பனை மரங்களை பிடுங்கி
கித்துல் மரங்களை விதைப்பாய்
என் பூர்வீக வீடுகளை சிதைத்து
இராணுவ முகாங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்
ஆலமரங்களை வீழ்த்தி
வெள்ளரச மரங்களை நடுவாய்
என் ஆதிச் சிவனை விரட்டி
புத்தரை குடியேற்றி
எனை பயங்கரவாதி என்பாய்
எனதுடலை நிர்வாணமாக்கி
இராணுவச் சீருடையை போர்த்துவாய்
எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து
உனது வெறிச் சின்னங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்
பிழையாய் எழுதியென் மொழியை அழித்து
உனது மொழியை திணிப்பாய்
எனது பாடல்களை அழித்து
புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி
எனை பயங்கரவாதி என்பாய்
எனது நிலங்களை அபகரித்து
உனது பெயர்களை சூட்டுவாய்
எல்லைகளை மெல்ல மெல்ல அரித்துண்டு
எனது தேச வரைபடத்தை
வரையுமென் கைகளுக்கு விலங்கிட்டு
எனை பயங்கரவாதி என்பாய்
ஆம், சிங்களத் தோழனே!
குழந்தைகளின் நிலத்தை காப்பவன்
பயங்கரவாதி எனில்
குழந்தைகளின் பூக்களை சேமிப்பவன்
பயங்கரவாதி எனில்
நான் பயங்கரவாதிதான்
இது பயங்கரவாதிகளின் பூமிதான்.
¤
■தீபச்செல்வன்.