்கு வங்காளம், திரிபுரா, மிசோரம் , மேகாலயா உள்ளிட்டவை காடுகள், ஆறுகள், மலைகள் என 4,156 கி.மீ. எல்லைப்பகுதியை வங்கதேசத்துடன் கொண்டிருக்கின்றது.