தென்கொரியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஜெஜு என்ற தீவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ஏமன் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ‘அகதி அந்தஸ்து’ வழங்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. அதே சமயம், அவர்கள் அனைவரும் தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதியை தென்கொரியாவின் நீதி அமைச்சகம் வழங்கியுள்ளது. தஞ்சம் கோரிய 481 ஏமனியர்களில் 362 பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நிராகரிக்கப்பட்ட 34 பேர் குற்றப்பதிவுகள் கொண்டவர்கள் அல்லது அவர்கள் பொருளாதார தேவைகளுக்காக தஞ்சம் கோரியவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற 85 பேரின் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
உலக நாடுகள் பலவற்றின் தலையீட்டுடன் நீண்டு வரும் ஏமன் உள்நாட்டுப் போரில், பஞ்சத்தினாலும் மரணங்கள் ஏற்படுகின்றன. ஏமனின் சரிபாதியான மக்கள் தொகை, அதாவது 1 கோடியே 40 லட்சம் மக்கள் இப்பஞ்சத்தில் சிக்கும் சூழலில் உள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழலின் அடிப்படையில் 387 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதி, ஏமனில் நிலைமை சீரடையும் பட்சத்தில் ரத்து செய்யப்படும் என்பதையும் தென் கொரிய நீதி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.