மேஜர் காந்தரூபன் கனவுச்சோலை
மெல்லத்துளிர் விட்ட அறிவுச்சோலை
தாய்தந்தையாகித் தாங்கிடும் சோலை
தலைவர் எண்ணத்தின் வண்ணச்சோலை.
ஆண்குழந்தைகள் அகமகிழ்ந்தாடிடும்
அன்னை இல்லமே அறிவுச்சோலை
அனைத்து உறவினையும் அள்ளிக்கொடுத்து
அணைத்து வளர்த்திடும் இன்பச்சோலை.
கல்வியறிவுடன் கலை பண்பாடுகளும்
தெள்ளத்தெளிவுடன் ஊட்டிடும் சோலை
கால ஓட்டத்தின் வேகமுணர்ந்து
கணனி தொழில்நுட்பம் கற்பிக்கும் சோலை.
வாழ்க்கைப்பாடமும் வகைவகை நுண்ணறிவும்
வாரி வழங்கி வழிகாட்டும் கூடமே
நாளைய தமிழீழத்தின் நற்பிரஜைகளாக
மாணவர் வளர்ந்திட நல்லெழில் கூட்டுமே.
சிற்பிகளாகி சிகரம் தொட்டிடும்
தேசக் குழந்தைகள் இவர்களன்றோ
பற்பல துறைகளில் பட்டங்கள் பெற்றே
பாங்குடன் நிமிர்ந்திடும் தளிர்களன்றோ.
திசை மாறித் தவித்த சின்னப்பூக்கள் – பல்
திசையிருந்து வந்து ஒன்றான தேனிக்கள்
இசையிற் கூடிய புதிய ராகங்கள்
இசை பெற வளர்ந்திடும இளைய ஞானிகள்.
விடியலின் ஒளிக்கீற்றைத் தேடி
விரைந்திடும் இவர்களின் கால்கள்
விடிந்திடும் எங்கள் தாய்நிலத்தில்
ஒளிபெறும் இவர்களின் வாழ்வும்.
– கலைமகள் –