கந்தகம் கலந்த மண்ணில்
காந்தளின் உயிராய் வந்து
கல்லறை வீரம் சொன்ன
கார்த்திகை தாயே வாடி..
எங்களின் வீர மாதம்
வெற்றியின் தீர மாதம்
வியாபக சூர மாதம்
வீரத்து வார மாதம்
சுந்தர மண்ணில் உந்தன்
சுடர்ப் பதம் பதிகையிலே
நெற்பயிர் முளை எடுத்து
நெஞ்சோரம் மணக்குதடி
மானத்தின் வீர மாதம்
மரணத்தின் தீர மாதம்
வேகத்தின் சூர மாதம்
ஈழத்தின் வார மாதம்
வன்னியின் வாழ்வு தன்னை
வையகம் உணர செய்யும்
உன்னத பணி எடுத்தாய்
உருவகம் கூட்டிக் கொண்டாய்
யாகமே செய்யும் மாதம்
சோகமே நீங்கும் மாதம்
தாகமே கொள்ளும் மாதம்
தலைக்குரல் கேட்கும் மாதம்
எண்ணிய கருமம் எல்லாம்
இனிதுற நடக்க வேண்டும்
உன்னையே நம்பித் தாயே
உயிர் யாகம் செய்த பூமி
வாழ்வினை காத்த மாதம்
வையகம் போற்று மாதம்
ஊழ்வினை அறுத்த மாதம்
உத்தமத்து வீர மாதம்
கல்லறைக் கதவை வந்து
காவியம் தட்டும் வேளை
மண்ணறை மீட்டு எந்தன்
மனவறை தங்க செய்வாய்
இருகரம் கூப்பி உன்னை
இலட்சிய தாகம் வெல்ல
வரும் பகை போக்கி எந்தன்
மண்ணிலே நாமும் வாழ
தரும் ஒரு வரத்தில் உண்டு
தமிழதன் வலிமை வாழ்வு
வரும் இந்த மாதம் தன்னில்
உயிருடன் உணர்வு கொள்வோம்..
– கவிப்புயல் சரண்.