நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் வர வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்று, நவுரு மற்றும் மனுஸ்தீவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஆண்டுதோறும் 150 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக நியூசிலாந்து அரசு நீண்டகாலமாக தெரிவித்து வருகின்றது. நியூசிலாந்தில் குடியுரிமைப் பெற்ற மக்கள், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே உள்ள பிரத்யேக முறையின் கீழ் ஆஸ்திரேலியாவில் வாழ்நாள் முழுதும் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியேற்ற அனுமதிக்கும் பட்சத்தில், இந்த பிரத்யேக முறையின் கீழ் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக்கூடும் என தற்போதைய அரசு அஞ்சுகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மற்றும் தொழில்முறை விசாவில் வருவதுக்கு கூட அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிப்பது தேவையற்றது, ஆஸ்திரேலியா நலன்களுக்கு எதிரானது என கருதுகின்றது எதிர்கட்சியான லேபர் கட்சி.
நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடைவிதிக்கும் மசோதாவுக்கு தற்போதைய நிலையில் ஆதரவு இல்லை என்பதையும் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் படி 1,250 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனை காரணம் காட்டி வந்த ஆஸ்திரேலிய அரசு, இந்த ஒப்பந்தம் முடிவுற்ற பின்பே மற்றொரு ஒப்பந்தம் குறித்து சிந்திக்க முடியும் என நியூசிலாந்தின் சலுகையை கிடப்பில் போட்டு வந்தது.